வாட்டம் போக்கும் வட்டமலை முருகன்



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

                            கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு என்பார்கள். கலி என்றால் வறுமை; கிலி என்றால் பயம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவும் குகனாகவும் பற்றற்ற வாழ்வின் பக்குவத்தை உணர்த்தும் தண்டபாணியாகவும் இல்வாழ்க்கைக்குத் தேவையான நலம், பலம், வளம் மூன்றையும் தருகின்ற கல்யாண சுப்ரமணியராகவும் அழகு, அறிவு, வலிவு, புகழ், உறுதி, உயர்வு தரும் ஆறுமுகனாகவும், ஞான மார்க்கத்திற்கு வழி காட்டும் கோவணாண்டியாகவும் பக்தர்களின் இதயக் கமலத்தில் ராஜாதி ராஜனாகவும் விளங்கி வரும் வேலாயுதசுவாமியின் ஆலயம் வட்டமலை என்றழைக்கப்படும் சந்திரகிரி மீது தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் பழமையான திருக்கோயில் இருந்த இடத்தில் பக்தர்களின் பக்தி வெளிப்பாடாகப் பல ஆண்டுகால பெருமுயற்சியால் முற்றிலும் புதிதாகவும் சிற்ப ஆகம நெறிப்படியும் பழநி ஆண்டவர் சந்நதி போன்றே மேற்கு நோக்கியவாறு மிகப் பொலிவுடன், அழகான குன்றின் மீது இவ்வாலயம் கட்டப்பட்டு உள்ளது.

கலியுக வரதனாகிய வேலாயுத சுவாமியின் இவ்வாலயத்தை கிரிவலம் வரலாம். கருவறை, நடுமண்டபம் சுற்றுப் பிராகார வழியுடன் கூடிய மகாமண்டபம், மூன்று நிலை ராஜ கோபுரம் ஆகியவற்றைக் கொண்ட நேர்த்தியான கோயில். மேலும் கன்னிமூல கணபதி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி, தெய்வானை உடனுறை கல்யாண சுப்ரமண்யர், வனதுர்க்கை அம்மன், இடும்பன், நாகர், நவகிரகங்கள், துவாரபாலகர்கள் ஆகியோரின் திருவுருவங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

250 படிகள் ஏறி, மலை உச்சிக்கு வந்ததும் மேற்கு நோக்கி பிரமாண்டமாய்க் காட்சி தரும் ராஜகோபுரம், மலை ஏறி வந்த களைப்பையே மறந்திடச் செய்கின்றது. அழகே உருவான வண்ண வண்ணச் சுதைச் சிற்பங்கள் கோபுரத்தில் ஆங்காங்கே இடம் பெற்றிருப்பது கண்ணுக்குக் குளுமை.

வாட்டம் போக்கும் இந்த வட்டமலை முருகன், கையில் தண்டம் பிடித்து தண்டாயுதபாணியாக நின்ற திருக்கோலத்தில் பழநி மலையைப் போலவே மேற்கு நோக்கி நின்று அபூர்வ வடிவில் பக்தர்களுக்கு அருள்கிறார். பேச்சிழந்த குழந்தைகளுக்குப் பேச்சாற்றல் அளித்து, அவர்களுடைய குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைக்க வைப்பவர் இவர்.

மருத்துவர்களே திகைக்கும்படி, பெருநோய்கள்கூட, இந்த வேலாயுத சுவாமியின் பார்வை பட்டு நீங்கி இருக்கின்றன. ஜாதகம் பார்த்து முடிந்த திருமணமும் ஓரிரு ஆண்டுகளிலேயே முறிந்து போனாலும், அவ்வாறு பிரிந்து வாழும் தம்பதியர், இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்ல, மனவேறுபாடு நீங்கி அவர்கள் ஒன்றுபடும் அதிசயமும் இங்கே நிகழ்கின்றது.

இந்த ஆலயத்தில் அருளும் ராகுகேது இருவரும் 300 ஆண்டு பழமை வாய்ந்தவர்கள். இங்கு வரும் பக்தர்களின் ராகுகேது தோஷங்கள் மட்டுமன்றி, நவகிரக பீடைகளும் நீங்கி விடுகின்றன. கோயிலின் சுற்றுப்பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இவர்களை தரிசித்தால்
விபத்துகள் நிகழாமலும் அப்படியே நிகழ்ந்தாலும் அதனால் பெரிதும் பாதிக்காதபடியும் காப்பாற்றப்படலாம்; ஏழரைச் சனி பாதிப்பிலிருந்தும் விடுபடலாம்.

இங்கே வன்னி மரம் தலவிருட்சம். இந்த மரத்தை விசேஷ நாட்களில் குழந்தை பாக்கியம் வேண்டி நிறையப் பெண்கள் பக்தி சிரத்தையோடு சுற்றி வந்து வணங்குகிறார்கள். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் மனமொத்து, நல் வாரிசுகள் கண்டு வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே முருகனின் திருவருள் பெற பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதைக் காணலாம்.

முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள்: சிவ பெருமான், அகத்தியர், அருணகிரிநாதர். அகத்தியர் யாத்திரை மேற்கொண்ட போது, ஒருமுறை இத்தலத்திற்கும் வந்தார். அவருடன் நாரதர் உள்ளிட்ட பல முனிவர்களும் வந்தனர். அகத்தியர் முருகப்பெருமானுக்கு பூஜை, நைவேத்தியம் செய்ய நீரின்றித் தவித்தார்.

 முருகப்பெருமான் அகத்தியரின் மனக்குறையை உணர்ந்து அவருக்குக் காட்சி தந்து மலையில் தம் வேலை ஊன்றி ஓர் ஊற்றை உண்டாக்கி நீர் பெருகச் செய்தார். அகத்தியர் அந்த நீரைக் கொண்டு தமது அனுஷ்டானங்களை முடித்தார் என தல வரலாறு கூறுகிறது. முருகனின் கூர் வேலால் ஏற்பட்ட ஊற்று, இன்றும் வற்றாமல் பொங்கிக் கொண்டிருக்கிறது!

இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல கீழிருந்தே விசாலமான படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன. படிகளின் இரு புறமும் பச்சைப் பசேலென்ற இயற்கைத் தோற்றம், கண்களுக்கும் மனசுக்கும் மலர்ச்சியைத் தருகிறது.

நாகதோஷம் அல்லது வேறு ஏதேனும் தோஷங்களால் திருமணத்தடை ஏற்படுவோரும் மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்று விரும்புபவர்களும் இத்தலத்திற்கு வந்து வேலாயுத சுவாமியையும் தனிச் சந்நதியில் அருள்புரியும் வனபத்ரகாளியையும் கல்யாண சுப்ரமணியரையும் வழிபட்டு, கோயிலில் தரப்படும் அருட்பிரசாதத்தை உண்டால் மனம் போல் நல்வாழ்வு அமையும் என்று நம்பிக்கை நிலவுகிறது.

நாமக்கல் மாவட்டம், பவானிகுமாரபாளையத்தின் நுழைவு வாயிலான கத்தேரி கிராமத்தில், எதிர்மேடு வட்டமலை என்ற இந்த முருகனின் ஆலயம், வரும் பக்தர்களின் வாட்டம் போக்கி, வாழ்வில் நாட்டம் கொள்ளச் செய்கிறது.  
மேவானி கோபாலன்