ராமனுக்கு அருளிய விநாயகர்கள்



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

                                    திருமால் பூமியில் ராமபிரானாக அவதரித்த போது விநாயகப் பெருமான் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருக்கு திருவருள் புரிந்துள்ளார். அவ்வாறு ராமருக்கு அருளிய இரு விநாயகர்கள் தரிசனம் இங்கே...

ராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் மேற்கொண்டபோது, ராவணனால் சீதாதேவி இலங்கைக்கு கடத்தப்பட்டாள். சீதையை மீட்க, இலங்கை செல்வதற்கு கடலில் பாலம் அமைப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார், ராமபிரான்.

முதலில் குமரிமுனைக்குச் சென்றார். அங்கிருந்து கடல்வழியாக இலங்கை செல்வது நெடுந்தூரம் என்பதால் வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரைக்கு வந்தார். அப்போது வழியில் தென்பட்ட விநாயகரை வழிபட, அவர் கோடியக்கரையில் உள்ள ஒரு மணல் மேட்டினைக் காட்டி, அருளினாராம். மலைபோல் காட்சி தந்த அந்த மேட்டின் மீது ஏறி நின்று இலங்கையைப் பார்த்தார், ராமர். இலங்காபுரி தெரிந்தது. ராவணனின் மாளிகையும் தெரிந்தது. ஆனால் அது மாளிகையின் பின் பகுதி. அதாவது கொல்லைப்புறம் என்பதை அறிந்தார். பின்புறமாகச் சென்று ஒருவனைத் தாக்குவது வீரனுக்கு அழகல்ல என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டார்.

பிற்காலத்தில், கோடியக்கரைக்குச் செல்லும் பாதையில் ராமருக்கு உதவிய விநாயகருக்கு ஒரு கோயில் அமைத்தார்கள். அந்த விநாயகருக்கு ‘ராமருக்கு இலக்கு அறிவித்த விநாயகர்’ என்று பெயர். அந்த விநாயகர் கோயில் தற்போது வேதாரண்யம் தெற்கு வீதிமுனையில் உள்ளது.
கோடியக்காட்டுப் பகுதியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட ராமர், வழியில் உப்பூர் என்ற சிற்றூரில் எழுந்தருளியுள்ள வெயிலுகந்த விநாயகரை வழிபட்டு தான் மேற்கொண்ட காரியம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார். விநாயகரிடம் ஆசீர்வாதம் பெற்ற ராமபிரான், கந்தமானத பர்வதம் என்ற இடத்திற்கு வந்தார்.

இந்தக் கந்தமானத பர்வதம், ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.  இந்த மலை சந்தன நிறத்தில் காட்சி தருவதால் இப்பெயர் பெற்றது. மேலும், ராமேஸ்வரத்தின் பழைய பெயரே கந்தமானத பர்வதம்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த மலையின் மீது ஏறி ராமபிரான் இலங்கையை நோக்கினார். அவர் பார்வையில் ராவணனின் மாளிகையின் பிரதான முன்புற வாசல் தென்பட்டது. உடனே இலங்காபுரி செல்ல பாலம் அமைக்க ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து நடவடிக்கையில் இறங்கி, வெற்றி பெற்றார்.

முதல் விநாயகர் ராவணனின் அரண்மனையை அடையாளம் காட்டியதும், இரண்டாவது விநாயகர் அந்த அரண்மனையின் முகப்பைக் காணவைத்ததுமாக ராமனுக்கு அருள் புரிந்தார்கள்.

ராவணனை வீழ்த்தி வெற்றி கண்டதும், சீதா தேவியுடன் வந்த ராமனை ராவணனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷம் தொடர்ந்தது. ராமபிரான், வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு வழியாக வந்தபோது, வழியில் உள்ள விநாயகர், அந்த வீரஹத்தி தோஷத்தைத் தன் காலால் எட்டி உதைத்து விரட்டினாராம். அதன் நினைவாக வேதாரண்யம் திருத்தலத்தில் மேற்கு கோபுர வாயிலில் ஒற்றைக் காலைத் தூக்கிய திருக்கோலத்தில் காட்சி தரும் வீரஹத்தி விநாயகரைத் தரிசிக்கலாம்.
தி.இரா.பரிமளரங்கன்.