மார்ச் மாத விசேஷங்கள்




                      ஹோலிப் பண்டிகை 7.3.2012

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineஇந்துக்கள் கொண்டாடும் பண்டிகை களில் வித்தியாசமானது ஹோலிப் பண்டிகை. பனிக் காலம் முடிந்து வெயில் காலத்தை வரவேற்கும் விழா இது. இப்போதைய ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும் பூசியும் வண்ணம் கலந்த நீரை பீச்சியடிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தப் பண்டிகை எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல புராண காரணங்கள் கூறப்படுகின்றன.

  ஒரு முறை தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதையிடம், ‘‘ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?’’ என்று கேட்டார். அதற்கு யசோதா, ‘‘ராதையின் நிறம் மீது உனக்குப் பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களால் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்றே கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்’’ என்று பதிலளித்தாள். அதன்படி கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களைப் பூசினார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையிலேயே அந்நாளை ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடுவதாக ஒரு காரணம்.

  இரண்யன் எனும் அரக்கன் எல்லோரும் தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே பரம்பொருளான கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரண்யன் மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான். அவனை தன் உத்தரவுக்கு அடிபணிய வைப்பதற்காக தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான் இரண்யன். ஹோலிகா நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தன் மகனை அழிக்கும் பணியினை ஒப்படைத்தான். அதன்படி, பிரகலாதனைப் பற்றிக் கொண்டு, நெருப்பினுள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்துவிடுவான் என்று கணித்தான் இரண்யன். ஆனால் நடந்ததோ வேறு. திருமாலை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் அமர்ந்த ஹோலிகா தான் பெற்ற வரத்தையும் மீறி சாம்பலானாள்.

  இந்த புராண சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஹோலிப் பண்டிகையின் போது திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வது உண்டு. ஹோலிகா அழிந்த தினமே ஹோலிப் பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது புராணக்கதை.

மாசிமகம் 7.3.2012

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineபிரளயம் ஏற்பட்டால் உலகம் மொத்தமும் அழிந்து விடுமே என்று அஞ்சிய பிரம்மா, சிவ பெருமானிடம் முறையிட்டார்.

அதற்கு சிவபெருமான், பல புண்ணிய தலங்களில் இருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து அதை மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேரு மலையில் வைத்து விடுமாறும், பிரளய வெள்ளம் வரும்போது அந்த கும்பம் மிதந்து சென்று ஒரு நிலப்பகுதியில் தங்கும் என்றும் அதன் பிறகு மீண்டும் பூலோகம் ஜீவிக்கும் என்றும் தெரிவித்தார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

அதேபோல, பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது. அந்த இடம் ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்றது. அந்த இடம்தான் இன்றைய குடந்தை எனும் கும்பகோணம். அப்போது, சிவபெருமான் வேடன் உருவம் கொண்டு, அந்த கும்பத்தின் மீது அம்பெய்து அதை உடைத்தார். குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது. குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாக காட்சி அளித்தன.

சிவபெருமான் எந்த இடத்தில் நின்று அம்பு தொடுத்தாரோ அந்த இடம் பாணபுரேசம் என்ற பாணாதுறை ஆகியது. கும்பத்தைத் தாங்கியிருந்த உறி விழுந்த இடம், சோமேஸ்வரர் கோயிலாகவும் கும்பத்தின் மேலிருந்த தேங்காய் விழுந்த இடம் அபிமுகேஸ்வரர் கோயிலாகவும் கும்பத்தில் சுற்றியிருந்த நூல் விழுந்த இடம் கௌதமேஸ்வரர் கோயிலாகவும், வில்வம் விழுந்த இடம் நாகேஸ்வரன் கோயிலாகவும் குடத்தின் வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில் ஆகவும் மாறின.

குடத்தில் இருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாய்ந்து அந்தப் பகுதிகளைச் செழுமையாக்கியது.

  பிரம்மன் மனம் மகிழ்ந்து, பூர்வபட்சத்தில் வரும் அசுவனி நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து, சிவபெருமானையும் அம்பிகையையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்து உற்சவம் நடத்தினார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப் போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நட்சத்திர நன்நாளில் பஞ்சமூர்த்திகளை வீதியுலா வரச் செய்து, மகாமக தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமநவமி  31.3.2012

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineஸ்ரீராமர் அவதரித்த நாள்தான் ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தி மன்னன் தசரதன் குழந்தைப் பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். யாகத்தீயில் தோன்றிய விஷ்ணு தூதன் தேவலோக பாயச பாத்திரத்தை தசரத சக்ரவர்த்தியிடம் கொடுத்தார். அதை அவர் தன் மனைவியர் மூவருக்கும் பகிர்ந்து கொடுத்தார். பாயசத்தில் பாதிப்பகுதியை கௌசல்யைக்கும் கால் பகுதியை சுமித்திரைக்கும் மீதமுள்ள கால் பகுதியை இரண்டாக்கி அதில் ஒன்றை கைகே யிக்கும் மற்றொரு பகுதியை மீண்டும் சுமத்திரைக்கும் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக தேவியர் மூன்று பேரும் கருவுற்றனர். சித்திரை மாத புனர்பூச நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் நவமி திதியில் கௌசல்யைக்கு மகனாக ராமச்சந்திரமூர்த்தி பிறந்தார். மறுநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு பரதன் பிறந்தார். அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்திரைக்கு இரட்டையர்களாக லட்சுமணரும் சத்ருக்னரும் பிறந்தனர்.

பாயசத்தை நான்கு பகுதிகளாக கொடுத்ததால் தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். இதில் ஒரு ஆச்சரியம், கௌசல்யை பாயசம் பெற்றபின் சுமித்திரை பாயசம் பெற்றாள். அதனால் சுமித்திரைக்கு பிறந்த இரண்டு மகன்களில் ஒருவரான லட்சுமணர் எப்போதும் ராமரைப் பின்தொடந்தவராகவும் கைகேயி பாயசம் பெற்ற பின் இரண்டாம் முறையாக சுமித்திரை பாயசம் பெற்றதால் அவளுக்குப் பிறந்த மற்றொருவனான சத்ருக்னன், கைகேயியின் மகனான பரதனை பின் தொடர்ந்தவனாகவும் ஆயினர்.

இந்த பந்தம் அவர்கள் பிறந்தபோதே ஏற்பட்டுவிட்டது. ‘ராம.. ராம..’ என்று மூன்றுமுறை சொல்வது திருமாலின் திருநாமத்தை ஆயிரம் முறை கூறுவதற்குச் சமம் என்று பார்வதிக்கு பரமேஸ்வரன் கூறியுள்ளதிலிருந்தே ராம நாமத்தின் பெருமைகளை அறியலாம்.
ஏ.கே.ஷரவணன்