கொலு மண்டபத்தில் ஒலித்த சாமான்யன் குரல்



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly magazine

                  நாடாளும் மன்னன் என்பவன் மக்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாகத் திகழவேண்டும் என்பதை நமது அறநூல்கள் அனைத்தும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றன. ‘மன்னன் எவ்வழி; மக்கள் அவ்வழி’ என்றொரு முதுமொழியே உண்டு. அரசன் ஒரு பிடி உப்பை இலவசமாகப் பெற நினைக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதை நிறைவேற்ற முயலும் அதிகாரிகள், கடைத் தெருவில் இருந்து உப்பு மூட்டைகளையே அரசன் பெயரால் பறிமுதல் செய்து கொண்டு வந்து விடுவார்கள் என்று விவரிக்கும் நாடோடிக் கதை உண்டு. ஒரு பிடிதான் அரசனுக்கு. மீதி...?

அரசன் நேர்மையாளனாகவும் மக்கள் மீது கருணை உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என நமது பாரத நாட்டு இலக்கியங்கள் பல உண்மை நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றன. அற நூல்களில் தேர்ச்சியுடைய பெரியோர் பலர் ஒவ்வொரு அரசவையிலும் இருந்தனர். அதன் காரணமாக அரசர்கள் நீதி வழுவாது ஆட்சி புரிந்ததுடன், காலங்களை வென்று நிற்கும் உதாரண புருஷர்களாகவும் விளங்கினர்.

ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்து, இடர்கள் பல அனுபவித்து, ராவண வதம் முடித்து அயோத்தி திரும்பி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்பும் கூட நிம்மதியாக வாழ முடியவில்லை, பாருங்கள். ஒரு சாதாரண ஏழை சலவைத் தொழிலாளி குறை கூறினான். அக்கினிப் பிரவேசம் செய்து, தன் கற்பை நிரூபித்த சீதாப்பிராட்டியின் மீது கறைப்பழி சுமத்தினான். அதனால், கர்ப்பவதி என்றும் பாராமல் தன் பட்டத்தரசியை ராமன் மீண்டும் காட்டுக்கு அனுப்பி விட்டான்.

‘அறம் வழுவாதவன்’ என்னும் நற்பெயரை இழக்க விரும்பாமலும் மக்கள் சொல்லை மதிக்கும் மன்னன் என்கிற உண்மையை நிலை நாட்டவுமே ராமபிரான் இப்படிச் செய்ததை இன்று உலகம் உணர்ந்து மெச்சிப் புகழ்கிறது. ராமன் நினைத்திருந்தால், அந்த சலவைத் தொழிலாளியைக் கடும் காராக்கிருஹத்தில் அடைத்திருக்கலாம்; ஏன் காணாமல் போகவே செய்திருக்கலாம். அவ்வளவு ஏன், அந்தப் பழிச் சொல்லையே காதில் போட்டுக்கொள்ளாமல் புறக்கணித்திருக்கலாம். நாடு அப்பழியினைச் சொல்லவில்லை, நல்லோர் எவரும் அப்படி எண்ணவும் இல்லை.

கோடியில் எவனோ ஒரு சாமான்யன் பேசிய பேச்சு,

கொற்றவன் கொலுமண்டபம் வரை எப்படி வந்தது?

அதுதான் ராம ராஜ்யம்; அதுதான் ராமனின் ஆட்சிச் சிறப்பு!

கோவலன்கண்ணகி கதை நாமெல்லாம் நன்கறிந்தது. செய்யாத பிழைக்காக வணிக இனப் பெருமகன் கோவலன் கொலைத் தண்டனை பெற நேர்கிறது. கொதித்தெழுந்த அவன் மனைவி கண்ணகி, பாண்டிய மன்னனின் அரசவைக்குச் சென்று, நீதி கேட்டு ஆவேசம் பொங்க வாதிடுகிறாள். உண்மை உணர்ந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் பிழையை எண்ணி வருந்துகிறான். ‘இந்த அபகீர்த்தி தனக்கு மட்டுமல்லாமல், இனிவரும் பாண்டியன் பரம்பரைக்கெல்லாம் தீராத பழியாக ஆகிவிடுமே’ என்று துயருறுகிறான். உடனே தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொள்ளும் நோக்கில், ‘யானோ அரசன்? யானே கள்வன்! கெடுக என் ஆயுள்!’ என்று கூறி, அரியணையிலிருந்து சரிந்து உயிரை விட்டுவிடுகிறான்.

உடையைக் கழற்றியெறிவது போன்று, பாண்டிய மன்னன் உடலிலிருந்து உயிரைக் கழற்றியெறிந்தது இன்றளவும் உலகம் வியப்புடன் பேசும் விஷயமாக இருக்கின்றது. அவன் மட்டுமல்ல, அவன் மனைவி பாண்டிமாதேவியான கோப்பெருந்தேவியும் உள்ளம் குலைந்து, உடனே அரசன் பாதங்களைப் பற்றியபடி உயிரை உகுத்தெறிந்தாள்.

சிந்தை சிலிர்க்க சிலப்பதிகாரம் எடுத்துரைக்கும் செய்தி இது.

அரசனும் அரசியும் நீதிக்காகக் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொண்ட போதிலும் கண்ணகியின் சினம் தணியவில்லை. அவள் எழுப்பிய கொங்கைத் தீயில் மதுரை மாநகரமே எரிந்து சாம்பலாகிறது. அப்போது அவளுடைய சினத்தீயை தணிக்க அவள் முன்பு ‘மதுராபதி’ என்னும் காவல் தேவதை தோன்றுகிறது. அது ஒரு தெய்வம். இருந்தாலும் பாருங்கள், கற்பின் கனலால் ஆவேசத்துடன் நிற்கும் கண்ணகியின் முன்னால் வரக்கூட அஞ்சுகிற அப்பெண் தெய்வம் அவளின் பின்புறமாக வந்து நின்று பேசுகிறதாம்!

மதுராபதி என்னும் அப்பெண் தெய்வம், ‘பாண்டியன் அறியாது பிழை புரிந்துவிட்ட போதிலும் கூட, அவன் மிகவும் நல்லவன்’ என்று எடுத்துரைக்கிறது. அத்துடன் பாண்டிய வம்சத்தின் பெருமைகளையும் கூறுகிறது. அத்தெய்வத்தின் வாயிலாகத்தான் நாம் பொற்கைப் பாண்டியனின் அருஞ்சிறப்பினை அறிய நேர்கிறது.

கீரந்தை என்கிற அந்தணன், காசிக்குச் சென்று கங்கையில் நீராட எண்ணினான். அவ்வளவு நெடிய பயணத்திற்கு மனைவியை அழைத்துச் செல்ல முடியாத நிலை. அவளைத் தனியே விட்டுச் சென்று, விரைவாகத் திரும்பி வருவதாகக் கூறினான். ‘எனக்கு யார் பாதுகாப்பு?’ என்று கேட்கிறாள் அந்த பிராமண மாது. ‘நம் பாண்டிய மன்னர் இருக்கும்போது உனக்கென்ன பயம்? அவரே நகர் உலா வந்து, நாட்டைப் பாதுகாப்பார். இந்த நகருள் கள்வர் பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீ நிம்மதியாக இருக்கலாம்’ என்கிறான், அந்தணன்.

இவர்கள் பேச்சு, அன்று நகருலா வந்த மன்னன் செவிகளில் விழுகிறது. ‘மக்களுக்குதான் என் ஆட்சி மீது எவ்வளவு நம்பிக்கை!’ என்று வியந்து போகும் பாண்டிய வேந்தன் அன்று முதல் தவறாது தினமும் இரவில் மாறுவேடம் பூண்டு நகருலா வருகிறான். குறிப்பாக அந்த வீதியின் மீது அவன் ஒரு தனிக் கவனம் செலுத்துகிறான்.

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineஅந்தக் காலத்தில் காசிப் பயணம் என்பது அவ்வளவு எளிதல்ல. பல மாதங்கள் பயணம் செய்ய வேண்டும். கீரந்தை என்கிற அந்த வேதியன் எப்படியோ மிக விரைவாகவே காசியாத்திரை முடிந்து ஊர் திரும்பி விட்டான். அது அரசனுக்குத் தெரியாது. இன்னும் நீண்ட நாட்களாகும் அவன் ஊர்த் திரும்ப என்றே எண்ணியிருந்தான். எனவே, அன்றிரவு அவன் நகருலா சென்றபோது, அந்த வேதியன் வீட்டில் ஆண்குரல் கேட்கவே, அது யாரென்று விசாரிக்க எண்ணிக் கதவை மெல்லத் தட்டினான். உள்ளிருந்து, ‘யாரது?’ என அதட்டல் குரல் எழுப்பினான், கீரந்தை.

வீட்டிற்கு உரியவன் வந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், தான் சற்று அவசரப்பட்டு விட்டோமோ என்றெண்ணினான். சரேலெனத் தாவி அந்த வீதியிலுள்ள மற்ற வீடுகளின் கதவுகளையும் பட்பட்டென்று தட்டிவிட்டுச் சென்று மறைந்து விட்டான்.

மறுநாள் அரசவைக்கு இது ஒரு குற்றச்சாட்டாக வந்தது.

‘‘அரசே, அந்தணர்கள் வாழும் ஒரு தெரு அது. அங்கே நள்ளிரவில் யாரோ வந்து கதவைத் தட்டிவிட்டுப் போன சம்பவம் மிகுந்த வேதனை தருகிறது. இளம் வயதுடைய கணவன்மார்கள் தங்கள் மனைவிமீது சந்தேகம் கொள்ளவும் பூசல் வளர்க்கவும் இது ஒரு காரணமாக அமைந்துவிடும். யாரோ விளையாட்டாகச் செய்திருந்தாலும்கூட, இதை விசாரித்து, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற அசம்பாவிதங்கள் இனி நிகழாமல் தடுக்க முடியும்...’’ என்றனர், சில அந்தணப் பெரியவர்கள். கீரந்தையும் இதை ஆமோதித்தான்.

‘‘குற்றவாளி பிடிபட்டுவிட்டான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். என்ன தண்டனை அளிக்கலாம்?’’ என்று வினவினான், வேந்தன்.

‘‘அவன் கையை வெட்ட வேண்டும்’’ என்றன பல குரல்கள்.

அவ்வளவுதான்... பாண்டிய மன்னன் உடனே தன் உடைவாளை உருவி, இடக்கரத்தில் ஏந்தி, வலக்கரத்தை வெட்டியெறிந்தான். ‘‘இதோ இந்தக் கைதான் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியது. இதற்கு நீங்கள் அளித்த தண்டனை நிறைவேற்றப்பட்டது’’ என்று கூறினான்.

பதறிப்போயினர் அரசவைப் பிரமுகர்கள். குற்றம்சாட்டி, வழக்குரைத்தவர்களும் வாயடைத்துப் போயினர்.

‘‘ஐயோ! தாங்கள்தான் கதவைத் தட்டியது என்பதை அறிந்திருந்தால், நாங்கள் இதைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டோமே’’ எனப் பதறினர், கதறினர்.

மன்னன் அவர்களை சமாதானப்படுத்தினான். ‘‘நீதிக்குமுன் அனைவரும் சமம். நான் நல்ல எண்ணத்தில்தான் கீரந்தை வீட்டுக் கதவை முதலில்
தட்டினேன் என்றாலும் அது பிழைபட்ட செயல் என்பதில் ஐயமில்லை. தவறு செய்த கை துண்டிக்கப்பட்டது மிகச்சரியே. நீங்கள் இதற்காக வருந்த வேண்டாம்...’’ என்றான்.

ஆயினும் அந்தணப் பெருமக்களும் ஊராரும் சேர்ந்து ஒரு பொற்கரத்தை உருவாக்கி, மன்னனுக்கு அளித்தனர். அது மருத்துவர் உதவியோடு அரசருக்குப் பொருத்தப்பட்டது. மன்னரின் நலன் கருதி ஒரு பெரிய வேள்வியும் நடத்தப்பட்டது. நாட்டு மக்கள் அதுமுதல் தங்கள்அரசனைப் ‘பொற்கை பாண்டியன்’ என்றே அழைத்தனர். அதுவே வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பதிவாகிவிட்டது.

செயற்கைக் கை பொருத்தப்பட்ட முதல் மனிதன் என்றுகூட இம்மன்னனைச் சொல்லலாம். அதைவிட, இந்தப் பொற்கைப் பாண்டியனின் உயரிய வரலாற்றை ஒரு தெய்வமே வியந்து பேசியிருக்கிறது பாருங்கள்! இதுதான் அறம் வழுவாத செயலுக்கு உள்ள பெருமை.

பாண்டிய மன்னர்கள் என்று மட்டுமல்ல, சோழப்பெரு வேந்தர்களிலும் இப்படி அறம் வழுவாத நிலைக்கு அரிய உதாரணங்களாகப் பல மன்னர்கள் உண்டு என்பதை அந்த மதுராபதித் தெய்வம் எடுத்துரைக்கிறது. ஒரு புறாவுக்காகத்தான் தசையை அரிந்துத் தராசுத் தட்டில் வைத்த சிபிச் சக்கரவர்த்தி, ஒரு பசுவின் கன்றைத் தேர்க்காலில் மாய்த்தமைக்காக அதே தேர்க்காலில் தன் ஒரே மகனைப் படுக்கச் செய்து, அவன்மீது தேரை ஏற்றிக் கொன்று ஈடு செய்த மனுநதிச் சோழன் போன்றோரின் புனித வரலாறுகள் அவை.

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அடுத்தவர் பொருள்களை அபகரிப்பது என்பது ஒரு தீய வழிமுறை. ஏழை எளிய மக்களிடமிருந்து எதையும் அடித்துப் பிடுங்கும் அற்ப குணம் சிலரிடம் உண்டு. அதற்கு நேர்மாறான, அறநெறி நின்று வரலாற்றில் இடம்பெற்ற ஓர் உன்னத அரசனைப் பற்றிய தகவல் இதோ:

மகத மன்னன் பிம்பிசாரன். பௌத்த இலக்கியங்களில் மிகவும் சிறப்பித்துப் பேசப்படுகிற ஒரு வேந்தன். மாவீரன் என்று பெயரெடுத்தவன். அந்தக்கால அரசர்கள் பலரும் பிம்பிசாரன் பெயரைக் கேட்டாலே நடுங்குவர். எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் பிம்பிசாரன் வெற்றியுடனேயே மகதம் திரும்புவான். அத்தகு வீர வேந்தனுக்கு கோதாவரி நதிக்கரை நாடாளும் ராஜஸ்ரீ என்கிற மன்னன் நண்பனாக இருந்தான்.

ராஜஸ்ரீ, ஒரு சமயம் மகத மன்னன் அரண்மனையில் வந்து விருந்தினனாகத் தங்கியிருந்தான். நண்பனை அழைத்துக் கொண்டு பிம்பிசாரன், கிருத்திரகூட மலையடிவாரத்தில் இருந்த அழகிய வேணுவனத்திற்கு உலாவச் சென்றான். மூங்கில் மரங்கள் நிறைந்த பூஞ்சோலை அது. விஸ்தாரமான அந்த உபவனத்தில் அன்னங்கள் நீந்தி விளையாடும் தடாகங்களும் பச்சைப் பசேலெனத் திகழும் கொடி வீடுகளும் எண்ணற்றப் பழ மரங்களும் இருந்தன. பறவைகள் பெருங்கூட்டமாகப் பறந்து திரிந்தன. நீண்ட நடைபாதைகளின் இருபுறமும் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் பரப்பின. எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவாறே நடந்த மன்னன் ராஜஸ்ரீ கண்களில் ஓரிடத்தில் குப்பைமேடு போன்ற ஒரு திட்டு பட்டது.

 அதைக் கண்டு முகம் சுளித்த ராஜஸ்ரீ, ‘‘நண்பரே! இது என்ன அசிங்கம்! அழகிய பெண் முகத்தில் அசிங்கமாக ஒரு மச்சம் இருந்தால் எப்படியிருக்கும்? பட்டுத்துணியில் பொட்டுக் கிழிசல் இருந்தாலும் சகிக்காதே! அதுபோன்று அல்லவா இந்த அழுக்குத் திட்டு காணப்படுகிறது. கூப்பிடுங்கள் உங்கள் தோட்டப் பாதுகாப்பாளரை. ஏன் இந்த இடத்தை அழகுபடுத்தாமல் விட்டுள்ளீர்கள் என்று நான் இப்போதே கேட்க வேண்டும்...’’ என்றான்.

அதற்கு மகத வேந்தன் பிம்பிசாரன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ‘‘கோதாவரி நதித் தீரத்தை ஆளும் என் இனிய நண்பா, அந்த சிறிய துண்டு நிலம் எனக்குரியதல்ல. அது ஓர் ஏழைக் கிழவிக்குச் சொந்தமானது. அதை நான் எவ்வளவோ வற்புறுத்தி, எனக்கு விற்று விடும்படி கேட்டேன். அவள், ‘‘என்னுடையது என்று கூறிக்கொள்ள இருக்கிற ஒரேயொரு பரம்பரைச் சொத்து இதுதான். எவ்வளவோ நிலம் இருந்து, எப்படியெல்லாமோ வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. காலக் கொடுமை, எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. என் கணவன் உயிரை விடும்போது, இதை மட்டும் எதற்காகவும் விற்று விடாதே என்று கூறினார்.

வெளியூரில் இருக்கிற பேரன் என்றாவது ஒருநாள் வருவான். அவனுக்கு இந்த நிலத்தை அளிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். இதை விற்கும்படி வற்புறுத்தாதீர்கள் அரசே’’ என்று அவள் என் காலில் விழுந்து கதறினாள். அந்த ஏழைக் கிழவியின் வயிற்றெரிச்சல் நமக்கு எதற்கு என்று நானும் இந்த நிலத்தை வாங்காமல் விட்டு விட்டேன். அவள் கண்ணீரை விட இந்த உபவனத்தின் அழகு ஒன்றும் எனக்கு முக்கியமாகப் படவில்லை’’ என்றான்.

பிம்பிசாரன் கூறிய பதிலைக் கேட்ட கோதாவரி நதித்தீர அரசன், மனம் நெகிழ்ந்துபோய், ‘‘பிம்பிசார மன்னா! ஓர் ஏழைப்பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பளித்து, அவள் நிலத்தை மிரட்டி வாங்காமல் விட்ட உமது பெருந்தன்மை கேட்டு எனக்கு மெய் சிலிர்க்கிறது. இப்போது சொல்கிறேன் இந்தப் பூந்தோட்டமே அந்தத் துண்டு நிலத்தால்தான் மிகுந்த அழகுடன் காட்சியளிப்பதாக எனக்கு தோன்றுகிறது’’ என்றான்.
பிறர் வயிறெரியச் செய்யாத வாழ்வே ஒப்பற்ற வாழ்வு என்பதை இதன்மூலம் அறிகிறோம். இதுதான் உயரிய ஆன்மிக வாழ்வின் அடித்தளம்.
(தொடரும்)