ஆகாயம் அணியும் நட்சத்திர மாலை



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

                              சண்டிகேஸ்வரரைக் குப்பைக் கூளமாக மாற்றி இருக்கிறோம். சிவன் கோயில்களில் சிவன் சந்நதிக்கு இடது பக்கமாக, அபிஷேக தீர்த்தம் வரும் வழிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சந்நதி இருக்கும். அங்கே பலர் நின்றபடி, தங்கள் வேட்டி அல்லது புடவை நுனியிலிருந்து ஒரு சில நூல் இழைகளைப் பிய்த்து சண்டிகேஸ்வரர் மீது போடுவார்கள். இப்போது நாகரிகம் வளர்ந்து விட்டதல்லவா? அதனால் பலர் தங்கள் துப்பட்டா, முழுக்கால் சட்டை (பேண்ட்)யிலிருந்தும் ஒரு சில நூல் இழைகளைப் பிய்த்துப் போடுகிறார்கள். இவற்றில் பல ஆடைகள் சமீப காலத்தில் தண்ணீரையே பார்த்து அறியாதவை; ஆனால், வியர்வையிலும் அழுக்கிலும் நனைந்து இருக்கும்.

இப்படிப்பட்ட ஆடைகளில் இருந்து நூல்  இழைகளைப் பிய்த்து, சண்டிகேஸ்வரர் மீது போடுவது என்ன நியாயம்?

அதே நூல் இழைகளை நம்மீது போட்டால், அன்போடும் பக்தியோடும் போடுவதாகவே வைத்துக் கொள்வோம்; சும்மா இருப்போமா?

இவ்வாறு ஆடைகளில் இருந்து நூலைப் பிய்த்து சண்டிகேஸ்வரர் மீது போடுபவர்களிடம், ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘அடப் போங்க சார்! இந்த மாதிரி செஞ்சா, புது ஆடை கிடைக்கும். தெரியாதா உங்களுக்கு?’’ என பதில் சொல்கிறார்கள்.

உண்மைதான்! தினந்தோறும் அப்படி நூல் இழைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தால், அந்தப் புடவையோ வேட்டியோ என்னவாகும்? கிழிந்து போகும். புது ஆடை வாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழி?

நம் துணிக் கிழிசல் குப்பைகளைப் போடும் குப்பைக் கூடையா சண்டிகேஸ்வரர் சந்நதி?

இன்னும் சிலர் சண்டிகேஸ்வரர் முன்னால் நின்றுகொண்டு, பொறுப்பாக பலமாகக் கை தட்டுவார்கள். ஏன் என்று கேட்டால், ‘‘அட! செவிட்டு சாமி சார் இவரு’’ என்று தெளிவாக விளக்கம் சொல்வார்கள். சண்டிகேஸ்வரருக்குக் காதொலிக் கருவி (ஹியரிங் எய்ட்) நிதி வசூல் செய்யாததுதான் பாக்கி.

சரி! இந்த நூல் பிய்த்துப் போடும் பழக்கம் எப்படி வந்தது?

முன்னோர்கள் காலத்தில், பக்தர்கள் எல்லாம் கோயிலுக்குப் போகும்போது, அர்ச்சனைக்கு உண்டான வெற்றிலை, பாக்கு, பழம், பூ, கற்பூரம் முதலியவற்றை அர்ச்சகரிடம் கொடுப்பார்கள். ஆனால் கூடவே கொண்டு வரும் எண்ணெய், திரியை அவ்வாறு அர்ச்சகரின் கைகளில் கொடுக்க மாட்டார்கள். அந்த எண்ணெயையும் திரியையும் கொண்டுபோய், சண்டிகேஸ்வரர் சந்நதியில் வைத்து விடுவார்கள். அதிலும் திரி, எண்ணெயில் நனைக்கப்பட்டதாக இருக்காது. எண்ணெய் தனியாகவும் திரி தனியாகவும் இருக்கும்.

இந்தப்பழக்கம் நாளடைவில் மாறிப்போய், நம் ஆடைகளில் இருந்து நூலைப் பிய்த்துப் போடும் பழக்கமாக மாறி, நன்றாக வலுப்பெற்று விட்டது. இந்தத் தவறான பழக்கத்தை நிறுத்திவிட்டு, சிவன் சந்நதியில் விபூதிகுங்குமம் எனப் பிரசாதங்கள் தருகிறார்கள் அல்லவா; அவற்றை சண்டிகேஸ்வரர் சந்நதியில் வைத்து, ‘‘சண்டிகேஸ்வரரே! நாங்கள் சிவதரிசனம் செய்துவிட்டோம். தரிசனப் பலனை அளியுங்கள்!’’ என வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டு முறைகளை எல்லாம் ஏன் வைத்தார்கள்? அவற்றின் வழியாக நமது முன்னோர்கள், நமக்கு எதை அறிவுறுத்துகிறார்கள்?

வீதிகளிலும், பெரும் சாலைகளிலும் ஆங்காங்கே பலவிதமான அடையாளக் கம்பங்களும் குறியீட்டுக் கம்பங்களும் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றில், ஓர் ஒலிப்பான் (ஹாரன்) படம் போட்டு, அதை ஒரு கோடு போட்டு அடித்ததைப் போல ஓர் அடையாளம் இருக்கும். அதன் பொருள் ‘இங்கு ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது’ என்பதாகும். ஒரு சிறுவன் ஒரு புத்தகப் பையுடன் ஓடுவதைப் போல, ஒரு படம் வைத்திருப்பார்கள். அதாவது பள்ளிக்கூடப் பகுதி இது ‘பார்த்துப் போங்கள்’ என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துவதற்காக.

இவை உதாரணம் மட்டுமே!

சற்று நேரம் பயணம் செய்யக்கூடிய இந்தப் போக்குவரத்திற்கே இப்படிப் பலவிதமான அடையாளங்களை நிறுத்தி, ஆங்காங்கே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்! அதை உணர்ந்து அதன்படி நடந்து பயணம் செய்தால்தானே, நாம் நல்ல விதமாகத் திரும்ப முடிகிறது.

இதற்கே இப்படி என்றால், நம் வாழ்க்கைப் பயணத்திற்கு எவ்வளவு அடையாளங்கள் வைத்திருப்பார்கள்? அவற்றை உணர்ந்து அந்தப் பாதையில் பயணம் செய்தால் வாழ்க்கை வளப்படாமல் இருக்குமா? வசப்படாமல் இருக்குமா?

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineவாருங்கள், அப்படிப் பட்ட  ஓர்  அற்புதமான அடையாளத்தைப் பார்க்கலாம். அதைப் பார்த்த பிறகும், நமக்குள்ளே இவ்வளவு சண்டையும், சச்சரவுகளும் தேவையா, நியாயமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சிவன் கோயில்களில் சிவ லிங்கத்தையும் அதைத் தாங்கி நிற்கும் ஆவுடையாரையும் பார்த்திருப்போம். இதை எதற்காக வைத்திருக்கிறார்கள்?

வழிபாட்டில் மூன்று வகை: 1. உருவ வழிபாடு, 2. அரு உருவ வழிபாடு, 3. அருவ வழிபாடு.

இவற்றில் உருவ வழிபாட்டை நாம் அனைவரும் செய்துகொண்டு வருகிறோம்.

மூன்றாவதான அருவ வழிபாடு என்பது உருவமற்ற பரம்பொருளைக் குறிப்பது. மற்றொரு வகையாகச் சொன்னால், அனைத்தையுமே பரம்பொருளாகப் பார்ப்பது. ஞானத்தில், ஆன்மிகத்தில், பக்தியில், மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் செய்யும் வழிபாடு இது. ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே’ என்று தாயுமானவ சுவாமிகள் சொல்கிறாரே, அதைப்போல! வேதங்கள் சொல்வதும் பல மகான்கள் செய்வதும் இந்த வழிபாட்டைத்தான்.

உருவ வழிபாட்டிற்கும் உருவமற்ற அருவ வழிபாட்டிற்கும் இடைப்பட்டது  அரு உருவ வழிபாடு. அதாவது உருவம் இருக்கும். ஆனால் கண், காது, கால், கை, மூக்கு, நாக்கு என எந்த அவயங்களும் இருக்காது. இது அருஉருவ வழிபாடு. இந்த அரு உருவமே சிவலிங்கம்.

இந்த சிவலிங்க வழிபாட்டின் உண்மை என்ன?

சிவலிங்கத்தைத் தாங்கியிருக்கும் பீடத்திற்கு ஆவுடையார் என்று பெயர். அது சக்தியின் வடிவமான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயம் என்பது கவிழ்த்த மரக்கால் போலத் தோற்றம் அளிக்கிறதே தவிர, அந்த ஆகாயத்தின் வடிவம் நமக்குப் புலப்படுவதில்லை.

இதைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது. நாம் உட்பட அனைத்துமே ஆகாயம் என்னும் சிவலிங்கம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழ்தான் இருக்கிறோம்.

சிவலிங்க வடிவாக இருக்கும் அந்த ஆகாயத்தை ‘அண்டலிங்கம்’ என்று ஞானிகள் சொல்வார்கள்.

கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்திருப்போம் அல்லவா? அதுபோல, ஆகாய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது. அளவில் அடங்காத ஆகாய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, பிரமாண்டமான கடலில் நீர் இருக்கிறது. அந்த நீரை முகர்ந்து கொண்டுபோய், மேகங்கள் அபிஷேகம் செய்கின்றன. அபிஷேகம் முடிந்துவிட்டது. அடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது மலர்களைச் சாற்ற வேண்டும். ஆகாய லிங்கத்திற்கு எதை மலராகச் சார்த்துவது? நட்சத்திரங்களே அங்கு மலர் மாலையாக இருக்கின்றன.

இவ்வளவு பார்த்தாலும், இன்னும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஏதாவது ஒரு வழியில் ஆடை சார்த்துகிறோம். ஆனால் இந்த (அண்ட) லிங்கத்திற்கு எப்படி ஆடை சார்த்துவது? எதை சார்த்துவது?

அந்த ஆகாயமெனும் சிவலிங்கத்திற்குத் திசைகளே ஆடைகளாக உள்ளன.

இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். இதை யாரோ, விவரம் தெரியாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேராகத் தரிசித்த ‘திருமூலர்’ என்னும் சித்த புருஷர் கூறிய தகவல் இது. இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் ‘திருமந்திரம்’ என்னும் திருமுறையை எழுதியது திருமூலர். அருந்தமிழ்ப் பாடல்கள் மூவாயிரம் கொண்ட அந்நூலில் திருமூலர் இந்த சிவலிங்க விஷயத்தைச் சொல்கிறார். இதோ பாடல்:

தரை உள்ள சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடு மாலை
கரை அற்ற நந்திக்கும் கலை திக்கும் ஆமே.

எளிமையான தமிழில் சிவலிங்க உண்மையைக் கூறி இருப்பதைப் பார்த்தோம் அல்லவா? நாம் அனைவரும் அந்த ஒரே கூரையின்கீழ்தான் இருக்கிறோம். அப்படி இருக்க நமக்குள் ஏன் போட்டி, பொறாமை, பூசல்கள்?

நவகிரக உண்மைகள் என்ன? நவகிரக சந்நதிகளில் நாம் செய்யும் மாபெரும் தவறு என்ன?
(அடுத்த மாதம் பார்க்கலாம்)
படங்கள்: இரா.ரெங்கப்பிள்ளை