குழந்தை வரம் அருளும் கூத்தூர் தர்மசாஸ்தா



Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

                 சோழ   மன்னர்களும் பல்லவ மன்னர்களும் ஆலயங்கள் அமைப்பதில் தனி உற்சாகம் காட்டினர். அவர்கள் கட்டிய சிவாலயங்கள் தவிர திருமால் திருக்கோயில்களும் தமிழ்நாட்டில் ஏராளம். இவை தவிர அவர்கள் உருவாக்கிய கிராம தெய்வமான அய்யனார் என்று அழைக்கக் கூடிய தர்மசாஸ்தா ஆலயங்கள் பல ஊர்களில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. அப்படி ஒரு ஆலயம்தான் நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது  கூத்தூர் என அழைக்கப்படும் ஊரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்.

ஊரின் தெற்கு மூலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். பெரிய திருமதிற் சுவர்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்புறம் தர்மசாஸ்தாவின் வாகனங்களான இரண்டு குதிரைகளையும் இரண்டு யானைகளையும் தரிசிக்கலாம். இடப்புறம் காவல் தெய்வமான கருப்பர் என்று அழைக்கக்கூடிய பதினெட்டாம்படிக் கருப்பர் சந்நதி உள்ளது. பலியிடுதல் இவருக்கு மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

வடக்கு நோக்கி மதுரைவீரன் சந்நதி உள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் யானையும் காணப்படுகின்றன. அதையடுத்து ஸ்தபன மண்டபம். இங்கு இடதுபுறம் தல விநாயகரான ஆதிசித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் தர்மசாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலை உள்ளது. அதையடுத்து உள்ள அர்த்தமண்டபம் அருகே கருவறையில் தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தர்ம சாஸ்தாவின் வலது கால் தொங்கிய நிலையிலும் இடது கால் மடித்திருக்க, இடது முழங்கால் மேல் இடது கை நீட்டி அருள்பாலிக்கிறார். இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமணக் கோலத்தில் அமர்ந்துள்ளார். இடதுபுறம் புஷ்கலாம்பிகை அமர்ந்துள்ளார்.

தர்மசாஸ்தா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தது ஒரு தனிக் கதை. கேரள வணிகர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு அப்போதைய சோழநாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல், ஒருமுறை வந்த கேரள வணிகர்கள் வியாபாரம் செய்ய தங்களுடன் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டிகளில் வந்தனர். தாங்கள் வழிபட தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் உடன் கொண்டு வந்தனர். நடனபுரிக்கு அந்த வணிகர்கள் வந்தபோது வானம் கருத்து மழைவரும் போல் இருந்தது. உடனே, வணிகர்கள் தங்கள் பொருட்களுடனும் தர்மசாஸ்தாவுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் அன்று தங்கினர். இரவு நேரம் வந்தது.

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineஇதற்கிடையில், தர்ம சாஸ்தா தனது சகோதரரான விநாயகரிடம் தான் இரு மனைவி களுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டு மெனக் கேட்டார். உடனே, விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவிற்கு விட்டுக் கொடுத்து விட்டு தள்ளிச் சென்று அமர்ந்தார். அந்த விநாயகரே இத்தல விநாயகராக போற்றப்படுகிறார்.

மழை விட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை மறவாது எடுத்துச் சென்றனர். ஆனால், தர்மசாஸ்தாவின் சிலையை மறந்து விட்டுவிட்டுச் சென்று விட்டனர். தஞ்சை வந்த வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த மிளகு, ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரித்த போது அவர்கள் அதிர்ந்தனர். காரணம், அவையாவும் உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. அவர்கள் மனதில் அதற்கான காரணம் புரிந்தது. தாங்கள் கொண்டு வந்த தர்மசாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டுவிட்டு வந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள் உடனே புறப்பட்டு நடனபுரி வந்தனர்.

 தர்மசாஸ்தாவை எடுத்துச் செல்ல முயன்றனர், முடியவில்லை. தர்மசாஸ்தா அசரீரியாக தன்னுடைய திருவிளையாடல் இது என கூற, வணிகர்கள் திரும்பிச் சென்றனர். அன்று முதல் தர்மசாஸ்தாவின் உற்சவ விக்ரகங்கள்தான் இங்கு பூஜையில் இருந்து வந்தன. ஒரு நாள் ஆலயத்தின் அருகே உள்ள திருக்குளத்தில் மூலவர் சிலைகள் இருப்பதாக அந்த ஊர் பக்தர் ஒருவரின் கனவில் ஒரு தகவல் கிடைக்க, அதேபோல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்த சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்து விட்டனர். அவையே தற்போது மூலவராய் அருள்பாலிக்கும் தர்மசாஸ்தாபூரணாபுஷ்கலா திருமேனிகள். இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி தினசரி ஒரு கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் இறைவன், இறைவிக்கு சிறப்பாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சிறப்பு யாகமும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். கார்த்திகை மாதம் 1008 அலங்கார தீபாராதனையும் சுமார் 1000 பேருக்கு அன்னதானமும் நடந்தேறுகின்றன.

குழந்தைப் பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அந்தப்பேறு நிச்சயம் கிட்டுகிறது. அவர்கள் தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களைக் கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சார்த்தியும் குழந்தை பிறந்தவுடன் சிறிய அளவில் ஆலய மணியை வாங்கிக் கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி மகிழ்கின்றனர்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கூத்தூர் என்ற இத்திருத்தலம்.
ஏ.கே.ஷரவணன்