பொட்டல்காட்டில் பத்து குடிசைகள், ஒரு செங்கல் சூளை - இதுதான் கதைக்களம். 1966ல் நடப்பதான கதை. செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருக்கும் சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வரும் ஆசிரியர் விமல் சந்திக்கும் காதலும், பிரச்னைகளும் காட்சிகளாக்கப்பட்டுள்ளன.
விமல் நடிப்பில் நல்ல முன்னேற்றம். ஊர் சிறுவர்களிடமும் ஆட்டுக்குட்டியிடமும் மாட்டிக் கொண்டு தவிப்பது & இனியாவின் அலப்பறையை எதிர்கொள்வது என மனம் கவர்கிறார். சில காட்சிகள் என்றாலும் பாக்யராஜ் பங்கு சிறப்பானது.
நாயகி இனியாவுக்கு வரவேற்பு வளையம் கட்டலாம். முகத்திலுள்ள ஒவ்வொரு அங்குலமும் நடிக்கிறது. விடுகதை கணக்குப் போடும் கேரக்டரில் தம்பி ராமையா, விலாவில் விரல் வைக்கிறார். பொன்வண்ணன், நம்பிராஜன், தென்னவன் ஆகியோர் பாத்திரத்திற்கேற்ற பங்களிப்பு.
பைத்தியக்காரராக வரும் குமரவேலன் நடிப்பும் தோற்றமும் வித்தியாசம்.சிறுவர்கள் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பு.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பொட்டல்காடு கூட பொலிவு. அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் கவனத்தை ஈர்க்கிறார். ‘செங்க சூளக்காரா...’ தொடங்கி ஆறு பாடல்களையும¢ மனசாட்சியோடும் மண்சாட்சியோடும் எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
நல்ல மெசேஜ் சொல்லி, அருமையான திரைக்கதையுடன் அற்புதமாக இயக்கியுள்ளார் ஏ.சற்குணம்.