ரஜினி மகளின் சூதாட்டம்



‘வை ராஜா வை’ ஆடியோ விழாவில் பாடல் காட்சிகளை ஸ்கிரீன் பண்ணினார்கள். அனைத்தும் அள்ளும் ரகம். கண்களுக்கு விருந்து படைத்த அந்த விஷுவல்ஸுகளுக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். “எப்படி?” என்றதும், மெலிதாக சிரிக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப் பிறகு இவர் ஒளிப்பதிவாளராக வேலை செய்யும் படம் இது.“‘3’ படம் முடிந்த உடனே முடிவான கமிட்மென்ட் இது.

அந்த வகையில் நானும் ஐஸ்வர்யா தனுஷும் சேர்ந்து வேலை செய்யும் இரண்டாவது படம். இந்தப் படத்தில் நான் வேலை செய்வது இன்னொரு ஆச்சர்யம். ஏன்னா, இந்தப் படத்தில் ரஜினி சார் மகள் ஐஸ்வர்யா, இளையராஜா மகன் யுவன் ஷங்கர் ராஜா, வைரமுத்து மகன் கார்க்கி, கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், செம்மங்குடி சீனிவாச அய்யர் பேத்தி பிரியா ஆனந்த் என வாரிசுகள் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார் ஐஸ்வர்யா தனுஷ். ஒருவேளை பி.சி. ஸ்ரீராமுக்கு மகன் இருந்திருந்தால் நான் இந்தப் படத்தில் இருந்திருக்கமாட்டேன் என்று கூட சொல்லலாம்.

சூதாட்டத்தை பின்புலமாகக் கொண்ட கதை இது. ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸும் கலக்க வேண்டிய விதத்தில் கலந்திருக்கும். இந்தப் படத்துக்காக ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கப்பலான லீ ராயல் கரீபியனில் படப்பிடிப்பு நடத்தினோம். நடுக்கடலில் ஒரு சொர்க்கம் என்பது போல் சகலவிதமான வசதிகளும் உள்ளடக்கிய அந்தக் கப்பலில் படப்பிடிப்பு நடத்துவது எல்லோருக்கும் வாய்க் காது.

ஏ.ஜி.எஸ் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் அது சாத்திய மாகும். பணம் செலவழித்தாலும் படப்பிடிப்புக்கு என்று கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். கப்பல் ஒரு நாடு போய்ச் சேர்ந்ததும் பயணிகள் ஊர் சுற்றிப் பார்க்க கரைக்குச் சென்றுவிடுவார்கள். அந்த சமயத்தில்தான் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கும்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் மூன்று பாடல்கள் இப்போதே சூப்பர் ஹிட். யுவன் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கார். ஒரு காதல் பாடலை ஜப்பானில் படமாக்கியுள்ளோம். அந்தப்பாடலை ‘பச்சை நிறமே பச்சை நிறமே...’ பாடல் போல் படமாக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா சொன்னார். அதற்காக கலர்ஃபுல் பூந்தோட்டத்தை தேடிப்பிடித்து படமாக்கியுள்ளோம். வழக்கமாக ஒரு பாடல் காட்சியை படமாக்க 60 பேர் வேலை செய்வோம்.

வெளிநாடு என்பதால் 20 பேர்தான் சென்றோம். அதிகாலை 3 மணிக்கு எழுந்து காலை டிபன், மதிய உணவு தயார் செய்து கொண்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து லொகேஷனுக்கு மதியம்தான் போய்ச் சேர முடியும். சூரியனும் நான்கு மணிக்கு அஸ்தமனமாகிவிடும். கிடைத்த கொஞ்ச நேரத்தில் நான்கு நாட்களில் அந்தப் பாடலைப் படமாக்கியது சவாலான விஷயம்.

முதல் பட டைரக்டர், இரண்டாவது பட டைரக்டர் என்பது போல் இல்லாமல் அனுபவசாலி டைரக்டர் போல் ஐஸ்வர்யா தனுஷ் வேலை செய்திருக்கிறார். அவருடன் வேலை செய்யும்போது ஒரு லேடி டைரக்டருடன் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் வராது. ஒரு சக இயக்குனராக நினைத்துதான் வேலை செய்தேன். ஏன்னா, அவர் அந்தளவுக்கு பக்குவமானவர்” என்கிறார் வேல்ராஜ்.

-எஸ்