ஹன்சிகாவின் ஆழமான நடிப்பு!



“எப்படி இருக்கீங்க?” அன்புடன் நலம் விசாரிக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ‘தடையறத் தாக்க’ படத்தில் மிரள வைத்தவர். கௌதம் வாசுதேவ் மேனனிடமிருந்து வெளிவந்த பெருமைக்குரிய மாணவர். இப்போது ‘மீகாமன்’ படம் ரிலீசாகவுள்ள சந்தோஷம்.‘மீகாமன்’னா?‘மீகாமன்’ என்றால் கப்பல் மாலுமி என்று சொல்லலாம்.

 அதுக்காக ஆர்யா தான் கப்பல் மாலுமி என்று நினைக்க வேண்டாம். கடலும், கப்பலும் கலந்த கதை இது. தரையில் நடக்கிற நிறைய  விஷயங்களை கேள்விப்படுகிறோமே, அதுபோல் இதில் கடலில் நடக்கும் நிறைய விஷயங்களைப் பற்றி  சொல்லியுள்ளேன். ஆக்ஷன் த்ரில்லர்தான் படத்தோட ஜானர். ஆனால் எந்த இடத்திலும் யதார்த்த மீறல் இருக்காது. டெக்னிக்கல் அசத்தலுக்காகவும் இந்தப் படம் பேசப்படும்.

ஆர்யா எப்படியிருக்கார்?

அவருக்கு படத்துல ஸ்ட்ராங் கேரக்டர். அதற்கு அவருடைய உடல் மொழி நன்றாக ஒத்துழைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன். இதுவரை ஆர்யாவை சாக்லெட் பாயாகத்தான் பார்த்திருக்கிறோம். இதில் ஆர்யாவுக்குள் கம்பீரமான ஆணழகன் தெரிவார். கேரக்டரை உள்வாங்கி நடிப்பது என்பது அனைவருக்கும் வசப்படாது.

அது ஆர்யாவுக்கு அனாயாசமாக கைகூடி வந்திருக்கு. ஆர்யா பழகுவதற்கு இனிமையான மனிதர், மிகச் சிறந்த நடிகர். தன்னை எப்போதும் டைரக்டரின் நடிகராகவேஅடையாளப்படுத்த நினைப்பவர். அவரிடம் ஒரு இயக்குனர் என்ன வேண்டும் என்றாலும், எப்படி வேண்டும் என்றாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். அந்தளவுக்கு சின்ஸியர் பெர்சன்.

ஹன்சிகாவுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு என்று பேச்சு அடிபட்டதே?

நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். ஹன்சிகா இன்வால்வ்மென்டோட நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். தோற்றப் பொலிவு, அழகு, சிரிப்பு தாண்டி அவருடைய ஆழமான நடிப்பை இதில் பார்க்கலாம். அவருடைய போர்ஷன் தனி பிட் போல் இல்லாமல் கதையோடு கலந்திருக்கும். அதை அவரும் புரிந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நெருக்கமான கிளாமர் காட்சிகளில் எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இசை?


தமன்-கார்க்கி கூட்டணியில் பாடல்கள் ஏற்கெனவே பெரிய ஹிட். படத்தின் முக்கால்வாசி பகுதியை கோவாவில் படமாக்கியுள்ளோம். அதை ஒளிப்பதிவாளர் ‘பேராண்மை’ சதீஷின் கேமரா கண்கள் மூலம் பார்க்கும் போது கூடுதல் அழகாகத் தெரியும்” என்கிறார் மகிழ் திருமேனி.

-ரா