காரம் நிறைந்த மசாலா!



புதுமுகம் ஸ்ரீபாலாஜி பிடியில் புதுமுகம் சோனி சிரிஷ்டா ரவுசு பண்ணும் ‘இஞ்சி முறப்பா’ புகைப்படங்கள் பின்னி பெடல் எடுக்கின்றன. புகைப்படம் போல் படமும் நன்றாக வந்த திருப்தியை இயக்குனர் எஸ்.சகாவின் முகத்தில் பார்க்க முடிந்தது. இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சினிமா பயின்றவர்.

‘‘இனிப்பு, காரம், மசாலா கலந்த  இஞ்சி முறப்பா தின்பண்டம் போல் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த தரமான மசாலா கதை இது. தங்கையைக் காதலித்து ஏமாற்றுகிறான் காதலன். தங்கையை வாழ வைப்பதற்கு அண்ணன் எடுக்கும் முயற்சிதான் படத்தோட ஒன் லைன் ஸ்டோரி.

என்ஜினியரிங் மாணவர் ஸ்ரீபாலாஜியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளேன். நான் அசோசியேட்டாக வேலை செய்த ஒரு படத்தின் இயக்குனர்தான் அவரை அறிமுகம் செய்துவைத்தார். குஜராத்தைச் சேர்ந்த சோனி சிரிஷ்டா தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏழெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் முடிந்த கையோடு இரண்டு தமிழ்ப் படங்களில் கமிட்டாகியிருக்கிறார். தமிழை உச்சரிக்கத்தான் ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால் கதையை நன்றாக உள்வாங்கி அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு வகையில் இந்தப் படத்துல ஹீரோவை விட அவருக்குதான் வேலை ஜாஸ்தி. இவர்களோடு கிருஷ்ணராஜ், ரிஷிகா என்ற இன்னொரு ஜோடியும் இருக்கிறார்கள். மறைந்த சிட்டிபாபு பிரமாதமாக காமெடி பண்ணியிருக்கிறார். அவர் நடித்த கடைசிப் படம் இதுவாகத்தான் இருக்கும்.

நயன்தாரா நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.ஆர்.கே.ராஜுதான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆந்திர அரசின் ‘நந்தி’ விருது வாங்கியவர். அவருடைய உழைப்பும், அனுபவமும் இதில் பெரிதாகப் பேசப்படும். அதேபோல் மணிசர்மாவும் தன்னுடைய வழக்கமான ஃபார்முலாவை விட்டு புது ஸ்டைலில் இசையமைத்திருக்கிறார்.

அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏன் இஞ்சி முறப்பா என்று பெயர் வைத்தேன் என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கும். நீங்க படம் பார்த்தா புரிந்து கொள்வீர்கள். அவ்வளவு கச்சிதமாக இருக்கும்” என்கிறார் எஸ்.சகா.

-எஸ்