கதாநாயகியைக் கடத்தி கல்யாணம் முடித்தவர்!



பாட்டுச்சாலை

புதுக்கோட்டை உலகநாதம்பிள்ளை சின்னசாமி என்கிற பி.யு.சின்னப்பா உலகநாதம்பிள்ளை - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு புதுக்கோட்டை அய்யனாபுரத்தில் பிறந்தார்.லாவணிக்கச்சேரி பாடும் உலகநாதம் பிள்ளை மைக் இல்லாமலே ஒரு மைல் தூரம் கேட்கும் வகையில் பாடுவார். மகனுக்கும் நாடகத்தின்மீது ஆர்வம் வந்தது. பட்டு வேட்டி சட்டையுடன் மங்கள வாத்தியம் முழங்க சின்னசாமியை பள்ளியில் சேர்த்தார்கள். 4ஆம் வகுப்போடு சரி, மார்கழி மாத பஜனைக் கோஷ்டியில் 8 வயதில் பாட ஆரம்பித்தார்.

இவரது குரலுக்கு கூட்டம் அதிகரித்தது. வீட்டருகே உள்ள குளத்தில் காலை 4 மணிக்கு கழுத்தளவு தண்ணீரில் மூழ்கிய படி கத்திக் கொண்டிருந்தவர் காரைக்கால் வேதாசல பாகவதர், திருவையாறு சுந்தரேச நாயனக்காரர் ஆகியோரிடம்  சங்கீத சிட்ஷை பெற்று 500 உருப்படிகள் கற்றார். பாய்ஸ் கம்பெனியில் துவங்கி அடுத்தடுத்து வேறு கம்பெனிகளில் நடித்தார்.

நாடகத்தில் இவர் பாடும் 'பக்தி கொண்டாடுவோம்...' பாடல் நாடக ரசிகர்களைக்  கவர்ந்தது. எந்த நாடகமாக இருந்தாலும் அந்தப் பாடலை ரசிகர்கள் பாடச்சொல்லி வேண்டுவார்கள். ஒருமணிநேரம் பாடுவார் சின்னசாமி. பாடி முடித்ததும் ஒப்பனை அறைக்குள் போவார். அங்கு இரண்டு பேர் விசிறி விட, காபி, சோடா அல்லது சுக்கு காபி அருந்திவிட்டு திரும்பி வந்தால், பாட்டுக்கான கைதட்டல் தொடர்ந்து கொண்டிருக்கும்.

தமிழரின் வீரக்கலைகளை முறைப்படி கற்றுக்கொண்ட சின்னசாமி 190 பவுண்டு தூக்கி மெடல் பெற்றவர். 'சதி அனுசுயா' நாடகத்தில் பி.யு.சி ஹீரோவாக நடிக்க, பெண் வேடமிட்டு ஜோடியாக நடித்தவர் எம். ஜி.ஆர். 'பாதுகாபிஷேகம்' நாடகத்திலும் இவருக்கு ஜோடி எம்.ஜி.ஆர்தான்.

 'பவளக்கொடி' நாடகத்தில் எதிரும் புதிருமான இவரும் பாகவதரும் இணைந்தார்கள். அர்ஜுனனாக பாகவதர்; பி.யு.சிக்கு கிருஷ்ணர் வேடம். பாகவதருக்கு கிடைத்த வரவேற்பு பி.யு.சிக்கு கிடைக்க வில்லை. 'சாக உமக்கு விதி வந்ததோ' என்று ஒப்பாரியுடன் பாடி நடித்தபோது ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். பாகவதர் முகம் வாடினாராம்.

இவரது முதல்படமாக 1936ல் 'சந்திரகாந்தா' வந்தது.  'சந்திரகாந்தா கொடி பறந்தாடுதே...' என்று இவர் பாடித் தோன்றிய டைட்டில் கைதட்டல் நிறைந்திருக்கிறது. சுண்டூர் இளவரசனாக வந்து 'கொஞ்சுமொழி அஞ்சுகமே...' என்ற டூயட்டிலும் ரசிகர்களை வளைத்தார். முதல் சம்பளம் 500 ரூபாய்.'யயாதி' படத்தில் 'இவ்வுல கில் என்போல் இன்னொருவர் உண்டோ யவ்வனம் அழகுள்ள மனிதன்...' என்ற கர்வப் பாடலும் 'மதுரவானில் உனை மறந்து...' என்ற காதல் பாடலும் ரசிகர் களால் கொண்டாடப்பட்டன.

 'பிருதிவிராஜ்' படத்தில் நடித்த சகுந்தலாவுடன் இவருக்கு காதல் வந்தது. தயாரிப்பாளர் டி.ஆர். சுந்தரத்துக்கும் அந்த அம்மணியின் மீது மோகம் இருந்தது. பி.யு.சியை மிரட்டினார் சுந்தரம். அவரை மிரட்டியதோடு சகுந்தலாவைத் தூக்கிக் கொண்டு போய் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

‘மாத்ருபூமி' படத்தில் இவர் பாடிய 'நமது ஜன்ம பூமி நமது ஜன்ம பூமி உடலும் உயிரும் ஜென்மமும் விடுதலைக்கே உதவுவோம்...' பாடலுக்காக கிராமபோன் தகடுகள் லட்சம் பிரதிகள் விற்றன. அந்தப் படத்துக்கு தடை வந்தபோது பாகவதர் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்களாம். 'மாத்ருபூமி' தோல்விகண்டதும் பி.யு.சி புதுக்கோட்டைக்குச்சென்று முக்கால்வாசி சாமியாராக மாறிவிட்டார்.

சிறிய இடைவெளிக்குப்பின் 'உத்தமபுத்திரன்' படம் இவருக்கு மறுவாழ்வும் பெருவாழ்வும் தந்தது. 2 வேடங்களில் தோன்றிய சின்னப்பாவை அதிசயமாகப் பார்த்தார்கள் ரசிகர்கள்.   'செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என்று பாடி, பாரதியாரின் பாடலை திரையில் பாடிய முதல் நாயகன் என்ற பெருமை பெற்றார்.

 'ஆர்யமாலா படத்தில் சின்னப்பாவுக்கு  10 வேடங்கள். ஆனந்த ரூபினியே ஆர்யமாலா...,   சிவகிருபையால் புவிமேல் மாதா உன்னைத் தெரிந்து உள்ளமே மகிழ்ந்தேன்... ஸ்ரீமதியே உனை நான் கண்டு ஆவல் கொண்டதினால்..., வளையல் நல்ல வளையல்..., ஒரு ஏகாலியைப்போல இந்த வேகா வெயிலின் மேலே... என அத்தனை பாடல்களிலும் ரசிகர்களை ஈர்த்தார்.

'கண்ணகி' படத்தில் இவர் கோவலன், கண்ணாம்பா கண்ணகி. உடுமலை நாராயணகவி பாடல்களுக்கு இசை எஸ்.வி. வெங்கட்ராமன். 'அன்பில் விளைந்த அமுதமே அன்னமே என் கண்ணகி', 'வந்தனள் ஒரு சுந்தரி திருமங்கை போலொரு மாது-கொஞ்ச வயதுதான் நல்ல சாது-விசுவாசமேவும் ஜவ்வாது...',

 ‘மானமெல்லாம் போனபின்னே வாழ்வதுதானொரு வாழ்வோ...' என்ற பாடல்களுடன் 'பத்தினியே உன்போல் இத்தரை மீதினில்...'பாடலில் 'நண்டு சிப்பிவேய் கதலி நாசமுறுங்கால் தான்கொண்ட கருவையே அழிக்கும் கொள்கையதுபோல்' என்கிற உச்சரிக்க கடினமான வார்த்தைகளையும் பிசிறு தட்டாமல் பின்னியெடுத்தார் சின்னப்பா.- 'மஹாமாயா' படத்தில் 'மாயமதன் நோயால் மனம் வருந்துறேனடி மாயா' என்றொரு பாடல்.

காட்சிப்படி இளம்வயது காதலி மஹாமாயாவை நினைத்து 'மகாமாயா வரும் நேரமிதே' எனப் பாடுவார். மனைவி வந்ததும் நிறுத்தி, 'மனோரமா என் ஜீவமணியே வா' என மாற்றிப் பாட கைதட்டல் தியேட்டர் திரையையே கிழிக்கும் அளவு கிளம்பியதாம்.

'ஜகதலப்பிரதாபன்' படத்தில் ஒரே காட்சியில் நான்கு சின்னப்பாக்கள். பாட்டு, கொன்னக்கோல், வயலின், மிருதங்கம், கஞ்சிரா என அத்தனை வாசிப்பும் இவரே.தனிப்பாடலாக இசைத்தட்டு அமோக விற்பனையானது.

இது ஓராண்டு ஓடிய படம். 'ஹரிச்சந்திரா'வில் இவரது 'காசிநாதா கங்காதரா', 'இதுவே புண்ணியபூமி', 'சத்யநீதி மாறாது இம்மாதை வாங்குவோர் உண்டோ...' பாடல்களுக்கு அமோக வரவேற்பு. 'கிருஷ்ணபக்தி'யில் 'பகலில் கிருஷ்ணபக்தி இரவில் காம லீலைகள்’, செங்கமலம் என்றொரு தாசி, 'உலகினில், பூவையர் கற்பின் பெருமை' பாடல்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. அந்தப்படம் பார்த்து அப்படி இப்படி இருந்த பல குடும்பஸ்தர்களும் திருந்தினார்களாம்.

'ரத்னகுமார்' படத்தில் இவருக்கு ஜோடி பானுமதி.பி.யு.சி குடித்துவிட்டு வருவது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ஸ்டுடியோவில் இனி குடிக்கமாட்டேன் என்றவர் படம் முடியும் வரை வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கிறார். 'நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே’ உள்ளிட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. அந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு சின்ன வேடம். 'கேலிமிகச்செய்வான்' பாடலை சாரங்கா, கானடா, செஞ்சுருட்டி, அசாவேரி என ராகமாலிகையாக ஒரே மூச்சில் பாடி அசத்தினார் சின்னப்பா.

அந்தப் படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் மதுரையில் விமானத்திலிருந்து வீசப்பட்டன. 'மங்கையர்க்கரசி'யில் 'பார்த்தால் பசி தீரும் பஞ்சுவதனச் செங்கனி வாய்ச்சிரிப்பை’ பாடலுக்கு பலத்த வரவேற்பு. படம் ஒரே நேரத்தில் 4 தியேட்டர்களில் வெளியானது அப்போதைய ரசிகர்களை வியக்கவைத்தது.

'வனசுந்தரி’ சின்னப்பாவின் கடைசிப் படமாக அமைந்தது. 'எண்ணும் எழுத்தும் இரு கண்னாகும்,கண்ணில் விளையாடும் இன்பக் காதல் கனவே வா’, ‘நமஸ்தே நமஸ்தே’, பாடல்கள் ரசிக்கப்பட்டன. கடைசி காலத்தில் வாய்ப்பு இல்லாததால் புதுக்கோட்டைக்கே திரும்பிவிட்டார் சின்னப்பா. இவரது மரணம் இயற்கையா, தற்கொலையா என்கிற கேள்விக்கு இதுவரை விடை இல்லை.

அடுத்த இதழில்...
பாடலாசிரியர் அண்ணாமலை!

நெல்லைபாரதி