வந்தார்கள் போனார்கள் வருவார்கள்!



தமிழ்நாடு அரசு 2014ஆம் ஆண்டில் இத்தனை பேரை வேலைக்கு எடுத்திருக்குமா என்று தெரியவில்லை. அத்தனை புதுமுக நடிகர் நடிகைகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் அறிமுகமான நடிகைகள் 100க்கும் அதிகம். ஹீரோக்களின் எண்ணிக்கையும் 100க்கும் கூடுதல். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு அடுத்து எங்கே போனார்கள்? என்ற கேள்வி களுக்கு தெளிவான பதில்கள் இல்லை.

கொஞ்சம் களையான முகம், நீளமான தலைமுடி, மாநிறத்தை தாண்டிய நிறம், உடன் வர குண்டான ஒரு அம்மா, அல்லது கைப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு வரும் ஒரு அப்பா அல்லது சஃபாரி சூட்டுடன் செக்யூரிட்டி மாதிரி வரும் ஒரு அங்கிள் - இதுதான் ஒரு பெண் சினிமாவில் நடிகையாவதற்கான தகுதியாகிவிட்ட பிறகு 100 என்ன அடுத்த ஆண்டு 200 பேர் வேண்டுமானாலும் அறிமுகமாவார்கள்.

சினிமா நடிகையாகிவிட்டால் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைத்து விடும். பார்ட்டி, ஃபங்ஷனுக்கு கூப்பிடுவார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும், போகிற இடத்தில் ஆட்டோகிராஃப் கேட்பார்கள் என்பதுதான் இவர்கள் கணக்கு, சினிமா ஒரு கலை. அது மக்களை ஊடுருவி துளைக்கிற சக்தி வாய்ந்த ஆயுதம்.

அதில் நம் பங்கிற்கு என்ன செய்யப் போகிறோம். அதில் செய்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை.

இந்த ஆண்டு சுமார் 200 படங்களுக்கு மேல் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் 200 ஹீரோ, ஹீரோயின்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அதாவது சராசரியாக 100 படங்கள் புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள் நடித்த படங்கள் வெளிவந்திருக்கின்றன. அறிமுகமான பெரும்பாலான நடிகைகள், நடிகர்கள் அடுத்த படம் கிடைக்காமல் ஊருக்குச் சென்று விட்டார்களா? அல்லது அடுத்த முயற்சியில் இருக்கிறார்களா? அல்லது வேறு பணிகளுக்குச் சென்று விட்டார்களா? திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்களா? என்பது தெரியாது. அவர்களின் கனவு கலைந்து போயிருக்கும் என்பது மட்டும் நிஜம். பலருக்கு சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்திருக்கலாம்.

இதையும் தாண்டி சில புதுமுகங்கள் கவனிக்க வைத்தார்கள் என்பதுதான் ஆறுதலான விஷயம். 'குக்கூ'  படத்தில் பார்வையற்ற பெண்ணாக பண்பட்ட நடிப்பில் கவர்ந்தார் மாளவிகா நாயர். படம் ஹிட்டான பிறகு தேடி வந்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு படிக்கச் சென்றது சினிமா ஆச்சர்யம்.

அதிக பரபரப்புடன் வந்து எதிர்ப்புகளால் விலகிச் சென்ற 'இனம்' படத்தில் நடித்த சுகந்தா ராம் யதார்த்த நடிப்பால் கவர்ந்தார். படம் தோற்றாலும் ஜெயித்தது ‘அமரகாவிய’த்தில் நடித்த மியா ஜார்ஜின் நடிப்பு, ‘சதுரங்க வேட்டை’யில் மிரள வைத்தார் இஷாரா. ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின் ரேஞ்சுக்கு தண்ணி, தம்மு என்று மிரட்டினார் 'சரபம்' சலோனி லுத்ரா.

அகிலா கிஷோர் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் தனித்து கவனிக்க வைத்தார். 'காவியத் தலைவன்' அனைகா எளிய அழகில் ஈர்த்தார். 'கயல்' ஆனந்தி பெரிய கண்களால் விழுங்கினார். வடநாட்டுப் பெண்ணாக இருந்தாலும் 'மெட்ராஸ்' பெண்ணாக வாழ்ந்தார் கேத்தரின் தெரசா.

 ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் அறிமுகமான மம்முட்டி மகன் துல்கர் சல்மான், ‘இராமானுஜன்’ படத்தில் நடித்த சாவித்திரி பேரன் அபிநவ், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் அறிமுகமான சந்தோஷ் தவிர வேறு நடிகர்கள் யாரும் கவனம் பெறவில்லை. அடுத்த ஆண்டும், அடுத்தடுத்த படங்களும் இவர்களுக்காகக் காத்திருக்கும். வாழ்த்துவோம்!

-மீரான்