அருமருந்தாகும் பீட்ரூட்



இங்கிலீஷ் காய்கறியான பீட்ரூட், உள்ளும் புறமும் ஒரே நிறத்தை தன்னகத்தே கொண்ட உயர்ந்த குணம் கொண்டது. புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின்றது. ரத்தத்தில் அணுக்கள் அதிகரிக்க முக்கிய பங்களிக்கிறது. செரிமானத்தில் உள்ள கோளாறுகளை சரிப்படுத்தவும், ரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை பாதுகாத்து, உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.

மேலும் சருமத்தை பாதுகாத்து பொலிவான அழகை நமக்கு அளிக்கிறது. பீட்ரூட் சற்றே இனிப்பு கலந்த சுவையுடன் இருப்பதனால், இதை உணவில் சேர்த்துக்கொள்வதில் சிலருக்கு விருப்பம் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் அருமருந்தான பீட்ரூட்டை சற்று வித்தியாசமான முறையில் சமைத்து வழங்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருக்கும் இதை ஒரு விருப்பமான உணவாக மாற்றலாம்’’ என்கிறார் சமையல் கலைஞரான இளவரசி.

இளம் வயது முதலே சமையல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். திருமணத்திற்கு பிறகு மேலும் விரிவடைய, கணவர் கொடுத்த ஊக்கத்தினால், வெளி மாநில, வெளிநாட்டு உணவுகளை சமைக்க ஆரம்பித்தார். சீனா, இத்தாலி, திபெத், ஜப்பான், பர்மா, பாகிஸ்தான், தாய்லாந்து, நேபாளம், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உணவு முறைகளை தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுத்த பொழுது நல்ல பாராட்டு பெற்றுள்ளார்.

சமையல் கலையை இல்லத்தரசிகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக முகநூல் கணக்கில்  ‘Star’s Kitchen’ என்ற பக்கத்தை ஆரம்பித்து சமையல் முறைகளை பகிர்ந்து வருகிறார். அதன்மூலம் முகநூலில் நடைபெறும் சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். மேலும் பாரம்பரிய உணவுகள், புதுமையான உணவுகள் (innovative recipe) சமைப்பதில் ஆர்வம் கொண்டவர். தோழிகளுக்காக வித்தியாசமான பீட்ரூட் உணவினை இந்த இதழில் வழங்கியுள்ளார்.

தொகுப்பு: ப்ரியா