ருசி கூட்டும் ரகசியம் அருணா ஆனந்த்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi Monthly  Magazine

                     ‘‘அவங்களுக்கென்ன... சமைக்க ஆள் வச்சிருப்பாங்க... இல்லைன்னா தினம் மூணு வேளையும் ஸ்டார் ஹோட்டல்லேருந்து ஆர்டர் பண்ணி சாப்பிடுவாங்க...’’

பிரபலங்கள் குறித்த சாமானியப் பெண்களின் யூகம் கலந்த அபிப்ராயம் இதுதான்.

அப்படியில்லை தோழிகளே... சமையலில் சாதாரணப் பெண்களை விட அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள் பிரபலங்கள். எத்தனை பிசியாக இருந்தாலும், சமையலறை நிர்வாகத்தை அவர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. உதவிக்கு ஆள் இருந்தாலும், எல்லா இல்லத்தரசிகளையும் போலவே குடும்பத்தாருக்குத் தன் கைப்பட சமைத்துக் கொடுப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். முக்கியமாக, ‘சமைக்கத் தெரியாது’ என்பதை ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக சொல்லிக் கொள்வதில்லை!

இங்கே ஒவ்வோர் இதழிலும் ஒரு பிரபலத்தின் வீட்டுச் சமையலறைக்கு விசிட் செய்யப் போகிறோம். தனக்கும் சமையலுக்குமான உறவு, சென்டிமென்ட்ஸ், கிச்சன் கலாட்டா என சகலத்துடனும், தன் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி பற்றியும் பேசப் போகிறார்கள் உங்கள் மனம் கவர்ந்த பிரபலங்கள்... அட! என்ன தயக்கம்? வாருங்கள்... வி.ஐ.பி. வீட்டு கிச்சனுக்குள் போகலாம்!

இந்த இதழில் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணா...

புதிதாகக் குடிவந்த வீடு போல, அழகு கொஞ்சுகிறது அருணா ஆனந்தின் அபார்ட்மென்ட். கிச்சனில் கிளி கொஞ்சுகிறது. சமையலறை மேடையிலும் டைல்ஸிலும் முகம் பார்க்கலாம். அத்தனை பளிச்!

துருக்கியிலிருந்து வாங்கி வந்த டீ பாய்லர் மற்றும் காஃபி மேக்கர், மெக்சிகோவில் வாங்கிய குட்டி ஹேண்ட் மிக்சர், இடிக்கவும் தட்டவும் கையடக்க உரல் எனப் பழமைக்கும் இடமுண்டு இவரது கிச்சனில்!

‘‘கல்யாணத்துக்கு முன்னாடி வரை எனக்கு பால் கூடக் காய்ச்சத் தெரியாது. 96ல கல்யாணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்து, கிச்சனுக்குள்ள நுழைஞ்சதும் கண்ணைக் கட்டி காட்டுக்குள்ள விட்ட ஃபீலிங்!

கல்யாணமானதுமே அவரோட ஸ்பெயின் போயிட்டேன். தப்போ, தவறோ நான்தான் சமைச்சாகணும்... ‘ரொம்ப நேரமா பருப்பே வேகலை’னு அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்பேன். அப்புறம் தான் துவரம்பருப்புக்குப் பதிலா, கடலைப்பருப்பை வேக வச்சது தெரியும். ட்ரையல் அண்ட் எரர் முறையிலதான் சமையல் எனக்குக் கைவந்ததுன்னு சொல்லலாம்!

அவர்கூட நிறைய நாடுகளுக்குப் பயணம் பண்ணியிருக்கேன். முதல் வேலையா அங்க உள்ள ஸ்பெஷல் சாப்பாடு பத்திக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். வீட்ல அதை அப்படியே ட்ரை பண்ணிப் பார்ப்பேன். மெக்சிகன், தாய், லெபனீஸ், சைனீஸ், ஸ்பானிஷ், பல்கேரியன்-னு பல நாட்டுச் சமையல் எனக்கு அத்துப்படி.

ஆனந்த் சென்னைல இருந்தார்னா நிறைய ஃப்ரெண்ட்ஸும் விருந்தாளிகளும் வருவாங்க. நாங்க பியூர் வெஜிடேரியன். வர்றவங்களுக்குப் பிடிச்ச மாதிரியும் இருக்கணும், அதே நேரம் சைவமாகவும் இருக்கணும்னு நிறைய அயிட்டங்கள் பார்த்துப் பார்த்து சமைப்பேன். பெரும்பாலும் வெளிநாட்லயே இருக்கிறதால, சென்னை வந்தா, ஆனந்தோட சாய்ஸ் வீட்டுச் சாப்பாடுதான். அது வேணும், இது வேணும்னு கேட்கற ஆளில்லை அவர். லெமன் ரசம், முட்டைக்கோஸ் கறி இல்லைன்னா தயிர் சாதம், கூட ஒரு வத்தக் குழம்போ, பூண்டு குழம்போ இருந்தா போதும் அவருக்கு...’’ என்கிற அருணாவின் முதல் சமையல் அனுபவம் ரொம்பவே சுவாரசியமானது.

‘‘கல்யாணமானதும் அவருக்கு நான் சமைச்சுக் கொடுத்தது மஷ்ரூம் பிரியாணி. சமையல் புத்தகத்தைக் கையில வச்சுக்கிட்டு, அப்படியே ட்ரை பண்ணினது. 100 கிராம் தக்காளின்னா, அப்படியே அளந்து போடறது, இஞ்சியை ரெண்டு இன்ச்சா கட் பண்ணணும்னா, அளவு மாறாம வெட்டிப் போடறதுன்னு ரொம்ப மெனக்கெட்டுப் பண்ணினேன். ரிசல்ட் எப்படியிருக்குமோங்கிற பயம். ‘நல்லாருக்கே’னு அவர் பாராட்டினதும்தான் நிம்மதியாச்சு. அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும். அதே மாதிரி ரவுண்டா சப்பாத்தி இடறதுங்கிறது எனக்கு அப்பல்லாம் வரவே வராது. ‘சப்பாத்தியா இந்தியா மேப்பா’னு அவர் கிண்டலடிப்பார்.

என்ன சமைச்சுக் கொடுத்தாலும் குறை யே சொல்ல மாட் டார். கல்யாணமான டைம்ல இன்ஸ்டன்ட் ரசப் பொடி யை வெந்நீர்ல கரைச்சு, ‘இதுதான் ரசம்’னு வைப்பேன். தொட்டுக்க வாரத்துல எல்லா நாளும் உருளைக்கிழங்கு கறி. ‘ஏன்’னு ஒரு வார்த்தை கேட்டதில்லை. சமையல் நிறைய பெண்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்த அவங்களுக்குக் கிடைக்கிற நெகட்டிவ் விமர்சனங்களும் முக்கியக் காரணம். வீடு, ஆபீஸ்னு எத்தனை வேலைகள் இருந்தாலும், சமையலை ஒரு சுமையா நினைக்கிறதில்லை பெண்கள். காரணம், அவங்களோட அன்பு. அந்த அன்புதான் சமையலுக்கு ருசி கூட்டற முக்கியமான பொருள்ங்கிறது என் நம்பிக்கை. ‘நல்லாவேயில்லை’ங்கிற அந்த ஒற்றை வார்த்தை விமர்சனத்தை உதிர்க்கிறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் ஆண்கள் யோசிச்சா தேவலை...’’ - ஆண்களுக்கு அவசிய அட்வைஸ் சொல்கிற அருணா, சமையலில் சுவாரசியம் சேர்க்க ஐடியா தருகிறார்.



 எனக்கு இவ்ளோதான் தெரியும்னு ஒரே அயிட்டங்களையே திரும்பத் திரும்ப சமைச்சிட்டிருக்காதீங்க. புதுசு புதுசா ட்ரை பண்ணுங்க.

 உங்ககிட்ட இருக்கிற காய்கறிகளையும், மளிகை சாமான்களையும் வச்சு, வித்தியாசமா பரிசோதனை பண்ணிப் பாருங்க... நிச்சயம் நல்லா வரும்.

 வேக வச்ச துவரம்பருப்பும் பயத்தம்பருப்பும் எப்போதும் எங்க வீட்டு ஃப்ரிட்ஜ்ல இருக்கும். ஊற வச்ச சென்னாவும் இருக்கும். திடீர்னு ஒரு தால் பண்ணணுமா, சோளே பண்ணணுமா, சட்டுனு எடுத்து, நிமிஷமா பண்ணிடலாம். ஊற வைக்கிறது, வேக வைக்கிறது மாதிரியான வேலைகள்தான் சமையலை இழுத்தடிக்கிற விஷயங்கள். பனீர், பட்டாணி, தக்காளி விழுதும் கைவசம் இருக்கட்டும். இந்த மூணையும் வச்சு எத்தனையோ அயிட்டங்கள் பண்ணலாம்.

 சாம்பார், ரசத்தையே வேற மாதிரி செய்து கொடுங்க. எங்க மாமியார் வீட்ல கேரட் சாம்பார், உருளைக்கிழங்கு சாம்பார், காலிஃபிளவர் சாம்பார்னு விதம் விதமா செய்வாங்க. ஒவ்வொண்ணும் ஒரு டேஸ்ட்டுல இருக்கும். காய்கறிகளையும் வித்தியாசமா யூஸ் பண்ணிப் பாருங்க. ப்ராக்கோலி பருப்புசிலி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுவும் எங்க மாமியார் வீட்டு ஸ்பெஷல். ஒரு வாட்டி சாப்பிட்டா, விட மாட்டீங்க!

 ‘We eat our eyes first‘னு சொல்வாங்க. சாப்பாடு சுவைக்க மட்டுமில்லாம, பார்வைக்கும் பிரமாதமா இருக்க வேண்டியது அவசியம். என்னதான் நெய்யும் வெல்லமும் சேர்த்து செம டேஸ்ட்டியா சர்க்கரைப் பொங்கல் பண்ணினாலும், அதுக்கு அழகு சேர்க்கிற முந்திரியும் திராட்சையும் இல்லாட்டா, யாருக்கும் சாப்பிடத் தோணாதில்லையா!

மறக்க முடியாத தருணம்!

ஆனந்த் அப்ப பெர்லின்ல விளையாடிட்டிருந்தார். அவரோட பர்த்டே அன்னிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஆசை. நானே என் கைப்பட அவருக்குப் பிடிச்ச சாக்லெட் கேக் ரெடி பண்ணி, அவர் ரூமுக்குள்ள வர்றதுக்குள்ள கேன்டில் ஏத்தி ரெடியா வச்சு, அவர் உள்ள நுழைஞ்சதும், ‘ஹேப்பி பர்த்டே’ பாடறதா பிளான். எல்லாம் ரெடி... மேட்ச் முடிஞ்சு அவர் வந்து கதவைத் தட்ட... மெழுகுவர்த்தியை ஏத்த வத்திப் பெட்டியைக் கொளுத்தறேன், கொளுத்தறேன்... எரியவே இல்லை. அப்புறம் ஒருவழியா ஏத்தி வச்சு, கதவைத் திறந்தேன்... அவர் அதை எதிர்பார்க்கலை... ரொம்ப சந்தோஷப்பட்டார்!

சென்னையில் பிடித்த ரெஸ்டாரன்ட்...

பார்க் ஹோட்டல்ல லோட்டஸ்... அடுத்து ஹயாத்ல ‘ஸ்பைஸ் மார்க்கெட்.’ ஹயாத்ல மேங்கோ சாலட் ரொம்ப ஸ்பெஷல். எங்கக் குழந்தை அகிலுக்கு இப்ப பத்து மாசமாச்சு. அவன் வயித்துல இருந்தப்ப, நான் நிறைய சாப்பிட்டது அந்த மேங்கோ சாலட்தான். புளிப்பு, காரம், இனிப்புன்னு அந்த டேஸ்ட்டை பத்தி நினைச்சாலே நாக்கு ஊறும்!

தர்மசங்கடமான நேரம்...

ஸ்பெயின் போனப்ப, அங்கிள் கொடுத்த சுமீத் மிக்சியையும் கொண்டு போனேன். சட்னி அரைக்க மிக்சியை ஆன் பண்ண, அக்கம்பக்கத்துல உள்ளவங்க மிக்சி சத்தம் கேட்டு, அலறியடிச்சு ஓடி வர... தர்மசங்கடமா போச்சு. அங்கல்லாம் மிக்சிக்கு வேலையே இல்லையாம். தாளிப்புங்கிற விஷயமும் அவங்களுக்கு ரொம்ப புதுசா இருந்தது.

ஃபேவரைட் சாப்பாடு

நான் பாலக்காடு... என் கணவருக்கு மதுரை... அம்மா வீட்டு ஸ்பெஷல்னா ஓலனும் ரசமும், மாமியார் வீட்டு ஸ்பெஷல்னா லெமன் ரசமும் என்னோட ஃபேவரைட்.

ஆனந்துக்கு ஆல்டைம் ஃபேவரைட்னா சாக்லெட் கேக்கும், பாதாம் அல்வாவும்.

ஸ்பெஷல் ரெசிபி
Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine
பனானா நட் பிரெட்

என்னென்ன தேவை?

மைதா - 1 கப், கோதுமை மாவு - அரை கப், சர்க்கரை - 1 கப், கனிந்த வாழைப்பழம் - 3, பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1/3 கப், பட்டைத் தூள் - அரை டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, பால் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வால்நட் - சிறிது.

எப்படிச் செய்வது?

அவனை 350 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்கவும். வாழைப்பழங்களை மசிக்கவும். வெண்ணெயை உருக்கவும். தட்டையான மரக் கரண்டியால், உருக்கிய வெண்ணெயை மசித்த வாழைப்பழத்தில் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரை, வெனிலா எசென்ஸ், பால், பேக்கிங் சோடா, பட்டைத்தூள் எல்லாவற்றையும் அதில் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக மாவைச் சேர்த்துக் கலந்து, வால்நட்டும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் கலவையைக் கொட்டி, 45 முதல் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். வெந்துவிட்டதா எனத் தெரிந்து கொள்ள சுத்தமான பல் குச்சியை கலவையில் செருகிப் பார்க்கலாம். மாவு, குச்சியில் ஒட்டாமல் வந்தால், பிரெட் தயார் என அர்த்தம். வெளியே எடுத்து ஸ்லைஸ் செய்து, விருப்பப்பட்டால் ஐசிங் சர்க்கரையைத் தூவிப் பரிமாறலாம்.

சாக்லெட் மூஸ்

என்னென்ன தேவை?

டார்க் சாக்லெட் - 85 கிராம், பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப் பழத்தோல் - 1 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் (மேலே தூவ இன்னும் சிறிது தேவை), லைட்டான காபி டிகாக்ஷன்-2 டேபிள் ஸ்பூன், வெனிலா எக்ஸ்டிராக்ட் - அரை டீஸ்பூன், முட்டை வெள்ளைக்கரு - 2, கேஸ்டர் சுகர் - 1 டேபிள் ஸ்பூன், கிரீம் - 1/3 கப், ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுத் தோல் - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

சாக்லெட்டை மிக நைசாக உடைத்துக் கொள்ளவும். அகலமான கிண்ணத்தில் போட்டு, இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதற்குள் இந்தக் கிண்ணத்தை வைக்கவும். கோகோவையும் வெனிலாவையும் 2 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, சாக்லெட் கலவையில் விடவும். தண்ணீர் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்றாகக் கிளறி, இறக்கவும். சாக்லெட் கலவை, தண்ணீர் உள்ள பாத்திரத்திலேயே இருக்கட்டும். அவ்வப்போது, சாக்லெட் உருகிவிட்டதா எனப் பார்த்துக் கிளறி விடவும். உருகியதும், அதில் காபி டிகாக்ஷனை விடவும். கெட்டியான சாக்லெட் கலவை நீர்த்துக் கொள்ளும்.

 அதில் ஆரஞ்சுத் தோல் சேர்த்து, லேசாக ஆற விடவும். முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, பிறகு அதில் சர்க்கரையும் சேர்த்து, கெட்டியாகவும் பளபளப்பாகவும் வரும் வரை அடிக்கவும். ஆறிக்கொண்டிருக்கும் சாக்லெட்டில் கிரீம் சேர்த்து அடிக்கவும். அகலமான மெட்டல் ஸ்பூனால் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையில் மூன்றில் ஒரு பாகத்தை சாக்லெட் கலவையில் விட்டு, பிறகு மீதியையும் மெதுவாக சேர்க்கவும். கலவையை மிக மெதுவாக, மென்மையாகக் கலக்க வேண்டும். இல்லாவிட்டால், மூஸ் பெரிதாக, உப்பலாக வராது. இந்தக் கலவையை நான்கைந்து சின்ன கப்புகளில் விட்டு, இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும்.

குளிர்ந்ததும், மூஸை வேறு தட்டில் மாற்றி, மேலே கோகோ பவுடர் தூவி, ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுத் தோலால் அலங்கரித்துப் பரிமாறவும்.
- ஆர்.வைதேகி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி