24 மணி நேரம் - ரேவதி சங்கரன்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

                      பிரபலங்களின் நேர நிர்வாக ரகசியம்! ரேவதி சங்கரன்

“இன்னைக்கு ஆண்களுக்கு இணையா பெண்களும் வேலைக்குப் போறாங்க. முன்னெல்லாம் கூட்டுக் குடும்பங்களா இருந்தாங்க... பிரச்னை இல்லை. இன்னைக்கு தனி வாழ்க்கை முறைக்கு வந்திட்டதால பல பிரச்னைகள் வருது. குடும்பத்துல எல்லாரும் அவங்கவங்க பொறுப்பை உணர்ந்து நேரத்தைத் திட்ட மிட்டுச் செலவு செஞ்சா எல்லாப் பிரச்னைகளையும் தவிர்க்கலாம்...’' - அக்கறையாகப் பேசுகிற ரேவதி சங்கரன், சொல்வதோடு மட்டுமின்றி, செயலிலும் காட்டுகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாட்டு, பேச்சு, நடனப்பயிற்சி என எந்நாளும் பரபரவென சுழலும் ரேவதி சங்கரன், வீட்டுப்பணிகளுக்கு என்று வேலைக்காரர்களை வைத்துக் கொள்வதில்லை என்பது வியப்பு. எல்லா வேலைகளையும் கணவனும் மனைவியும் பகிர்ந்தே செய்கிறார்கள்.

“காலையில எழுந்ததில இருந்து இரவு படுக்கிற வரைக்கும் சதா வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா வாழ்க்கையில அலுப்பு வந்திடும். இன்னைக்கு பெண்கள் வேலைக்குப் போனாலும்கூட சமையலறை அவங்க பொறுப்புலதான் இருக்கு. இது காலம் காலமா இருக்கிற நடைமுறை... நினைச்சவுடனே மாத்த முடியாது. ஆனா, வேலைகளை சுலபமாக்கிக்க வழியிருக்கு.

நம்ம அப்பத்தா, ஆயா காலத்தில வீட்டுல டிவி இல்லை, மிக்ஸி இல்லை, கிரைண்டர் இல்லை. ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும்தான். வயக்காட்டு வேலைகளைப் பாத்துக்கிட்டு, ஆட்டுக்கல்லு, அம்மியில அரைச்சு சமையல் பண்ணி வீட்டு நிர்வாகத்தையும் கவனிச்சுக்கிட்டு தண்டட்டி தழையத் தழைய அவங்கள்லாம் வாழ்ந்தாங்க. இன்னைக்கு சகல வசதிகளும் இருக்கு. திட்டமிடல் மட்டும் குறைவா இருக்கு. எதுக்கு முதன்மை தரணும், எதை பின்னுக்குச் செய்யணும்னு முடிவு செய்யணும். காலையில எழுந்து, பையனைக் கிளப்பி, புருஷனைக் கிளப்பி, தானும் கிளம்பி ஆபீஸ் போகணும்கிற நிலை பல குடும்பத்தலைவிகளுக்கு இருக்கு. சமைக்கிற நேரத்துல மிளகாய், மல்லி, பருப்பு, தேங்காயை அரைச்சுக்கிட்டிருந்தா லேட்டாகத்தான் செய்யும். எல்லாத்தையும் ஓய்வு நேரத்தில ரெடிமேடா செஞ்சு வச்சுக்கிட்டா பிரச்னை இருக்காது.

உதாரணத்துக்கு தேங்காப்பூ... தேங்காயை உடைச்சு, துருவி பூவெடுக்க லேட்டாகும். ஓய்வுநேரத்தில தேங்காயை வாங்கி உடைச்சு, பின்னாடி இருக்கிற ப்ரௌன் தோலை சீவி எடுத்துட்டு, தேங்காயை சின்னதா வெட்டி மிக்ஸியில அரைச்சு ஃப்ரீசர்ல வச்சுக்கலாம். பொரியலுக்குத் தேவைப்பட்டா கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கலாம். பத்து நாளைக்குக் கெடாது.

கால்கிலோ பழைய புளி, கால்கிலோ புதுப்புளி சேர்த்து மூழ்குற அளவுக்கு தண்ணி ஊத்தி குக்கர¢ல வச்சு 2 விசிலுக்கு இறக்கி வச்சுட்டு மறுநாள் காலையில குச்சி, கொட்டைகளை எடுத்து வீசிட்டு, மிக்ஸில ஒரு அடி அடிச்சு ஃப்ரீசர்ல வச்சுட்டா, தினமும் புளியைக் கரைச்சுக்கிட்டிருக்கத் தேவையில்லை. ரசத்துக்கு 1 ஸ்பூன், சாம்பாருக்கு ஒன்னரை ஸ்பூன், புளிக்குழம்புக்கு 2 ஸ்பூன் ஊத்தினா போதும். 6 மாதம் வரை கெடாது.

நேரம் கிடைக்கிறப்போ இதையெல்லாம் செஞ்சு ரெடியா வச்சுக்குவேன். கோதுமை மாவை தண்ணியும் எண்ணெயும் கலந்து அடிச்சு உருட்டி வடை மாதிரி தட்டி ஃப்ரீசர்ல வச்சுட்டா தேவைப்படுறப்போ எடுத்து சப்பாத்தி போட்டுக்கலாம். புதுசா மாவை அடிச்சு பிசையற நேரம் மிச்சம். இதெல்லாம் வேலையை எளிமையாக்குற வழிகள்...’’ என்கிறார் ரேவதி சங்கரன்.

“பெரும்பாலும் பெண்கள் சீரியல்களுக்கு நிறைய நேரத்தை செலவு செய்றாங்க. நானும் பல சீரியல்கள்ல நடிச்சவதான். சீரியல்கள் பாக்கிற நேரத்தை திட்டமிட்டு அதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைகளை செஞ்சிடணும்... அதேபோல குடும்ப நிர்வாகத்தில ஆண்களுக்கும் பங்கிருக்கு. அதை ஆண்கள் உணர்ந்துட்டா எந்தப் பிரச்னையும் வராது. என் குடும்பத்தில் நான் காபி போட்டா என் கணவர் சப்பாத்தி போடுவார். இத்தனைக்கும் அவர் பெரிய கம்பெனியில பொது மேலாளரா இருந்த ஆடிட்டர். கணவன்-மனைவிக்குள்ள ஈகோ இருக்கக்கூடாது. சூட்டிங் முடிச்சுட்டு களைப்பா வீட்டுக்கு வந்தா 'காபி குடிம்மாÕன்னு டம்ளரை நீட்டுவார். இந்த வயசுல இந்த அன்பும் புரிதலும்தான் எங்களை உற்சாகமா இயங்க வைக்குது...’' என்று சிரிக்கிறார் ரேவதி சங்கரன்.

ரேவதி சங்கரன் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இரு பிள்ளைகளுமே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். அன்பும் ஆதரவும் பகிர்வும் மகிழ்ச்சியுமாக அர்த்தத்தோடு நகர்கிறது ரேவதி சங்கரனின் நாட்கள்!

ரேவதி சங்கரனின் நேர நிர்வாகம் எப்படி?

நான் மதிய தூக்கத்தை விரும்புறதில்லை. நேரம் கிடைக்கும் போது சமையலுக்குத் தேவையான ஆயத்தங்களை செஞ்சு வச்சிருவேன். எங்க வீட்டு ஃப்ரீசர்ல எல்லாப் பொருளும் ரெடியா இருக்கும். புளியோதரை வேணும்னா அதுக்குப் பொடி அரைச்சு வச்சிருக்கேன். பொடியைப் போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்தா, ரெண்டு நிமிஷத்தில புளியோதரை ரெடி!

அதிகாலை 5.00 மணி

என் கணவர் 5 மணிக்கெல்லாம் எழுந்திடுவார். தோட்டம் பராமரிக்கிறது, தண்ணி ஊத்துறதுன்னு கடகடன்னு வேலையில இறங்கிடுவார். இடையில காப்பியும் கலந்து வச்சிருவார்.

அதிகாலை 5.30 மணி

நான் அஞ்சரை மணிக்கு எழுந்திருப்பேன். அஞ்சே முக்காலுக்கு ஒரு எஃப்எம்ல ‘அபிராமி அந்தாதி’ பத்தி பேசறேன். அது எப்படி வருதுன்னு கேட்டாகணும். எழுந்தவுடனே வாசல் தெளிச்சு கோலம் போடுவேன். பல் துலக்கிட்டு, காபியை கையில எடுத்துக்கிட்டு எஃப்எம்ல உக்காந்திருவேன். பேப்பர், வார இதழ்கள் பாப்பேன்.

காலை 8.00 மணி

காலை டிபனா நாங்க ஒரு வித்தியாசமான சூப் குடிப்போம். அதுக்கு என் கணவர் காய்கறி வெட்ட ஆரம்பிச்சுருவார். அந்த சூப் ரொம்பவே உடம்புக்கு நல்லது. வெற்றிலை, ஓமவல்லி, அறுகம்புல், கேரட், பீட்ரூட், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாத்தையும் சேத்து குக்கர்ல 2 சத்தம் வர்ற அளவுக்கு வேக வச்சு அரைக்கணும். அதோட வறுத்து அரைச்ச கொள்ளுப்பொடி, கொஞ்சம் சுக்குப்பொடி, மிளகுப் பொடி சேர்த்து குடிப்போம். இதுக்கிடையில நான் குளிச்சுட்டு ரெடியாயிடுவேன்.

காலை 9.00 மணி

சூட்டிங் அல்லது வேறு நிகழ்ச்சிகள், வேலைகள் இருந்தா, சப்பாத்திக்கு சைடிஷ் மட்டும் செஞ்சு வச்சுட்டு கிளம்பிடுவேன். என் கணவர் 12 மணிக்கு ஃப்ரீசர்ல இருந்து மாவெடுத்து சப்பாத்தி போட்டு சாப்பிட்டுருவார். ஒருவேளை வெளி வேலைகள் இல்லைன்னா கம்ப்யூட்டர்ல உக்காந்திருவேன். பாரம்பரிய சமையல், வைத்திய முறைகள், பழமொழிகள், உபகதைகள் எல்லாத்தையும் தொகுத்துக்கிட்டிருக்கேன். மதியம் 12 மணி வரைக்கும் அந்த வேலைகள் ஓடும்.

மதியம் 12.00 மணி

பேங்ல வேலை இருந்தா என் கணவர் போயிடுவார். இல்லைன்னா தூங்கப் போயிடுவார். நான் தேவையான சமையல் பொடிகள் அரைக்கிறது, தோட்டத்தை ஒழுங்குபடுத்துறது மாதிரி வேலைகள்ல இறங்கிடுவேன். தினமும் வீட்டைக் கூட்டித் தொடச்சிருவேன். ஒருநாள் வேலைப்பளுவால துடைக்க முடியாட்டி மறுநாள் கண்டிப்பா துடைச்சுருவேன். வீடு சுத்தமா இருந்தாத்தான் மனசு சுத்தமா இருக்கும்.

மதியம் 3.00 மணி

சூட்டிங் போனா ஒருநாளைக்கு 10 எபிசோடாவது முடிக்காம வர்றதில்லை. பரபரன்னு வேலை பாப்பேன். காலையில போனா அதிகபட்சம் 4 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திருவேன். திருமணம், பாடல் நிகழ்ச்சிகள், நடனப்பயிற்சிகள் மாதிரி இருந்தா மாலை நேரத்தை ஒதுக்குவேன். அது மனசுக்கு நிறைவா இருக்கும். வெள்ளிக்கிழமைகள்ல ஏதாவது கோயிலுக்குப் போறதுண்டு. எதுவும் இல்லைன்னா, வீட்டுக்கு வந்தவுடனே, கணவர் கலந்து வச்சிருக்கிற காபியைக் குடிப்பேன். அமிர்தம் மாதிரி இருக்கும். களைப்பு எல்லாம் காணாம போயிடும். கொஞ்சநேரம் ரெண்டுபேரும் உக்காந்து பேசிக்கிட்டிருப்போம். சூட்டிங்ல நடந்ததெல்லாம் நான் சொல்லுவேன். வீட்டுல நடந்ததை அவர் சொல்லுவார்.

மாலை 5.00 மணி

தேவைப்பட்டா உப்புமா, தோசை மாதிரி எளிமையா ஏதாவது டிபன் செய்வேன். என் கணவர் காய்கறிகள் வெட்டி சைடிஷ் செய்வார். யாராவது நண்பர்கள், உறவுக்காரர்கள் வந்தா ஜாலியா பேசிச் சிரிப்போம். இல்லைன்னா 7 மணி, 8 மணிக்கு என் கணவர் படுக்கப் போயிடுவார். நான் நாளைய வேலைக்கு தகவல்கள் சேகரிக்கிறது, டைப் பண்றது, எழுதுறது, படிக்கிறதுன்னு வேலைகள்ல இறங்கிடுவேன். அதிகபட்சம் 9 மணிக்கு படுப்பேன்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி