என் ஜன்னல்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,AKungumam Thozhi Monthly  Magazine

          உள்ளம் கவர்ந்த விஷயங்களைப் பிரபலங்கள் பகிர்ந்துகொள்ளும் பகுதி

சினிமா ஆசிரியரான சிறுமி

13 வயது சிறுமி ஆசிரியராக்கப்படுவதை மையமாகக் கொண்ட கதை. சீனாவின் பின்தங்கிய கிராமமே கதைக்களம். வறுமை தின்னும் பிள்ளைகளுக்கு வழக்கம் போலவே கல்வியில் ஆர்வமில்லாத நிலை. பள்ளிக்கு வருவது எட்டாக்கனியே.

ஆசிரியர்களுக்கு பிள்ளைகளை பள்ளியில் தக்கவைப்பது பெரும் பாடு. இச்சூழலில் அப்பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் விடுப்பு எடுக்கிறார். தன் சம்பளப் பணத்தில் கொஞ்சம் பணத்தை இச்சிறுமிக்குத் தருவதாகக் கூறி பள்ளியை பார்த்துக்கொள்ளக் கூறுகிறார். பள்ளியில் இருந்து ஒரு குழந்தையும் வெளியேறிவிடக் கூடாது என்பதே ஆசிரியரின் உத்தரவு.

சிறுமி புதிய ஆசிரியராகிறாள். தன்னையொத்த குழந்தைகளுக்கும், வயதில் குறைந்த குழந்தைகளுக்கும் பாடம் நடத்துகிறாள். நாட்கள் கடக்கின்றன.
ஒரு நாள் பள்ளியிலிருந்து 9 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போகிறான். வறுமை பொறுக்க முடியாமல் அருகில் உள்ள ஒரு நகரத்துக்கு தப்பியோடி இருப்பது தெரிய வருகிறது. ஆசிரிய சிறுமிக்கு பயம் வருகிறது. தன் ஆசிரியருக்கு பதில் சொல்ல வேண்டுமே!

பக்கத்து நகரத்துக்கு பையனை தேடிச் சென்ற அச்சிறுமி அவனை கண்டுபிடிக்கிறாளா? அவளுடைய ஆசிரியர் பதவி தப்புகிறதா? இதுவே படத்தின் முடிவு.

1960-70களில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சியின் தொடர்ச்சியாக, சீனாவில் 1990களில் கல்விப் புரட்சி ஏற்படுவதை இப்படம் பேசுகிறது.

‘நாட் ஒன் லெஸ்’ என்ற பெயரில் வெளியான இப்படத்தை ஷாங் இமு இயக்கியிருக்கிறார். ஷீ சியாங் ஷெங் எழுதிய ‘எ சன் இன் த ஸ்கை’ கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தகம் அம்மாக்குழந்தை எனும் அதிர்ச்சி

‘சைனா கெய்ரெற்சி’ என்ற ஆப்ரிக்க குழந்தைப் போராளியின் சுயசரிதை நூல். பல மாதங்களுக்கு என்னைத் தூங்க விடாமல் இம்சித்தது ‘குழந்தைப் போராளி’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ள அப்புத்தகம். நினைக்கும்போதெல்லாம் கண்களில் நீர் வழியச் செய்யும் வரிகள். குழந்தைத் தொழிலாளிகளை ஒழிக்கப் போராடும் உலகம், குழந்தைப்போராளிகளைப் பற்றிய அக்கறையைக் கொண்டுள்ளதா?

பல்வேறு காரணங்களுக்காக உலகம் முழுக்க பல லட்சம் குழந்தைகள் போராளிகளாகப் போர்முனையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தங்களைவிட அதிக எடையுள்ள போர்க்கருவிகளைத் தூக்கி வைத்து போர் புரிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, ‘அம்மாக் குழந்தை’ களாக்கப்படுகிறார்கள். பால்யத்தின் எந்தப் பச்சை வாசமும் அற்று, பாலைவனப் புழுதியில் அல்லலுறும் சிறு சருகென அலைக்கழிக்கப்படுகிறார்கள். உலகப்பெண் குழந்தைப் போராளிகளின் மனசாட்சியாக, மறைக்கப்பட்ட வரலாறைச் சொல்லும் ரத்தமும் சதையுமான வார்த்தைகளாக நீளும் சைனா கெய்ரெற்சியின் வார்த்தைகள்... மனிதகுல வாதையின் வரலாறு.

(288 பக்கங்கள். விலை ரூ.180. வெளியீடு: கறுப்புப்பிரதிகள், பி55 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5. மொபைல்: 9444272500)

இணையம் வியக்க வைக்கும் வரலாறு

சமகால வரலாறு தொடங்கி, நாம் அறிந்துள்ள வரலாற்றின் மீதான ஆழமான ஆய்வுகளும் வெளியாகும் இணையதளம் இது. கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள், விவாதங்கள் மிக சுவாரஸ்யமானவை. இந்த இணைய தளத்தில் வெளியாகும் தொடர்களை ஒரே நேரத்தில் படித்தால் அத்துறையில் ஆய்வு மேற்கொண்ட திருப்தி கிடைக்கும். உதாரணமாக தமிழ் வேளாளர் பற்றி இதுவரை வெளியாகியுள்ள 7 கட்டுரைகளைக் குறிப்பிடலாம்!
வரலாறு (www.varalaru.com)

இடம் கட்டிடக்கலை பொக்கிஷம்

ஊரே பெரிய கற்கோயிலாக இருக்கும் அற்புதம் - ஐஹோல் (கர்நாடகா). ‘இந்திய கட்டிடக்கலையின் தொட்டில்’ என அழைக்கப்படும் இது, யுனெஸ்கோவின் உலக மரபுரிமை சிறப்பிடமும் கூட! கி.பி. 6-12 நூற்றாண்டுகளில் புகழின் உச்சியில் இருந்தது ஐஹோல். பாதாமி சாளுக்கியர் தலைநகரமாக இருந்த இந்த ஊரிலிருந்தே சாளுக்கிய கட்டிடவியல் திறன் தொடங்குகிறது. பல்லவர் கட்டிடக்கலையையும், வட இந்திய, தக்காண கட்டிடக்கலைகளையும் உள்வாங்கி தங்களுக்கென பிரத்யேக கட்டிடக்கலையை சாளுக்கியர் உருவாக்கிக்கொள்ள பரிசோதனைக்கூடமாக இருந்தது ஐஹோல். திரும்பும் திசையெங்கும் சைவ, சமண கோயில்களால் நிரம்பி வழியும் இவ்வூரின் சிற்பங்கள் மிக அரிதானவை.

சாளுக்கிய கட்டிடக்கலையின் சிறப்பே பாறையைக் குடைந்து அமைக்கப்படும் குகைக்கோயில்கள்தான். ஏறக்குறைய 125 கோயில்கள் இருந்த இவ்வூரில் இன்று எஞ்சியிருப்பவை 75 மட்டுமே. ‘சத்திரியர்களை வென்ற பின் பரசுராமர் தன் கோடரியைக் கழுவிய இடம் ஐஹோல்’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. உளிகளால் ஒரு நகரையே சிற்பமாக வடித்து சாளுக்கிய மன்னர்கள் மரணத்தை வென்று இன்றும் வாழ்வதைப் பார்க்க முடியும். ஐஹோல் - அபூர்வ கலைப்பரவசம்!