உலகை மாற்றிய தோழிகள்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

                        கி.பி. 4ம் நூற்றாண்டில் எகிப்தின் தலைநகராக இருந்த அலெக்ஸாண்ட்ரியா கல்வி, அறிவியல், அரசியலில் சிறப்பு பெற்றிருந்தது.

5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கு இருந்தன. நூலகத்தின் நிர்வாகியாகவும் பிரதான ஆசிரியராகவும் இருந்தவர் தியோன். கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவரது அறிவு மகள் ஹைபேஷா. சிறுமியாக இருந்தபோதே தத்துவம், கணிதம், வானவியல், இலக்கியம் என பல் துறைகளில் விவாதிக்கும் திறன் பெற்றிருந்தார் ஹைபேஷா. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்றார். பல நாட்டு கல்வி, பலவித மனிதர்கள் என்று ஏராள அனுபவங்களுடன் அலெக்ஸாண்ட்ரியா திரும்பினார். கிரேக்கத் தத்துவப் பள்ளியில் பிளாட்டோ, அரிஸ்டா ட்டில் போன்ற ஞானிகளின் தத்துவங்களை போதித்தார். கணித ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.

தத்துவம், கணிதம், பகுத்தறிவு, இலக்கியம், அரசியல் துறைகளில் அவர் பெற்றிருந்த தேர்ந்த அறிவு காரணமாக, ஹைபேஷா அலெக்ஸாண்ட்ரியா நகரின் முக்கியப்பெண்ணாக செல்வாக்குப் பெற்றிருந்தார். பல நாட்டு மன்னர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளை ஹைபேஷாவிடம் கல்வி கற்க அனுப்பினர்.

வழக்கமாக பெண்கள் உடுத்தும் உடை களை அவர் அணியவில்லை. நீண்ட அங்கியையே அணிந்தார். ஆண் தேரோட்டியை அழைக்காமல் தானே குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிச் சென்றார். அறிவு, துணிவு, தன்னம்பிக்கையின் அடையாளமாக வலம் வந்த ஹைபேஷாவை மக்கள் கொண்டாடினர்.

பாய்மங்களின் ஒப்பீட்டு அடர்த்தியைக் கண்டறிவதற்கான ஹைட்ரோமீட்டர் கருவியையும் நட்சத்திரங்களின் தன்மையைக் கண்டறியும் ஆஸ்ட்ரோலோப் கருவியையும் உருவாக்கினார் ஹைபேஷா. கணிதம், தத்துவம், அறிவியல் துறைகளில் பல நூல்களை எழுதினார்.  

ஹைபேஷா வாழ்ந்த 4ம் நூற்றாண்டில் எகிப்து, ரோமப் பேரரசின் கீழ் இருந்தது. அப்போது மதத்தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்து, பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டது.

எகிப்தின் ஆளுநராக இருந்த ஓரிஸ்டஸ், ஹைபேஷாவின் நல்ல நண்பர். இவ்விருவர் மீதும் அலெக்ஸாண்ட்ரியாவின் தலைமைக்குருவாக இருந்த பிஷப் ஸைரிலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மத நம்பிக்கைகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதினார். ஓரிஸ்டஸின் பதவியைப் பறித்தார். அப்படியும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. மதத்துறவிகளை ஏவி, ஓரிஸ்டஸைக் கொலை செய்தார். அசுரத்தனமான மத நம்பிக்கை புத்தியைச் செயலிழக்கச் செய்துவிடுமே... அடுத்து அவர் மனதில் தோன்றிய உருவம்  ஹைபேஷா...

கி.பி.415. இதே மார்ச் மாதம். ஹைபேஷா மாணவர்களுக்காக சொற்பொழிவு ஆற்றிவிட்டு, தேரில் வந்துகொண்டிருந்தார். மதவாதக் கூட்டமொன்று ஆர்ப்பரித்து வழிமறித்தது. விஞ்ஞானமும் தத்துவமும் நிறைந்த அலெக்ஸாண்ட்ரியா மக்களை, மதநம்பிக்கை எவ்வளவு கீழ்த்தரமாக மாற்றிவிட்டது என்பதைக் கண்ட ஹைபேஷா மிகவும் துயருற்றார். தேரில் ஏறிய சிலர், ஹைபேஷாவைக் கீழே தள்ளி, சாலையில் இழுத்துச் சென்றனர். ஒரு ஆலயத்துக்குள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொண்டு செல்லப்பட்டார் ஹைபேஷா. உடைகளைக் களைந்து, கரடுமுரடான சிப்பிகளாலும் ஓடுகளாலும் உடலைக் கீறினர். கால்கள் துண்டிக்கப்பட்டன. இறுதியில், ஹைபேஷாவின் எஞ்சிய உடலைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

நடமாடும் பல்கலைக்கழகமாகவும் அறிவுக்களஞ்சியமாகவும் இருந்த ஹைபேஷாவைக் கொன்ற செயலால் அறிவுலகம் இருண்டு போனது. இதன் பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்தே அறிவுலகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
 
ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாரும் இல்லை என்கிறார் கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!

அரபு படையெடுப்பால் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதில் ஹைபேஷாவின் ஏராளமான நூல்கள் கருகிப்போயின. எஞ்சிய சில நூல்கள் பிற்காலத்தில் அரபு, லத்தீன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஹைபேஷாவின் இந்நூல்களே நியூட்டன், டெக்கார்டே போன்ற பிற்கால அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாகத் திகழ்ந்தன. ஹைபேஷாவிடம் பயின்ற மாணவர்கள் தங்கள் அறிவால் மிகப்பெரிய பதவிகளை வகித்தனர். இம்மாணவர்கள் மூலமே ஹைபேஷா வெளியுலகுக்கு அறியப்பட்டார்.

இன்று பெண்கள் விண்வெளி வீராங்கனையாக, விஞ்ஞானியாக, மருத்துவராக, ஆராய்ச்சியாளராக, தொழில்நுட்பவியலாளராக, பேராசிரியராக சகல துறைகளிலும் கால் பதித்து சாதனை சரித்திரம் படைக்கின்றனர். இருப்பினும், இந்த 1,600 ஆண்டுகளில் வானவியலாளர், கணிதவியலாளர், தத்துவவியலாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட ஹைபேஷாவுக்கு இணையான இன்னொரு பெண் பிறக்கவேயில்லை! 
சஹானா