பாலிதீன் பைத்தியம்!



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,AKungumam Thozhi Monthly  Magazine

            14,887
14,888
14,889
14,890

அனேகமாக இந்தக் கட்டுரை வெளிவருவதற்குள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும்.

அத்தனையும் குவாலியரை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை காமாக்ஷி மகேஷ்வரியின் பாலிதீன் பை கலெக்ஷன்!

பாலிதீன் பையோடு காமாக்ஷி வீட்டுக்குள் நுழைந்தால், அழகான சணல் அல்லது பேப்பர் பை அல்லது துணிப்பையோடு திரும்பலாம். பாலிதீன் பைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்பிய காமாக்ஷியின் நூதனவிழிப்புணர்வுப் பிரசாரம் இது!

‘‘பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கிறது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதுங்கிறது தெரிஞ்சதும், என் கைக்கு வந்த அத்தனை பிளாஸ்டிக் பைகளையும் உபயோகிக்காம அப்படியே வச்சிருந்தேன். வேற வேற அளவுகள்ல, வேற வேற வடிவங்கள்ல, வேற  வேற  ஊர்கள்லேருந்து நான் சேர்த்து வச்சிருந்த பைகளைப் பார்த்தப்ப, அதையே ஒரு பொழுதுபோக்கா செய்யற எண்ணம் வந்தது. கடைகள், வீடுகள்னு எங்கே, யார் பிளாஸ்டிக் கவர் உபயோகிக்கிறதைப் பார்த்தாலும், அதை வாங்கிட்டு, என்கிட்ட எப்போதும் வச்சிருக்கிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர், துணி அல்லது சணல் பைகளைத் தருவேன்.

இதுக்காகவே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி, அவங்களுக்கு பேப்பர் பைகளும் துணிப்பைகளும் தயாரிக்கிற வேலை கொடுத்திருக்கேன். இதுவரை 20 ஆயிரம் பைகளை விநியோகிச்சிருக்கேன்’’ என்கிற காமாக்ஷி, பாலிதீன் பைகளுக்கு மாற்றாக விநியோகிக்கிற இகோஃப்ரெண்ட்லி பைகளுக்காகவே மாதம் ரூ.5 ஆயிரம் செலவழிக்கிறார்.

நாலரை அங்குல குட்டியூண்டு பையில் இருந்து, 18 அங்குல மெகா சைஸ் பை வரை விதம் விதமான பைகள் இருக்கின்றன இவரிடம். கடைகளில் பொருள் வாங்கிய பிறகு கூடுதலாக இன்னும் இரண்டு கேரி பேக் கேட்பவர்களுக்கு மத்தியில், காமாக்ஷியோ, கேரி பேக் வாங்குவதற்கென்றே ஷாப்பிங் செல்பவர்!

‘‘சென்னையில ஒரு பிரபலக்கடைக்குப் போய், அவங்க கடையோட கேரி பேக் ஒண்ணு கேட்டேன். பொருள் வாங்காம, பை தரமாட்டோம்னு சொன்னாங்க. அப்புறம் அவங்கக்கிட்ட என் நோக்கத்தையும், கலெக்ஷனையும் பத்திப் புரிய வச்சதும், ஆளுக்கொரு பை கொடுத்துப் பாராட்டி அனுப்பினாங்க.  ஒரு முறை ஏர்போர்ட்ல  என் பையை சோதனை போட்ட கஸ்டம்ஸ் அதிகாரிங்க, வெறுமனே பையா வச்சிருக்கிறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க. என்ன, ஏதுன்னு விசாரிச்ச அவங்களுக்கும் ஆன் தி ஸ்பாட்ல ஒரு லெக்சர் கொடுத்தேன். வாழ்த்தி அனுப்பினாங்க தெரியுமா?’’ என்பவர், தனது விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என எந்த இடத்திலும் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. இவரது 4 வருடப் போராட்டத்துக்குப் பலனாக, 2011ல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கத் தடை விதித்தது குவாலியர் முனிசிபல் கார்பரேஷன்.

2008, 2010ம் ஆண்டுகளைத் தொடர்ந்து 2012ம் ஆண்டும் லிம்கா சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார் காமாக்ஷி!
- அதிதி