தமிழகத்தின் முதல் பைக் பொண்ணு!



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,AKungumam Thozhi Monthly  Magazine

                 ‘‘முடியுமான்னு கேட்டா ‘முயற்சி பண்றேன்’னு சொல்வேனே தவிர, ‘நோ’ சொல்லி எனக்குப் பழக்கமில்லை. ஒவ்வொரு முறை புதுசா ஒரு சாதனையைப் பத்தி யோசிக்கிறப்பவும், ‘உன்னால நிச்சயம் முடியும்’னு மனசு சொல்றதை அப்படியே நம்பி, ட்ரை பண்ணுவேன். என்னோட இத்தனை வெற்றிகளுக்கும் அதுதான் தாரக மந்திரம்!’’ - டாப் கியரில் வேகமெடுக்கிறது சித்ரா ப்ரியாவின் பேச்சு!

தமிழகத்தின் முதல் பெண் பைக் ரேஸர்! 2011-ன் ‘பைக்கர் ஆஃப் தி இயர்’ பட்டம் வென்ற நாயகி! ஆண்களே ஆக்கிரமித்திருக்கும் பைக் ரேஸிங் துறையில், நம்பிக்கையளிக்கிற ஒரே பெண்!

‘‘சைக்கிள் ஓட்டற வயசுல டூ வீலர் ஓட்ட ஆரம்பிச்சேன். ‘பார்த்துப் போ... பத்திரமா போ... மெதுவா ஓட்டு’ன்னு வழியனுப்பி வைக்கிற அம்மா-அப்பாவைத்தான் பார்த்திருப்போம். எங்கம்மா, அப்பா, அண்ணன்கள்னு எல்லாரும், ‘தைரியமா போ... தன்னம்பிக்கையோட ஓட்டு’ன்னு என்கரேஜ் பண்ணினாங்க. முதல் முதல்ல யமாஹா என்டைசர் வாங்கினேன். அண்ணா நகர்ல எங்க வீட்லேருந்து, காட்டாங்குளத்தூர்ல உள்ள காலேஜ் வரை பைக்லதான் போவேன்.

என்னோட ஸ்டைலையும் வேகத்தையும் பார்த்த ஒரு ஃப்ரெண்ட், பெங்களூருல நடக்கற ட்ராக் ரேஸ் பத்தி சொல்ல, அதுல கலந்துக்கிட்டேன். முதல் ரேஸ்லயே எனக்கு முதலிடம். அடுத்து மும்பை, சென்னைல நடந்த அதே ரேஸ்லயும் கலந்துக்கிட்டேன். ஸ்ரீபெரும்புதூர்ல ரேஸ் டிராக் இருக்கிறது பத்தி சொல்லி, அங்க பிராக்டீஸ் பண்ணச் சொன்னாங்க சில நண்பர்கள். பயிற்சி முடிச்சதும் நேரடியா ரேஸ்... 30 பசங்களுக்கு மத்தில நான் ஒருத்தி மட்டும்தான் பொண்ணு! கிடைச்சதென்னவோ 3வது இடம்தான். ஆனாலும், அந்த ரேஸ் டிராக்ல பசங்களோட போட்டி போட்ட முதல் தமிழ் பெண் நான்தான்னு ஸ்பெஷல் பாராட்டு கிடைச்சது.
Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,AKungumam Thozhi 
Monthly  Magazine
அப்புறம் தொடர்ந்து நிறைய ரேஸ்... நிறைய வெற்றிகள்னு செம ஸ்பீடா போயிட்டிருக்கு வாழ்க்கை...’’ என்கிற சித்ரா, கடந்த வருடம், ‘கிரேட் இந்தியன் ரைடு’ என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் பூனா வரை 45 நாள்கள் பைக்கிலேயே சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அதையடுத்து, உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச் சாலையான கார்துங்லாவுக்கு தென்னிந்தியா சார்பாக சென்று வந்த ஒரே பெண் என்கிற லேட்டஸ்ட் பெருமையுடன், இன்னொரு சாகசத்தையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.

‘‘பெங்களூரு டூ பூனா, மறுபடி பூனா டூ பெங்களூரு வரை 1,600 கி.மீ. தூரத்தை வெறும் 24 மணி நேரத்துல பைக்ல போயிட்டு வந்தேன். பொதுவா 3 மணி நேரம் வண்டி ஓட்டினாலே, உடம்பு சூடாயிடும். களைப்பாயிடும். நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம, ராத்திரி, பகல்னு விடாம வண்டி ஓட்டினேன். ரொம்ப ரொம்ப ரிஸ்க்கான விஷயம்தான்... பின்னே... ‘உலகின் கடினமான ரைடர்’ங்கிற பெருமை அடையறதுன்னா சும்மாவா?’’ - அசாதாரணமாகச் சொல்பவர், பந்தயங்களின் போது பல விபத்துகளை சந்தித்திருக்கிறாராம்.

‘‘ஒரு தடவை ரேஸ்ல பெரிய ஆக்சிடென்ட்டாகி, இடதுகை மணிக்கட்டு ஃபிராக்ச்சர். நெத்தி கிழிஞ்சு, ஏகப்பட்ட தையல்... எல்லாம் சரியாகற வரைக்கும் சும்மா இருக்க வேணாமேன்னு ஃபிலிம் மேக்கிங், எம்.பி.ஏன்னு படிக்கப் போயிட்டேன். ஆனா, மனசெல்லாம் ரேஸிங்கை சுத்தியே வந்தது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, மறுபடி ரேஸிங்ல குதிச்சிட்டேன். இப்ப என்னால ரேஸிங்கை தவிர வேற எதைப் பத்தியும் நினைச்சுப் பார்க்க முடியலை... என்னோட இந்த சாதனைகளை எல்லாம் நான் வெளிநாட்ல போய் பண்ணலாம். அங்க ரோடு நல்லாருக்கும். எருமை மாடு குறுக்கே வராது. எந்தத் தொந்தரவும் இல்லாம ஓட்டலாம் தான். ஆனாலும், இந்தியால ஒரு பொண்ணு சாதிச்சிருக்கான்னு பேச வைக்கிறதுதான் என்னோட கனவு, ஆசை எல்லாம்... ஐ லவ் இந்தியா...’’ -  வியக்க வைக்கிறது வேகப் பெண்ணின் பேச்சு!
- ஆர்.வி.