வழிகாட்டும் ஒளி



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

                 உதாரணமாகவும் உதவிக்காகவும் ஒரு அமைப்பு!

அப்பா, கணவன், மகன் பிறந்தது முதல் சாகும் வரை ஏதோ ஒரு ரூபத்தில் பெண்களின் வாழ்க்கையில் சிலபல ஆண்கள்... இணையாக இறுதி வரை வருபவர்களைவிட, இருப்பையே வெறுக்கச் செய்கிற ஆண்களே அதிகம். சிலருக்கு ஆண் துணையில்லாத வாழ்க்கை இம்சை. பலருக்கோ ஆணுடனான வாழ்க்கை நரகம்!

திருமணமாகாதவர்கள், கணவரைப் பிரிந்தவர்கள், இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள் என தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஒரு அமைப்பு ‘வழிகாட்டும் ஒளி’.

ழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

‘‘காலத்துக்கும் கூட வர்றதுக்கு ஒரு துணை வேணும்னுதான் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கறோம். என்னோடது காதல் கல்யாணம். பதினஞ்சு வருஷ கல்யாண வாழ்க்கையில ஒரு நாள் கூட சந்தோஷமோ, நிம்மதியோ இல்லை. அர்த்தமே இல்லாத அந்த வாழ்க்கையிலேருந்து வெளிய வர வேண்டிய கட்டாயம் எனக்கு. பிரிஞ்சு போன கணவர் ரூபத்துல மட்டுமில்லாம, சமுதாயத்துலேருந்தும் எக்கச்சக்க பிரச்னைகள். தனிமை பயமா இருந்தது. என்னைச் சுத்தி இருந்த நல்ல மனசுக்காரங்களோட ஆறுதலும் அரவணைப்பும் என்னை தனிமையிலேருந்து வெளிய கொண்டு வந்தது.

ஓரளவு மீண்டு எழுந்தபோது, மிகப்பெரிய விபத்துல சிக்கி, கிட்டத்தட்ட மரணப்படுக்கைக்கே போயிட்டேன். அந்த விபத்துலேயே என் வாழ்க்கை முடிஞ்சிருக்கலாம். இத்தனையும் தாண்டி, நான் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கணும்னு உணர்ந்தேன். குணமாகி வந்ததும், ‘நேசம்’னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சேன். ஆர்வமிருந்தும் படிக்க வசதியில்லாத பிள்ளைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முடிஞ்ச உதவிகளைச் செய்யற அமைப்பா ‘நேசம்’ வளர ஆரம்பிச்சது.

அதுக்காக களத்துல இறங்கினப்ப, நாங்க சந்திச்ச பெண்களோட நிலைமை ரொம்பப் பரிதாபமா இருந்தது. அப்பா, கணவன், மகன்னு எந்த ஆணோட ஆதரவும் இல்லாமத் தவிக்கிற பெண்களோட கண்ணீர் கதைகளை தினம் தினம் கேட்க ஆரம்பிச்சோம். தனிமையில தவிக்கிற பெண்களுக்கு ஏதாவது செய்யணுங்கிற வைராக்கியத்துல ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பை ஆரம்பிச்சேன். ஆண் துணை இல்லாம அலைக்கழிக்கப்படற எந்தப் பெண்ணும் இந்த அமைப்புல உறுப்பினராகலாம். அவங்களோட படிப்புக்கும், தகுதிக்கும் ஏத்தபடி அவங்களுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்து, சொந்தக் கால்கள்ல நின்னு, வாழ்ந்து காட்ட முடியும்னு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிற அமைப்பா வளர்ந்  திட்டிருக்கு...’’

கண்ணீரைத் துடைத்தபடி சொல்கிற பிரேமா, ‘வழிகாட்டும் ஒளி’யின் தலைவி.

பார்வையில் கனிவும் மாறாத புன்னகையுமாக அமைதியாக இருக்கிற ரேவதி, இந்த அமைப்பின் செயலாளர். துயரங்களின் உச்சம் பார்த்தவர்தான் இவரும்.

‘‘பெரியவங்கதான் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. எனக்கு வந்தவருக்கோ, படிச்ச பொண்ணுங்க எல்லாம் தப்பானவங்கன்ற எண்ணம். தினம் தினம் அவரோட சந்தேகப் பார்வையாலேயும், அசிங்கமான கேள்விகளாலேயும் கூனிக்குறுகி நிப்பேன். அந்தச் சூழல்ல என் குழந்தை வளர்றது பிடிக்காம, வெளியே வந்தேன். ‘நீ வாழ்ந்துடுவியான்னு பார்க்கறேன்’னு அவர் சவால்விட்டார். மூணு வயசுக் குழந்தையோட வெளியில வந்தப்ப, எனக்கான ஒரே நம்பிக்கை என்னோட எம்.ஏ படிப்பும், டீச்சர் வேலையும்தான். இன்னிக்கு என் பையனை எம்.பி.ஏ படிக்க வச்சு, ஒரு நல்ல அந்தஸ்துல உட்கார வச்சிருக்கேன். என் பையன்தான் எனக்கு உலகம். பெண்களை எப்படி நடத்தணும், மதிக்கணும்னு அவனுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கேன்.

என் அண்ணன் கூட பேங்க்ல வேலை பார்க்கற பிரேமாவோட அறிமுகம் கிடைச்சது. அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டதுல, நான் தனியாள் இல்லைங்கிற நம்பிக்கை தெரிஞ்சது. நாங்க அனுபவிச்ச வலி, இனிமே எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது, ‘வழிகாட்டும் ஒளி’ல என்னையும் இணைச்சுக்கிட்டேன்”.

வலிகளைத் தாண்டி, வெற்றி பெற்ற பிறகும்கூட, கடந்த கால நினைவுகள் கண்ணீராக வழிகின்றன ரேவதிக்கு.

படபடப் பேச்சும், துருதுரு பார்வையுமாக இருக்கிற சுஜாதா, சோகங்களின் புதைகுழியில் சிக்கி மீண்டவர் என்றால் நம்ப முடியவில்லை.
‘‘மதுரையில என் மாமனார் குடும்பம் ரொம்பவும் பிரபலமானது. சின்ன வயசுலேயே கல்யாணமாயிடுச்சு. கணவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. வேலை எதுவும் பார்க்காம, 24 மணி நேரமும் போதையிலேயே இருப்பார். எப்போதும் சண்டை, பிரச்னைன்னு குடும்பத்துல நிம்மதியே இல்லாமப் போச்சு. போதை தலைக்கேறினதுல, ஒரு நாள் நடுராத்திரி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். ஒண்ணேகால் வயசுல மகனையும், பத்தரை வயசுல மகளையும் வச்சுக்கிட்டு வழி தெரியாம நடுத்தெருவுல நின்னேன்.
 
நான் பத்தாவதுக்கு மேல படிக்கலை. உலகம் தெரியாது. ‘நீ தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு உன்னை டார்ச்சர் பண்ணுவேன்’னு மிரட்டின கணவருக்கு முன்னாடி, என் பிள்ளைங்களுக்காகவாவது வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். ஸ்கூல் தோழி மூலமா, ‘ஆல் இந்தியா பியூட்டிஷியன் அண்ட் ஹேர் டிரெஸ்ஸர்ஸ் அசோசியேஷன்’ல வேலை கிடைச்சு, இப்ப பி.ஆர்.ஓ.வா இருக்கேன். அப்படியே எம்.ஏ. முடிச்சேன்.

ஒரு மீட்டிங்ல பிரேமாவை சந்திச்சேன். வந்தவங்க பெயர்களை லிஸ்ட் எடுத்திட்டிருந்த நான், பிரேமான்னு சொன் னதும், இனிஷியல்னு கேட்டேன். ‘ஜஸ்ட் பிரேமா’ ன்னு சொன்னாங்க. கணவனோட இனிஷியல் இல்லாம பேரை சொல்றதே தப்புங்கிற நினைப்புல வளர்ந்த எனக்கு, அது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவங்களோட ‘நேசம்’ அமைப்புல என்னையும் இணைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் கணவன் மட்டுமே வாழ்க்கை இல்லைங்கிறது புரிய ஆரம்பிச்சது. மகனையும் மகளையும் நல்லபடியா வளர்த்து, ஆளாக்கிட்டேன். நடந்ததை நினைச்சு இன்னிக்கும் நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடறதில்லை. 28 வயசுல நடந்தது 40 வயசுல நடந்திருந்தா? என் உடம்புலேயும் மனசுலேயும் தெம்பிருக்கிறப்பவே நடந்ததையும், நான் ஜெயிச்சதையும் நினைச்சு சந்தோஷப்பட்டுக்கறேன்’’ என்கிற சுஜாதா, ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளர்.

‘‘தனிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட எந்தப் பெண்ணும், ‘வழிகாட்டும் ஒளி’யில் இணையலாம். ‘கணவனோடு பிரச்னையா, பெத்த பிள்ளைங்க விரட்டறாங்களா, உடனே விட்டுட்டு வந்து எங்க அமைப்புல சேருங்க’ன்னு நாங்க சொல்லலை. பிரச்னை உள்ள யாரும் முதல்ல எங்களை அணுகினா, அவங்களுக்கு கவுன்சலிங் கொடுத்து, பிரியாம இருக்க முயற்சிகள் செய்வோம். உளவியல் நிபுணர், வக்கீல்னு எங்க அமைப்புல நிபுணர் குழு இருக்கு. அவங்க முயற்சிகள் எல்லாம் பலனில்லாமப் போனா, அடுத்து என்ன பண்ணலாங்கிறதுக்கான வழிகாட்டலும் எங்கக்கிட்ட கிடைக்கும். எங்க மூணு பேருக்கும் நடந்த கொடுமைகள் எங்களோடயே போகட்டும். கண்ணுக்கெதிரே அது இன்னொரு பெண்ணுக்கு நடக்கிறதைப் பார்த்துக்கிட்டு, நாங்க சும்மா இருக்க மாட்டோம். நாங்க இருக்கோம் உங்களுக்கு... உதாரணமாகவும் உதவிக்காகவும்னு காட்டத்தான் ‘வழிகாட்டும் ஒளி.’’’

வலிகளைக் கடந்த தோழிகளின் பேச்சையும் அனுபவங்களையும் பார்க்கும்போது இப்படித் தான் எண்ணத் தோன்றுகிறது.

‘தனியாக இருக்கும்போது ஒன்றுமில்லாதவர்களாக இருப்பவர்கள், சேர்ந்திருக்கும்போது எல்லாமுமாகவும் ஆகிறார்கள்!’
- சாஹா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்