சணல் பையில் சகலகலாவல்லி!



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

            மளிகை சாமான்களோ, காய்கறிகளோ, வேறு பொருள்களோ வாங்கக் கடைக்குச் செல்கிறீர்கள். பொருள்களுடன் சேர்த்து ஒவ்வொரு முறையும் துளி விஷத்தை இலவசமாகக் கொடுத்தால்?

குழப்பமாக இருக்கிறதா? முதல் வரியில் சொன்ன ஒரு துளி விஷத்துக்கும், ஒவ்வொரு முறை நீங்கள் கேட்டுப் பெறும் கேரி பேக்குகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை தோழிகளே...

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும் போது, பைகளில் உள்ள சாயத்தால், காற்று மண்டலம் மாசடைகிறது. சுவாச நோய்கள் வருகின்றன. பிளாஸ்டிக் பைகள், எத்தனை காலமானாலும், மண்ணில் மட்குவதில்லை. மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுத்து, நிலத்தடி நீர்மட்டம் குறையக் காரணமாகிறது. உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து சாப்பிட்டு, இறந்து போகும் யானைகள், மாடுகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம்... இன்னும் பிளாஸ்டிக்கின் பேராபத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். சரி... என்னதான் மாற்று?

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பைகளை உபயோகிப்பதுதான். பேப்பர் பை, துணிப்பை, சணல் பை என இதில் பல உண்டு. தாம்பூலப் பையில் தொடங்கி, பிக் ஷாப்பர் கட்டைப்பை வரை சணலில் தயாரிக்கிற பைகளுக்கு மற்றதைவிட ஆயுசும் அதிகம். சணல் பைகள் தயாரிக்கக் கற்றுக் கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வளமாக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உமா ராஜ்.

‘‘சணலைத் தொட்டவங்க சோடை போனதில்லை. அதுக்கு நானே உதாரணம்’’ என்று அழுத்தம் திருத்தமாக ஆரம்பிக்கிறார் உமா ராஜ். ‘சுஹா பொதுநலச் சங்கம்’ என்கிற அமைப்பின் தலைவி. 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, வழி நடத்தி, அவர்களுக்கு வாழ வழி காட்டிக் கொண்டிருப்பவர். சணல் பைகள் மற்றும் சணல் நகைகள் தயாரிப்பதிலும் பயிற்சியளிப்பதிலும் உமாதான் தமிழகத்தில் நம்பர் 1.
‘‘டிப்ளமோ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேர்ந்தே தொழிலதிபராகணும்னு கனவு. எதேச்சையா ஒரு வர்த்தகப் பத்திரிகைல சணல் தயாரிப்பு பத்தின கட்டுரையைப் படிச்சேன். அந்தத் தொழிலுக்கு உள்ள எதிர்காலம் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். தொழில் வணிகத் துறைல 7 நாள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். வீட்ல தையல் மிஷின்  வச்சிருந்தேன்.

சணல்ல கத்துக்கிட்டதை, அப்படியே ரெக்சின்ல தச்சுப் பார்த்தேன். கணவருக்கு ஆபீசுக்கு கொடுத்தனுப்பினேன். முதல் நாளே 3 பைகளுக்கான ஆர்டரோட வந்தார். நம்பிக்கை துளிர்த்தது.  பயிற்சில நான் கத்துக்கிட்டதென்னவோ 7 மாடல்கள்தான். மகளிர் திட்டத்துல மார்க்கெட்டிங்ல இருந்த ஒரு அம்மா மும்பைல பார்த்ததா சொல்லி, ஒரு பையோட மாடலை வரைஞ்சு காட்டி, அப்படியே தச்சுத் தர முடியுமானு கேட்டாங்க. அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டுத் தைக்க ஆரம்பிச்சதுல, இன்னிக்கு என்னால எந்தப் பையைப் பார்த்தாலும் தைக்க முடியும்’’ என்கிற உமா, இதுவரை 3 ஆயிரம் பேருக்கு மேல் சணல் பை தயாரிப்பில் பயிற்சி அளித்திருக்கிறார். சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், மகளிர் திட்டம், வங்கிகள், கார்பரேட் அலுவலகங்கள் மூலமும் பயிற்சியளித்திருக்கிறார்.

‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு பத்தி நிறைய பேசிட்டிருக்கிற இந்தச் சூழல்ல, சணல் பை தயாரிப்பு சரியான பிசினஸ். சணல் பைகளுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகிட்டுத்தான் இருக்கு. தைக்கத்தான் ஆளில்லை. குடும்பத்தையும் நிர்வாகம் பண்ணிட்டு, மாசம் ஒரு கணிசமான தொகையை சம்பாதிக்க நினைக்கிறவங்க, துணிஞ்சு சணல் பை தைக்கிற தொழில்ல இறங்கலாம். அதுக்கு நான் கியாரண்டி’’ - நம்பிக்கை தருகிறார் உமா ராஜ்.

மத்திய அரசு, ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது இந்திய அரசின் சணல் வாரியம். சணல் பைகள் மற்றும் பொருள்கள் தயாரிப்பதில் பயிற்சி, கடன் உதவி, தொழில் தொடங்கவும், சந்தைப் படுத்தவும் ஆலோசனைகள், விழிப்புணர்வு முகாம்கள், கண்காட்சிகள் எனப் பல விஷயங்கள் மூலம் இத்தொழிலை ஊக்கப்படுத்துகிறது சணல் வாரியம்.

‘‘சணல் பொருள்கள் தயாரிக்கிற பயிற்சியை முடிச்சதும், மாவட்டத் தொழில் மையத்துல பதிவு பண்ணணும். அதுக்கான ஆதாரத்தோட எங்களை அணுகினா, அவங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகள்ல நடக்கற சணல் தயாரிப்புக் கண்காட்சிகள்ல பங்கெடுத்துக்கவும், பொருள்களை விற்கவும் உதவிகள் செய்யறோம்’’ என்கிறார் தென் மண்டல சணல் வாரிய விற்பனை மேம்பாட்டு அலுவலர் ஐயப்பன்.
- ஆர்.வைதேகி
படங்கள்: கிஷோர்