பெண் மனம்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,AKungumam Thozhi Monthly  Magazine

              அடக்க முடியாத அழுகையும் திணறும் வார்த்தைகளுமாகப் பேச முடியாமல் தவித்தார் தொலைபேசியில் நம்மை அழைத்த அந்தப் பெண்மணி. தனது பிரச்னைக்கு யாராவது செவி சாய்க்க மாட்டார்களா என்கிற ஆதங்கத்தைவிட, தனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்கிற வேகமே அவரது பேச்சில் அதிகம் தெரிந்தது.

‘‘இந்த வயசுல இப்படியொரு பிரச்னை பற்றி சொல்லவே எனக்குக் கூசுது. வாழ்க்கையில முதல் பாதியில சந்தோஷமா இருந்தால், அடுத்த பாதியில அல்லல்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். பாவமே செய்யாதவங்களுக்கும் அதே விதிதானா? நிழலைக்கூட நம்பக்கூடாதுங்கிறது என் அனுபவத்துல நான் பட்டு உணர்ந்த உண்மை. எனக்கு நடந்திட்டிருக்கிற இந்தக் கொடுமை கணவன்மேல கண்மூடித் தனமான நம்பிக்கையும் நேசமும் வச்சிருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாடமா இருக்கட்டும்...’’

- கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அந்தத் தொலைபேசி உரையாடலில் இருந்து விமலாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சோகக் கதை சுருக்கமாக இங்கே...

கணவனே உலகம் என கண்களைக் கட்டிக்கொண்டு, இன்று வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிற அபலை நான். 25 வருடங்களுக்கு முன்பே, பெற்றோரை எதிர்த்து, காதலுக்காக வீட்டை, உறவுகளை உதறித் தள்ளிவிட்டு வந்தவள் நான். சும்மா சொல்லக்கூடாது... பிறந்த வீட்டு நினைப்பே வராத அளவுக்கு என் கணவர், தாயாக, தந்தையாக, இன்னும் நான் இழந்த அத்தனை சொந்தங்களின் மொத்த உருவமுமாக இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டார். கணவரின் அன்பிலும் அக்கறையிலும் மயங்கிப்போன எனக்கும், அம்மா, அப்பா ஞாபகம்கூட வரவில்லை என்பதுதான் உண்மை. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

கவலை என்றால் என்னவென்றே தெரியாத ராஜபோக வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறேன். சொல்பேச்சு மீறாத குழந்தைகள்... படிப்பிலும் படுசுட்டிகள்... கணவருக்கு கை நிறைய சம்பளத்தில் வங்கியில் பெரிய வேலை. மாமனார், மாமியார், நாத்தனார் என எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத அழகான வாழ்க்கை...

அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல... ‘உங்கள் துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறும்’ என கிறிஸ்தவத்தில் ஒரு வாசகம் சொல்வார்கள். என் விஷயத்தில் என் சந்தோஷமெல்லாம் துக்கமாக மாறியது ஒரு கெட்ட நாளில்.

என் கணவருடன் ஒரு பெண் வேலை பார்த்தாள். மிக இளம் வயதிலேயே அவளது கணவர் தவறிப் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை. டீன் ஏஜில் குழந்தை இருப்பவள் மாதிரியே தெரியாது. அத்தனை அழகாக, இளமையாக இருப்பாள். அவள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், அவளிடம் ஏதோ முறை தவறி நடப்பதாக அவள் சொல்ல, தனக்குத் தெரிந்த நண்பர் மூலம் அவளுக்கு ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தார் என் கணவர்.

மற்ற ஆண்களால் அவளுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லி வருத்தப்படுவார் என் கணவர். ஒரு கட்டத்தில் அவள் மீது எனக்கு அளவு கடந்த இரக்கம் உண்டானது. அவளும் ‘அக்கா அக்கா’ என என்னிடம் உயிரையே விடுவாள்.

வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் அவளும் அவளது மகளும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். எனக்கு சமையலில் ஒத்தாசையாக இருப்பதில் இருந்து, எல்லோருக்கும் உணவு பரிமாறுவது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என எல்லா வேலைகளையும் அவளே இழுத்துப்போட்டுச் செய்வாள். அறிமுகமான கொஞ்ச நாளிலேயே எங்கள் வீட்டில் ஒருத்தியாக மாறினாள்.

என் மகனுக்குத் திருமணமாகி, மருமகளுக்குப் பிரசவமானதும், அவளைப் பார்த்துக்கொள்ள நானும், என் மகளும் மூன்று மாதங்கள் மகன் வீட்டுக்கு வெளியூர் போயிருந்தோம். திரும்பி வந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி... அத்தனை நாள் அசைவமே சாப்பிடாத என் கணவர், அந்த மூன்று மாதங்களில் தீவிர அசைவப் பிரியராக மாறியிருந்தார்.

‘‘நீ பாட்டுக்குப் போயிட்டே... நான் தனியா சமைச்சு சாப்பிடணும்... ஃப்ரெண்ட்ஸுங்களோட சேர்ந்து பழகிட்டேன். இப்ப என்ன அதுக்கு?’’ என சமாளித்தார். அவர் மீதிருந்த காதலால் அந்த விஷயம் எனக்கு சந்தேகம் ஏற்படுத்தவில்லை.

பழைய நினைவுகள் வரும்போதெல்லாம் எங்களது கல்யாண வீடியோவை பார்த்து ரசிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் டிவிடி பிளேயரை ஆன் செய்த எனக்கு அதிர்ச்சி. உள்ளே இருந்ததோ ஆபாச டி.வி.டி.

‘‘நீ ஊர்ல இல்லை... எனக்கு வேற வடிகால் வேணாமா?’’ என அதற்கும் தயாராக இருந்த காரணத்தைச் சொல்லி, என்னை ஏமாற்றினார் கணவர். அதையும் நம்பினேன்.

ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரம்... வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, சரியாக சாத்தப்படாமல் இருந்த அவரது பீரோவை சரி செய்யத் திறந்த எனக்கு யதேச்சையாக கண்ணில் பட்டது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த ஒரு செல்போன்...

(கல்யாணமான நாள் முதல் அத்தனை வருடங்களில் நான் அவரது பீரோவுக்குள் என்ன இருக்கிறது எனக் குடைந்தது இல்லை. அது அவருக்கும் தெரியும்.)

முதல்முறையாக அவரது பீரோவை குடைந்தேன். உள்ளிருந்து கட்டுக்கட்டாக காதல் கடிதங்கள்... புடவையும் நகையுமாக வாங்கிக் குவித்த ரசீதுகள்... கூடவே ஆணுறை பாக்கெட்டுகள்...

எல்லாம் என்னவருக்கும், என்னை வாய் நிறைய ‘அக்கா அக்கா’ என அழைத்த அந்த சதிகாரிக்கும் இடையில் அரங்கேறிய காதல் சங்கதிகளுக்கான சாட்சிகள்... செல்போனை ஆன் செய்து பார்த்த போது, அதில் குவிந்திருந்த எஸ்.எம்.எஸ்... இருவருக்குமான அசிங்கங்களை அப்பட்டமாகக் காட்டியது. ஹைலைட்டாக அவர்கள் இருவரும் தம்பதி கோலத்தில் எடுத்துக் கொண்ட போட்டோவும், எங்களுக்குச் சொந்தமான காலி மனை ஒன்றை அவளது பெயருக்கு மாற்றி எழுதிய பத்திரமும்!

நிலைமை ரொம்பவும் சீரியஸானது தெரிந்தது. கணவர் வந்ததும் கதறினேன். கெஞ்சினேன்... ‘எல்லாம் பொய்’ எனச் சொல்லிவிட மாட்டாரா என்று... அவரோ உண்மையை ஒப்புக்கொண்டார். அவளுக்கு வீடு பார்த்து வைப்பதற்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டது, அவளது மகளின் பள்ளிச்சான்றிதழ்களில் தன் பெயரையே ‘அப்பா’ என மாற்றிக் கொடுத்தது, மனையை அவளது பெயருக்கு எழுதித் தந்தது எனஎல்லாவற்றையும்...

‘காதலுக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தேனே... அத்தனையும் பொய்யா’ எனக் கதறினேன். ‘எனக்கு நீயும் வேணும். அவளும் வேணும். உன்னை அவ என்ன பண்றா? அவ பாட்டுக்கு தனியா இருக்கா... உனக்கு நான் ஏதாவது குறை வச்சா கேளு... விஷயத்தைப் பெரிசாக்கி, என்னையோ, அவளையோ அவமானப்படுத்த நினைச்சா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தற்கொலை பண்ணிக்குவோம்’ என்கிறார் மிரட்டலாக.

நீண்ட தேடலுக்குப் பிறகு இப்போதுதான் எங்கள் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. அவளோ, ‘மாப்பிள்ளை வீட்டுக்கு எதுவும் தெரிய வேணாம். எதையாவது சொல்லி, என் வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க’ எனக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

அதுவும் நியாயம்தான் என மகனிடம் சொல்லி அழுதேன்.

‘நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேம்மா... அடுத்த மாசம் நானும் உன் மருமகளும் ஃபாரின்ல செட்டிலாகறோம். உன்னை எங்களோட வச்சுக்க முடியாத நிலைமைல இருக்கேனே...’  - மறைமுகமாக என்னைத் தவிர்த்தான்.

25 வருடங்களுக்கு முன் உதறிவிட்டு வந்த உறவுகளில் அம்மா, அப்பா உள்பட பலர் இப்போது உயிருடன் இல்லை. நான் பத்தாவதுக்கு மேல் படிக்கவில்லை. வெளி உலகம் தெரியாது. பத்து பைசா சேமிப்பில்லை. என் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை. 18 வயதில் கணவரின் கைப் பிடித்த நாள் முதல் இதோ 43 வயது வரை அவர்தான் என் உலகம். இன்று அதுவே இருண்டு, சூன்யம் பிடித்தது போல என்னை மிரட்டுகிறது.
மகளின் கல்யாண வேலைகளுக்காக அமைதி காக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. அவளை நல்லபடியாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு என் நிலை? ‘என்கிட்ட வந்துடாதே’ என மறைமுகமாக விரட்டியடிக்கிற மகன், புதுவாழ்க்கையைத் தொடங்கப்போகிற மகள், அற்றுப்போன பிறந்த வீட்டு பந்தங்கள், காதலோடு சேர்த்து என் கனவுகள், எதிர்காலம் என எல்லாவற்றையும் காவு வாங்கிய கணவன்...
இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? எந்த நம்பிக்கையில், எதற்காக நான் வாழ வேண்டும்?’’

- கிட்டத்தட்ட வாழ்க்கையை முடித்துக்கொள்கிற மனநிலையுடன்தான் பாரத்தை இறக்கி நம்மிடம் வைத்தார் விமலா.

விமலாவின் வாழ்க்கைக்கு நீங்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள் தோழிகளே?
தொகுப்பு: சாஹா.