கொஞ்சம் நில்லுங்க... நகைச்சீட்டு சேரப் போறீங்களா?



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

                           கரன்சி நோட்டுகளை கத்தை கத்தையாகக் கொடுத்து நகை வாங்குவது பலருக்கு இயலாத காரியம். அதனாலேயே சீட்டுகளின் பின்னால் ஓடுகிறார்கள். ‘தங்க நகைச் சேமிப்புத் திட்டம்’ என்பது போன்ற கவர்ச்சிகரமான பெயர்களில் எல்லா நகைக்கடைகளிலுமே நகைச்சீட்டு இருக்கிறது. 12 மாதங்கள், 18 மாதங்கள், இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் என பலவித காலப் பிரிவுகளில் பணம் கட்ட வேண்டும். ‘சீட்டு சேரும்போதே பரிசு’, ‘ஒரு மாத தவணை இலவசம்’, ‘செய்கூலி-சேதாரம் இல்லை’ என பல தூண்டில்களும் உண்டு.

 ஆனால், பல மாதங்களுக்குப் பின் நகை வாங்கும் நாள் அன்று தங்கத்தின் விலையைப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும். ஒரு சவரன் நகைக்குத் திட்டமிட்டு, சீட்டு கட்டினால், அரை சவரன்தான் மிஞ்சும். தங்கத்தின் விலை தகதகவென எகிறும் இவ்வேளையில் நம் சேமிப்பை எப்படித் திட்டமிடுவது?

இப்போது செயல்பாட்டில் இருக்கும் தங்க நகை சேமிப்புத் திட்டங்கள் இவை...

திட்டம் 1: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை 15 மாதங்கள் செலுத்த வேண்டும். தவணைக் காலம் முடியும்போது நகைக்கடை சார்பில் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கூடுதலாகக் கொடுப்பார்கள் (உதாரணமாக ரூ.1,000 என்ற கணக்கில் 15 மாதங்கள் கட்டினால், ரூ15,000 + 1,000க்கு நகை பெறலாம்). சில கடைகளில் அன்பளிப்புப்பொருளும் கிடைக்கும். இந்தத் திட்டம்தான் பல வருடங்களாக நடைமுறையில் இருப்பது. பொதுவாக இத்திட்டத்தில் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படும்.

திட்டம் 2: ஆயிரம் ரூபாயை 15 மாதங்கள் செலுத்தினால் முன்கூட்டியே உறுதி செய்யப்படும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைப் பெறலாம். இதற்கு செய்கூலி-சேதாரம் உண்டு.

திட்டம் 3: நாம் செலுத்தும் தொகையை அந்த மாதத்தின் குறைந்த விலையில் உள்ள தங்க மதிப்புக்கு ஏற்ப கிராம் கணக்கில் நம் கணக்கில் வரவு வைத்துக்கொள்வார்கள். தவணை காலம் முடியும்போது நம் கணக்கில் உள்ள கிராம்களை கூட்டி, நகைகளாக வாங்கிக்கொள்ளலாம்.

திட்டம் 4: பணம் செலுத்தும் நாளன்று உள்ள தங்கத்தின் விலையை ரிசர்வ் செய்துகொள்வது மற்றுமொரு திட்டம். (இன்றைக்கு கிராம் ரூ.2,700 என்றால், நம் சீட்டுத் திட்ட காலம் இரண்டு வருடம் என்றாலும், முடியும்போது, பழைய விலைக்கே நகை வாங்கிக்கொள்ளலாம். அப்போது தங்கத்தின் விலை ஏறியிருந்தாலும் இறங்கியிருந்தாலும் இது பொருந்தும்).

இப்படி தங்க நகை சேமிப்புத் திட்டத்தின் கீழ் கண்கவரும் புதிய புதிய திட்டங்கள் இப்போது அறிமுகமாகி வருகின்றன. உண்மையில் இவை உபயோகமானவைதானா?

நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன் சொல்கிறார்... “நாம் சீட்டுச் சேர்க்க ஆரம்பிக்கும்போது தங்கத்தின் விலை அதிகமாக இருந்து, தங்கம் வாங்கும்போது விலை குறைந்திருந்தால் லாபம் நமக்குத்தான். ஒருவேளை தங்கத்தின் விலை குறையும் என்றால் மாதாமாதம் பணம் கட்டி தங்கம் வாங்கும் திட்டம் ஓகே. ஆனால், தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் மாதாமாதம் நம் கையிலுள்ள பணத்தில் தங்க நாணயங்களை அரை கிராம், ஒரு கிராம் என வாங்கிச் சேர்க்கலாம். இதுவும் சிறுசேமிப்புத் திட்டம் போன்றதுதான். தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால் பணம் கட்டி சேமிப்பதைவிட தங்கமாகவே சேமிப்பது நல்லது.

தங்க நகைச் சீட்டில் சேரும்போது கவனமாக இருக்கவேண்டும். நாம் பணம் கட்டும் இடம் நம்பத்தகுந்த நிறுவனமா என்பதை கவனிக்க வேண்டும். ஒரு கடைக்காரர், வெறும் துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுக்கிறார் என்றால், உங்கள் பணம் ஏமாற்றப்படுகிறது என்று அர்த்தம்.

இப்போது வங்கிகள், அஞ்சல் நிலையங்களிலும்கூட தங்க நாணயங்கள் விற்பனை செய்கிறார்கள். இங்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் தாராளமாகத் தங்க நாணயங்கள் வாங்கலாம். எங்கே தங்கம் வாங்கினாலும், எடைபோட்டு வாங்குவது முக்கியம். சிலர், குறைந்த எடையுள்ள தங்கத்தை தலையில் கட்டி உங்கள் பணத்தை கொள்ளையடித்துவிடுவார்கள். சிலர், தங்கத்துக்கு செய்கூலி இல்லை என்று சொல்லிவிட்டு, சேதாரத்தில் மொத்தமாகப் பணம் பிடித்துவிடுவார்கள். அதிக வேலைப்பாடுகள் உள்ள நகைகளுக்கு சேதாரம் அதிகம் என்று சொல்லி ஏமாற்றுவார்கள். கவனமாக இருங்கள்!’’ என எச்சரிக்கிறார் சோம.வள்ளியப்பன். 

எந்தெந்த வழிகளில் தங்கம் வாங்கலாம்? அதையும் விளக்குகிறார் சோம.வள்ளியப்பன்.

தங்கத்தை எப்போதும் நகையாகவே சேமிக்க வேண்டும் என்பதில்லை. நம் விருப்பத்திற்கேற்ப பல வழிகளில் பாதுகாப்பாக சேமிக்கலாம். அப்படியான திட்டங்கள்...

கோல்டு இ.டி.எஃப். (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்)

தங்கநகை முதலீட்டுக்கு இந்தத் திட்டம் சரியான சாய்ஸ். மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகைதான் இந்த இ.டி.எஃப். இதைத் தமிழில் ‘தங்க நிதியம்’ என்று சொல்லலாம். நாம் வாங்கும் தங்கம், நம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். தங்கத்தை நாம் கண்ணால் பார்க்க முடியாது... அவ்வளவுதான்! பங்குச்சந்தை இயங்கும் நேரமான காலை 10 மணி முதல் 3 மணி வரை இந்தத் தங்கத்தை நீங்கள் வாங்கலாம் அல்லது விற்கலாம்.
இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்குத் தேவை. இதை அருகிலுள்ள வங்கிகளிலும், பங்குச்சந்தை தரகர்களிடமும் தொடங்கலாம். டீமேட் கணக்கும் கிட்டத்தட்ட உங்கள் வங்கிக்கணக்கைப் போலவே நிர்வகிக்கப்படும். கணக்குப் பராமரிப்புக்கு ஆண்டுதோறும் குறைவான ஒரு தொகை செலுத்தவேண்டியிருக்கும். இத்திட்டத்தில் தங்கம் வாங்குவது பாதுகாப்பானது... லாபகரமானது!

இ-கோல்டு (எலக்ட்ரானிக் கோல்டு)

இது சிறிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கான திட்டம். ஒரு கிராம் தங்கம்கூட வாங்கலாம். இதற்கும் டீமேட் கணக்குத் தொடங்க வேண்டும். ரூ.300 மட்டுமே செலவாகும். இதுவும் கிட்டத்தட்ட இ.டி.எஃப். போலத்தான். என்ன... இ.டி.எஃப். முறையில் நீங்கள் தங்கத்தை வாங்கி, விற்க முடியும். இதில் தேவைப்பட்டால் நீங்களே தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த முறையில் 24 கேரட் சுத்தமான தங்கம் கிடைக்கும். சந்தை விலைக்கே தங்கத்தை வாங்க முடியும் என்பதால் லாபகரமான திட்டம் இது. காலக்கெடு எதுவுமில்லை என்பதால் நீண்டகால முதலீடாகக்கூட இதை நாம் நிர்வகித்துக் கொள்ளலாம்.

கமாடிட்டி வர்த்தகம்

தங்கத்தைப் பாதுகாப்பான வழியில் வாங்க கமாடிட்டி சந்தையும் வழிகாட்டுகிறது. 6 மாதம் கழித்து நாம் வாங்கவேண்டிய தங்கத்தை, இன்றே பணம் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளும் முறை இது. இதில் சுத்தமான தங்கக்கட்டிகளை மட்டுமே வாங்க முடியும். ஆபரணமாக வாங்க முடியாது. கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட புரோக்கிங் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, கணக்கு தொடங்க வேண்டும். இதற்கு பான்கார்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கிக்கணக்கு ஆகியவை தேவை. இந்த முறையில், 8 கிராம், 100 கிராம், ஒரு கிலோ என்ற 3 வகைகளில் மட்டுமே தங்கத்தை வாங்க முடியும்.

தங்கம் வாங்குவது எதிர்காலத்துக்கு நல்லது. சீட்டோ, மற்ற திட்டமோ ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, நன்கு விசாரித்து இறங்குவதே, உங்களுக்கும் உங்கள் பணத்துக்கும் நல்லது!
- எஸ்.பி.வளர்மதி