எழுத்தாளர் என்பதே பிடித்த அடையாளம்



- ஸ்ரீதேவிமோகன்

சிவகாமி ஐ.ஏ.எஸ்.

சிவகாமி ஐ.ஏ.எஸ். தமிழகம் அறிந்த எழுத்தாளர். சமூக அக்கறை சார்ந்த தன் எழுத்துக்களால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். எழுதுவதோடு மட்டுமல்லாமல் தன் துறை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்தவர். அரசியல், சமூகப்பணி, எழுத்து என்று விடாது இயங்கிக்கொண்டிருக்கும் சிவகாமி ஐ.ஏ.எஸ். உடனான சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். உரையாடலிலிருந்து…

வாசிப்பு ஆர்வம்
அம்மா நல்லா கதை சொல்லுவாங்க. அதனால் சிறுவயதிலேயே கதைகள் மீதான ஈடுபாடு ஆரம்பித்தது. கல்கி போன்ற இதழ்கள் வீட்டிற்கு தொடர்ந்து வரும். தமிழ் மொழி மீது இயல்பாக இருந்த ஆர்வம் பள்ளிக் காலங்களிலே வாசிப்பின் பக்கம் என்னை திருப்பியது. கல்லூரிக் காலங்களில் வாசிப்பு தளம் விரிவடைந்தது. தொடர் வாசிப்பு இருந்தது.

முதல் எழுத்து
கல்லூரியில் பொதுத்தமிழில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தேன். தமிழ் ஆர்வத்தால் அந்த சமயத்தில் ஒரு கதை எழுதி பேராசிரியர்களிடம் கொண்டு போய் காண்பித்தேன். கதை நல்லா இருக்கு. பத்திரிகைகளுக்கு அனுப்பு என சொன்னார்கள். அனுப்பினேன். 1975ம் ஆண்டு என் முதல் கதை ‘தினமணிக்கதிரில்’ வெளியானது. அதற்கு 200க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன. அதனால் எழுத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

முதல் புத்தகம்
கல்லூரி முடித்த ஒரு வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப்பெற்றேன். அத்துடன் ஒருபக்கம் தொடர்ந்து கதைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். ஐ.ஏ.எஸ். ஆன பிறகு என் முதல் நூல் வெளிவந்தது. முதலில் ஒரு சிறுகதை தொகுப்புதான் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் ‘பழையன கழிதலும்’ நாவல் தான் முதலில் வெளியானது.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் என் முதல் நூலுக்கான முன்னுரையை எழுதினார். ‘பழையன கழிதலும்’ என்ற அந்த நாவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சென்றது. அது தொடர்பான விவாதம் நடத்தியது. இதனை செய்ததில்ஆ. சிவ சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர். அதனால் அந்த நாவல் மக்களிடம் சென்று சேர்ந்தது. அந்நூலுக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது. ‘பழையன கழிதலும் சிவகாமி தானே நீங்க?’ என்று கேட்குமளவு எனக்கு அடையாளம் கிடைத்தது.

எழுதியுள்ள புத்தகங்கள்
6 நாவல்
2 கவிதைத் தொகுப்பு
3 கட்டுரைத் தொகுப்பு
4 சிறுகதைத் தொகுப்பு (கிட்டதட்ட 100 சிறுகதைகள்).

என்னைப் பொறுத்தவரை இது குறைவு தான். இன்னும் நிறைய எழுத வேண்டும். அதுக்கான நேரம் இனி கிடைக்கும் என நினைக்கிறேன். ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர் நீங்கள். இதில் உங்களுக்குப் பிடித்தமான அடையாளம் பிடித்தமான அடையாளம் எழுத்தாளர் என்பதுதான். ஒரு எழுத்தாளராக இருக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடிகிறது. புதிய சிந்தனைகளை உள்வாங்க முடிகிறது.

புதிய சிந்தனைகள் உற்சாகம் அளிக்கிறது. அந்த சிந்தனைகளை கவனமாக பதிவு செய்வதில் என் ஆற்றல் வெளிப்படுகிறது. என் முழு ஆற்றலையும் பயன்படுத்துகிறேன் என நம்புகிறேன். எழுத்தாளராக இருப்பது என் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என நினைக்கிறேன். என் வாழ்வு முழுமையை நோக்கி பயணம் செய்வதாகவும் நினைக்கிறேன். அதற்கு காரணம் எழுத்து தான். ஒரு எழுத்தாளராக இருக்கும்போது சுதந்திரமானவளாக இயங்குகிறேன்.

எழுத்துலகில் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்
தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை எனக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பதிப்பாளர்களை பொறுத்தமட்டில் புது எழுத்தாளர்களுக்கு உரிய களத்தை அமைத்துத் தருகிறார்கள். உரிய அங்கீகாரம் கொடுக்கிறார்கள். மற்றபடி இன்றும் பல கல்லூரி களில் இலக்கிய கருத்தரங்கங்களுக்காக என்னை அழைக்கிறார்கள். என்னால் தான் நேரம் இல்லாமையால் பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.

விருதுகளை பொறுத்த வரை அரசு சார்ந்த எந்த ஒரு விருதுக்கும் நான் என் புத்தகங்களை அனுப்புவதில்லை. அது தவிர என் எழுத்துக்கு உலகளவிலான அங்கீகாரம் நிறையவே கிடைத்திருக்கிறது. எனது நூல்களை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதனால் கிடைத்த அங்கீகாரத்தால் உலகளவிலான பல கருத்தரங்குகளிலும், இலக்கியத் திருவிழாக்களிலும் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுகிறேன்.

அமெரிக்கா, ஜெர்மன், சிங்கப்பூர், நேபாள் என பல நாடுகளில் இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ராஜஸ்தானில் நடைபெறும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா தான் உலகளவில் மிகவும் பேசப்படும் ஒன்று. அதிலும் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பல பல்கலைக்கழகங்களிலும் இலக்கிய உரை ஆற்றி இருக்கிறேன். இவற்றை என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

எழுத்தில் சாதித்தது
சாகித்ய அகாடமி தேர்ந்தெடுத்த 100 சிறந்த நாவல்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எனது ‘The Cross section’ என்கிற நாவல்தான் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 1995ம் ஆண்டு ‘குறுக்குவெட்டு’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்த நாவல் இது. என்னுடைய புத்தகங்கள் பாடநூல் திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன. உலகளவில் என் நாவல்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் ‘பெண்களின் அரசியல் பங்களிப்பு’ குறித்து ஒரு வருட ஆய்வுப்படிப்பிற்காக எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

எழுத்து என்பது தனிநபர் அங்கீகாரமாக இல்லாமல் நம் சூழல் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பை ஆதரிக்கும் விதமாகவோ, எதிர்க்கும் விதமாகவோ பதிவு செய்ய வேண்டிய ஒன்று என எண்ணுகிறேன்.

எழுத்தின் உட்பொருள்
எனது ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விஷயத்தை பேசுகிறது என நினைக்கிறேன். சாதி கட்டுமானம், கிராமிய பெண்களின் வாழ்வியல் சூழல், நகரத்துப் பெண்களின் வாழ்க்கை முறை, திருமணம் அவர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றம், உடல் அரசியல், இளைஞர்களின் சாதி மனப்பான்மை எப்படி இருக்கிறது? சாதி சார்ந்து அவர்கள் எப்படி இயங்குகிறார்கள்? என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விஷயத்தைப் பேசினாலும் அனைத்தையும் சமூகம் சார்ந்தே எழுதி இருக்கிறேன். அனைத்துமே சமூக அக்கறையினை வெளிப்படுத்துகின்றன என்றே நினைக்கிறேன்.

எழுத்தில் உங்கள் பாணி
எனக்கென்று எந்த பாணியும் இல்லை. கதைகளில் நான் எடுத்துக்கொள்ளும் விஷயம்தான் என் எழுத்தின் பாணியை தீர்மானிக்கிறது. எழுதுபொருள், அதற்கான இடம், அதற்கான மொழிதான் அதனை தீர்மானிக்கிறது. ஆனால் வாசகர்கள் ஸ்டீரியோ டைப்பான விஷயங்களை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். ‘ஆனந்தாயி’ நாவல் மாதிரி எழுதுங்க. நீங்களும் ஏன் எல்லாரைப் போலவும் நகரப்பெண்கள் பற்றி எழுதுறீங்க என்று கேட்கிறார்கள். ஆனால் நான் தேர்ந்தெடுக்கும் களம் அதன் எழுத்து முறையை வித்தியாசப்படுத்துகிறது என்றே நினைக்கிறேன்.

இலக்கியமும் ஆட்சிப்பணியும்
எனக்கு ஆட்சியாளர் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாம் கிடையாது. நல்ல மாணவியாக இருந்தேன். முதுகலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றேன். எம்.ஏ. முடித்தவுடன் எழுதிய எல்லா அரசாங்கத் தேர்விலும் வெற்றிப்பெற்றேன். ஓர் அரசாங்க வேலைக்குச் சென்று நான் சேரப்போனபோது அப்பா வந்து அங்கிருப்பவர்களிடம் ‘என் பெண் ஐஏஎஸ் ஆகப்போகிறார்.

அதனால் அவளுக்கு இந்த வேலை வேண்டாம்’ என்றார். அப்போதுதான் அப்பாவின் எண்ணம் எனக்குப் புரிந்தது. அதற்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வும் எழுதினேன். அதிலும் வெற்றிப்பெற்றேன். 23 வயதிலேயே அகாடமியில் சேர்ந்தேன். ஆட்சியாளராய் இருந்ததால் நேரம் கிடைப்பது சிரமம்தான் என்றாலும் இரவு நேரங்களில் குழந்தைகளை உறங்க வைத்தப் பின்னர் கணவர் தூங்கிய பின் உட்கார்ந்து எழுதுவேன்.

ஆட்சியாளராய் இருந்தபோது நான் எழுதிய ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ என்ற நாவலின் கதாநாயகி நீலாவின் கதாபாத்திரம் என் வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உலக ஞானம், அரசியல் என அந்தப் பணி எனக்குப் பல விஷயங்களை கற்றுத்தந்தது. இதனால் என் எழுத்தை செம்மைப்படுத்த, எழுத்திற்கான கூடுதல் தெளிவு கிடைக்க இந்தப் பணியும் காரணம் என நினைக்கிறேன்.

எழுத்து என்பது பல விஷயங்களை பார்க்கிறோம். ஒரு விஷயத்தில் நமக்கு ஆர்வம் ஏற்படும். ஆனால் அதை அப்படியே கதையாக எழுதி னால் அது சுவாரஸ்யமாக இருக்காது. ஒரு விஷயமோ அல்லது சம்பவமோ அது நமக்குள் ஊறி, முட்டி மோதி, பல விதமான டைனமிக்ஸை நமக்குள் ஏற்படுத்தி, ஒரு பொறி ஏற்பட்டு உணர்ச்சி பீறிடல் ஏற்படும் போது தான் அதை எழுத முடியும். அது தான் நன்றாகவும் இருக்கும்.

தங்கள் எழுத்தில் அதிகம் பிரதிபலித்தது
என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள், நான் எதிர்கொள்கிறவர்களின் வலி இவை தான் என் எழுத்தில் பிரதிபலிக்கும். அதனால் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அதாவது பழங்குடியினர், தலித் போன்றோரின் பிரச்னைகளை பிரதிபலித்திருக்கிறேன். ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், அறியாமையில் இருக்கும் பெண்களின் நிலை குறித்து பேசி இருக்கிறேன்.

பெண்களின் பொருளாதார நிலை, அரசியல் அறிவு போன்றவற்றை மாற்றி அமைக்கும் தொனியில் எழுதுகிறேன். என் கதைகள் மட்டுமல்ல என் கட்டுரைகளிலும் அதைத்தான் பிரதிபலிக்கிறேன். அவற்றிற்கு என் எழுத்து பயன்படும்போது பெருமை அடைகிறேன். மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் எழுதும் போது பொது எழுத்தாக பார்க்கப்படுவது நான் எழுதும் போது தலித் எழுத்தாகத் தான் பார்க்கப்படுகிறது.

எழுத்தில் சாதிக்க விரும்புவது
எழுத்து மக்களை சென்று சேரும்போது ஏதோ ஒரு நல்ல விதத்தில் அது அவர்களின் உந்துசக்தியாகவோ, ஊக்கப்படுத்தும் விதமாகவோ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தன் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ள உதவவேண்டும். அவர்களிடம் ஒரு விளைவை உருவாக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் எந்த விஷயத்தைக் கற்றுத் தருவோமோ நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான விஷயம் சென்று சேர வேண்டும் என நினைப்போமோ அதே போல் எப்போதும் சமூக அக்கறை சார்ந்து எழுத்து இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

தற்போது எழுதி வருவது
இதுவரை தமிழில் எழுதிய நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது மட்டும் செய்திருக்கிறேன். நேரடியாக எழுதியதில்லை. ஆனால் தற்போது நேரடியான ஆங்கில நாவல் ஒன்றை எழுதி வருகிறேன். கனவுகளும், சூழ்நிலையும் தனி மனித ஆளுமையை எப்படி உருவாக்குகிறது என்பது அதன் உட்பொருளாக இருக்கும்.

ஆதர்ச எழுத்தாளர்
நிறைய பேர் இருக்காங்க. ஒரு பெரிய வரிசையே இருக்கு. பெங்காலி எழுத்தாளர் சத் சந்திரன், ஆங்கிலத்தில் ஆண்டன் செக்காவ், டால்ஸ்டாய், காஃப்கா நவீன எழுத்தாளர்களான கேத்ரின் பூ, ருவானா போன்றோர் தமிழைப் பொறுத்தமட்டில் பிரபஞ்சன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அம்பை, ராஜம் கிருஷ்ணன், இமையம், ஜெயமோகன், சாரு நிவேதிதா, பாமா என எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலின் நீளம் அதிகம். இளம் எழுத்தாளர்களில் ஆதவன் தீட்சண்யா, குட்டி ரேவதி, சுகிர்தராணி எழுத்துக்கள் எல்லாம் பிடிக்கும்.

வளரும் எழுத்தாளர்களுக்கு
உண்மையா எழுதுங்க. பலருக்கு பல விதமான எழுத்து உத்திகள் இருக்கும். எது எப்படி இருந்தாலும் சமூகப் பொறுப்புணர்வோடு எழுதுங்க. உண்மை இருக்கும் பட்சத்தில் அதை மற்றவர்களுக்காக சென்சார் செய்யணும்கிற அவசியமில்லை.

குங்குமம் தோழி வாசகிகளுக்கு
பெண்கள் ஆண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் நம் வாழ்வு பயணத்தில் ஆண்களுடன் இணைந்தே பயணிக்க வேண்டி இருப்பதால் அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. எதிர்க்கணும் என்கிற அவசியமுமில்லை. நம்மை நம் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தி அவர்களையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தணும். அவர்களை நம்மை குறித்து சிந்திக்க வைக்கணும். நேர்மறையான சிந்தனைகளை அவர்கள் மனதில் உருவாக்கணும். நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். எதிர் நீச்சல் போடவும் தெரியணும்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

இதுவரை எழுதியவை நாவல்கள்
பழையன கழிதல்
குறுக்கு வெட்டு
இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
நாளும் தொடரும்
கடைசி மாந்தர்
உண்மைக்கு முன்னும் பின்னும்

கவிதைத் தொகுப்புகள்
கதவடைப்பு
பயனற்ற கண்ணீர்

கட்டுரைத் தொகுப்புகள்
இடது கால் நுழைவு
உடல் மொழி