பதக்கமும் பணி  நியமனமும்



- ஜெ.சதீஷ்

தேசத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித் தந்த பி.வி.சிந்துவை ஆந்திர மாநில அரசு உதவி ஆட்சியர் பணிக்கு நியமித்து உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு, பணி நியமன ஆணையை நேரில் வழங்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கெளரவித்துள்ளார்.  

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு, அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். அவ்விழாவின் போது பி.வி.சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை மற்றும் அமராவதியில் வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், பி.வி.சிந்து விரும்பினால் ஆந்திராவில் உதவி ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த விழாவில் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அம்மாநில விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் பி.வி. சிந்துவுக்கு பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு நேரில் வழங்கினார். இது குறித்து வீராங்கனை பி.வி.சிந்து, கூறுகையில்...
 
“பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற அரசு அறிவிப்புகள் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. இதன் மூலம் பலரும் விளையாட்டுத் துறையில் சாதிக்க முன் வருகின்றனர். எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவேன். விளையாட்டுத் துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு” என்றார் பி.வி.சிந்து. பிற மாநிலங்களும் இதைப் பின்பற்றலாமே?