செஞ்சுதான் பாருங்களேன்...



அரிசி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பூங்கார் அரிசி - 2 கப்,
வேர்க்கடலை - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர்த்தி மாவாக அரைக்கவும். இந்த மாவை வெள்ளைத் துணியில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து ஆறியதும் பொடி செய்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை பொடி, தேங்காய்த்துருவல், வெல்லப்பொடி அனைத்தையும் கலந்து கொள்ளவும். பூரணம் ரெடி. வெந்த மாவில் உப்பு, தண்ணீர், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகள் செய்து, வட்டமாக தட்டி 1 டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மடித்து கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

அரிசி கார கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
பச்சைமிளகாய் - 2,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். அரிசி மாவை 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் வறுத்த பருப்பு வகைகள், வதக்கிய வெங்காய கலவை, உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். விரும்பினால் தேங்காய்த்துருவல்
சேர்க்கலாம்.

ரவை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ரவை - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ரவையை வறுத்துக் கொள்ளவும். பின்பு ரவையில் சிறிது தண்ணீர் ஊற்றி பிசறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். முந்திரி, திராட்சை, தேங்காய்த்துருவலை நெய்யில் வறுத்து ரவையில் சேர்த்து உப்பு, தண்ணீர், வெல்லப்பொடி, ஏலப்பொடி கலந்து பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

கம்பு கொழுக்கட்டை (இனிப்பு)

என்னென்ன தேவை?

கம்பு - 2 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
சுக்குத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கம்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, வடித்து பின் அம்மியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். இந்த ரவையை ஆவியில் 5 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, மறுபடியும் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கம்பு கொழுக்கட்டையில் வெல்லப்பாகு, நெய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்.

கம்பு கொழுக்கட்டை (காரம்)

என்னென்ன தேவை?

கம்பு - 2 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
பச்சைமிளகாய் - 2,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கம்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து, ரவை போல் உடைத்துக் கொள்ளவும். இதை ஒரு துணியில் போட்டு ஆவியில் 5 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளவும். கம்பு ரவையில் வறுத்த பருப்பு வகைகள், வதக்கிய வெங்காய கலவையை கொட்டி நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து, தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்.

- சு.கண்ணகி, மிட்டூர்.