மகசேசே விருது பெறும் கெத்சி சண்முகம்



- ஜெ.சதீஷ்

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருது 82 வயதுடைய இலங்கை தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்து 1957ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமான ராமன் மகசேசே நினைவாக, ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. மகசேசே அறக்கட்டளையால் ஆண்டு தோறும் ஆறு துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது இலங்கை தமிழ்ப் பெண்ணான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த கெத்சி சண்முகம்  ஆசிரியராக பணியாற்றியவர். சிறுபான்மை தமிழ் சமூகத்தை சேர்ந்த இவர் சிறு வயது முதலே சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற முப்பதாண்டு கால போரினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்தப் பெண்கள், சிறுவர்கள், ஆதரவற்றவர்கள், போர் வளையத்தில் குண்டு வீச்சுகள் மற்றும் கைது  ஆபத்தை  எதிர்கொண்டவர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கி சிறப்பான பணியை ஆற்றியுள்ளார்.

போர் நடந்த காலகட்டத்தில் கடுமையான எதிர்ப்பு போன்றவற்றுக்கு மத்தியில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சளைக்காமல் தனது சேவைகளை முன்னெடுத்துச் சென்றதால், இவரது சேவையை பாராட்டி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பணிகளை புரிந்ததற்காக வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ம் நாள் இந்த விருது அவருக்கு வழங்கப்படும்  என்று இவ்விருதை வழங்கும் பிலிப்பைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பெருமையில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருதைப்பெறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமை பெற்றுள்ளார் கெத்சி சண்முகம். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.