உயிரைக் கொல்லும் ஸ்மார்ட் போன்கள்



- ஜெ.சதீஷ்

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருப்பவர்கள்; ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என புலம்பும் அளவிற்கு மனித வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது ஸ்மார்ட் போன்கள். இந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சில அப்ளிகேஷன்கள் ஒருவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மைதான்.

நவீனமயமான உலகத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது. குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறூட்டும் காலம் சென்று மொபைல் போனை காட்டி சோறூட்டும் காலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவரும் மொபைல் போன்களை பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக கையாள்கிறார்கள்.

இதன் மூலம் சமூக வலைத் தளங்கள் மூலமாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றாலும் இதில் உள்ள ஆபத்துகளை நாம் அறிவதே இல்லை. குறிப்பாக குழந்தைகள் இதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று நாம் கண்காணிப்பதே கிடையாது. ஒருவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு மோசமான அப்ளிகேஷன்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் விதமான உயிர்க் கொல்லி கேம் அப்ளிகேஷன்கள் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்துபவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு மூர்க்கத்தனமாக அதிலே மூழ்கி விடுகிறார்கள். 2013ம் ஆண்டு பிலிப் புடெகின் எனும் 22வயது ரஷ்ய இளைஞன் உருவாக்கிய சமூக வலைத்தளக் குழுவின் பெயர் Blue Whale Suicide Game.

இந்தக் குழுவில் இணைந்தவர்கள், அதன் பொறுப்பாளரின் பேச்சைக் கேட்டு அவர் சொல்படி அவர் செய்யச் சொல்கிற வேலைகளை செய்யவேண்டும். பாடல்கள் கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது தொடங்கி பிளேடால் கையை கீறிக்கொள்வது உட்பட சுயசித்திரவதை செய்து கொள்வது என பல டாஸ்க்குகள் இதில் உண்டு. படிப்படியாக டாஸ்க்குகளின் அபாயம் அதிகரிக்கப்படும். இதில் இறுதியான டாஸ்க் தற்கொலை செய்துகொள்வது.

இதில் இருக்கக்கூடிய த்ரில்லுக்காக பலர் இதில் இணைந்து இதன் விபரீதம் புரியாமல் விளையாடுகின்றனர். இதுவரை ரஷ்யாவில் மட்டும் 130 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எல்லாம் சரி! அதென்ன ப்ளூவேல் என்கிற பெயர்? நீலத் திமிங்கலம் தன்னை மாய்த்துக்கொள்ள கடலை விட்டு கரை நோக்கி வருமாம். அதனால்தான் இந்த அப்ளி கேஷனுக்கு Blue whale என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் மட்டும் வெகுவாக பரவியிருந்த இந்த விளையாட்டு, பல்வேறு நாடுகளிலும் பரவியது. அண்மையில் மும்பையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட செய்தி கடுமையான அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. எங்கோ நிகழ்ந்தது போக, இந்தியாவுக்கும் இந்த மரண விளையாட்டு வந்துவிட்டதை அறிந்து நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

மஹாராஷ்டிரா மாநிலம்,மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் #bluewhalesuicidegame குழுவில் இணைந்ததன் மூலமாக தற்கொலை செய்துகொண்டான். மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் இதற்கு முன்பு போகிமான் கேமால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட விழிப்புணர்வால் இந்த போகிமான் கேம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாலும் உயிரைப் பறிக்கும் இம்மாதிரியான கேம்களை தடை செய்வதே சிறந்த வழியாக இருக்கும். குழந்தைகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களால் பெருவாரியாக ஈர்க்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறார்கள். இது குறித்து உளவியல் நிபுணர் இரா.சத்தியநாதன் கூறுகையில்...

“நேற்றைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பொதுவெளியில் கூடி விளையாடி பொழுதுபோக்கினர். இன்று அந்த சுதந்திரம் இல்லை.  நான்கு சுவற்றுக்குள் பூட்டி வைப்பதால் ஏதோ ஒரு பொழுதுபோக்கு சாதனம் அவர்களுக்கு தேவைப்படுகிறது அதன் அடிப்படையில் உருவானதே வீடியோ கேம் போன்ற நவீன விளையாட்டு சாதனங்கள்.

இதன் வளர்ச்சி டி.வியில் இருந்து மொபைல் போன்களுக்கு மாறியது. இன்று சர்வசாதாரணமாக பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகிறார்கள். மொபைல் போன்கள் வாயிலாக எளிதாக சமூக வலைத்தளங்களை கையாளமுடிகிறது. இதில் பல்வேறு செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என்றாலும் அதனுள்ளும் சில ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன.

பெற்றோர்கள் அறிவுப்பூர்வமான தகவல்களை மட்டும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் இணையதளம் மூலம் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும். ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. எதை நாம் செய்யக்கூடாது என்கிறோமோ அவற்றை செய்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு தோன்றுவது இயல்பு.

ஆகையால் அவர்கள் பெற்றோர்கள் கண்காணிப்பில் இணையதளத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானது. பெரும்பாலும் மொபைல் போன்களை பயன்படுத்தாமல் குழந்தைகளை கணினி பயன்படுத்தச் சொல்வது சிறந்தது. ஆனால், மொபைல் போன் பயன்படுத்தவே விடாமல் இருப்பதும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் சக மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை பார்க்கும்போது அவர்கள் அதற்கு ஆசைப்படுவார்கள்.

ஆகையால் அந்த குழந்தைகளுக்கு மொபைல் போன் பயன்படுத்தக்கூடிய சுதந்திரத்தை கொடுத்து பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய குழந்தை இது போன்ற அப்ளிகேஷன்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்றால் அவர்களின் இயல்பான நடவடிக்கையில் மாற்றத்தை நம்மால் காண முடியும். வெளியில் சென்று விளையாடாமல், ஒழுங்காக சாப்பிடாமல், தனி அறையில் அமர்ந்து கொண்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது போன்ற அறிகுறிகள் தெரியும்போது பெற்றோர்கள் அவர்களிடம் உட்கார்ந்து பேச வேண்டும்.

இப்படி ஆரம்பத்திலே கண்டறிந்து அவர்களுக்கு புரியவைத்தால் அவர்களை இதிலிருந்து விடுவிக்க முடியும். இதுவும் போதைப் பழக்கம் போலதான். ஆரம்பத்திலே இதை தடுக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு. பெற்றோர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்தக் குழந்தை வேறு எந்த விஷயங்களிலும் ஆர்வம் இல்லாமல், தன்னுடைய எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தன்னுடைய கனவுகளை எல்லாம் மறந்து மனஅழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது.

குழந்தைகளை எப்போதும் உங்கள் கண்காணிப்பின் கீழும் அரவணைப்பின் கீழும் வைத்திருங்கள். தேவையற்ற அப்ளிகேஷன்களை தரவிரக்கம் செய்யாமல் தடுத்து லாக் செய்து வைக்கும் வசதியை செய்து வைத்துக் கொள்ளவேண்டும். தொழில்நுட்பத்தை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காகவே பயன்படுத்த கற்றுத்தர வேண்டும். இன்டர்நெட், மொபைல் போன் டிஜிட்டல் உலகிற்கு அப்பால் ஏராளமான நல்ல விஷயங்கள் இங்கு உள்ளன. அவற்றில் அதிகம் ஈடுபாடு ஏற்படுமாறு அவர்களின் மனதை மாற்றவேண்டும்” என்கிறார் சத்தியநாதன்.