முன்னணியிலிருக்கும் பின்னணிக் குரல்



- ஸ்ரீதேவி மோகன்

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ‘சந்தோஷ்…’ என ஜெயம் ரவியைப் பார்த்து குறும்போடு கூப்பிடும் அந்த மெல்லிய குரலுக்கும் ‘சந்திரமுகி’ படத்தில் ‘ஒதலவா நன்ன ஒதலவா...’ எனும் பதற வைக்கும் கம்பீரக் குரலுக்கும் சொந்தக்காரர் ஒருவர்தான். அவர்தான் பின்னணிக் குரல் கலைஞர் சவீதா. தன் குரல் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு நன்கு அறிமுகமானவர். ‘அன்னை வயல்’ வினோதினி தொடங்கி, வரப்போகும் ‘விவேகம்’ பட கதாநாயகி வரை 30 ஆண்டுகளாக பல முன்னணி கதாநாயகிகளுக்கு பல படங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சாதனையாளர் சவீதா பகிர்ந்து கொண்ட தன் திரைத்துறை அனுபவங்கள் இதோ...

“தொலைக்காட்சியில் ‘ராமாயணம்’ தொடருக்கு பால ராமருக்குக் குரல் கொடுக்க (டப்பிங்) வாய்ஸ் டெஸ்ட்டுக்காக தேர்வு நடந்து கொண்டிருந்தபோது பாட்டிக்குத் தெரிஞ்சவங்க மூலமா எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ஸ் டெஸ்டில் நான் செலக்ட் ஆனேன். தொடர்ந்து பால ராமருக்கு குரல் கொடுத்தேன். எனக்கு அப்போது ஆறு வயது. ஒரு பொழுதுபோக்கு போலதான் அதை செய்து வந்தேன்.

தொடர்ந்து வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு என்னுடைய ஏழு வயதில் முதன் முறையாக ‘மந்திரப்புன்னகை’ எனும் படத்தில் பேபி சுஜிதாவுக்குக் குரல் கொடுத்தேன். அதுதான் என் முதல் சினிமா பிரவேசம். அதன் பிறகு பல குழந்தை நட்சத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் நான் தான். பின்னர் மிக இளம் வயதிலேயே இளம் கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்ய ஆரம்பித்தேன். ‘அன்னை வயல்’ படத்தில் கதாநாயகியான வினோதினிக்கு குரல் கொடுத்தேன்.

பின்னர் முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்திராஜ் கல்லூரியில் படித்த போதும் அண்ணாமலை பல்கலையில் எம்பிஏ அட்வர்டைசிங் படித்துக்கொண்டிருந்த போதும் விடுமுறை நாட்களில் மட்டும் டப்பிங் செய்து கொண்டிருந்தேன். படித்த துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என நினைத்தேன்.

அதற்கு அடிப்படையாக படிப்பு முடிந்தவுடன் விளம்பரத் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். கிரியேட்டிவ்வாக யோசித்து ஸ்கிரிப்ட் எழுத வேண்டும், டைரக்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் கனவு கண்ட எனக்கு கிளையன்ட்களுடன் பேசும் வேலை தான் தரப்பட்டது. அது எனக்கு வருத்தமாக இருந்தது. பிடித்தமான வேலையைவிட நன்கு பொருந்திவிட்ட இயல்பாகிவிட்ட டப்பிங் வேலை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. அதையே கேரியராக எடுக்க முடிவெடுத்தேன்.

ஒரே மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து வேலை பார்ப்பதைக் காட்டிலும் புதுப்புது கம்பெனி புதுப்புது ப்ராஜெக்டுகள் என டப்பிங் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. உடம்பு முடியவில்லை என்றாலோ, மூடு இல்லை என்றாலோ லீவ் எடுத்துக்கொள்ள முடியும். நம் சூழ்நிலைக்குத் தகுந்தபடி வேலை செய்யலாம். அதனால் தொடர்ந்து டப்பிங் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

சிம்ரன், ஜோதிகா, அனுஷ்கா, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா, ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், பூமிகா, லைலா, நந்திதாதாஸ், சிநேகா என அனைத்து பெரிய கதாநாயகிகளின் பெரும்பான்மை படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். அதிலும் சிம்ரனுக்கு ஆல்மோஸ்ட் எல்லா படங்களிலும், ஜோதிகாவுக்கு அன்று தொடங்கி இன்றைய விளம்பரப் படங்கள் வரை நான்தான் அவரது வாய்ஸ்.

நடிகர் கார்த்தி கூட ஒரு முறை என்னிடம் பேசும்போது, “அண்ணிக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியில் இருந்து இன்னைக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் டப்பிங் கொடுக்கிறீங்க” என பாராட்டினார். தற்போது வெளிவந்த ‘வனமகன்’ கதாநாயகி சாயிஷா வரை டப்பிங்கை தொடர்கிறேன். இருட்டறையில் அமர்ந்து தனியாகத்தான் டப்பிங் செய்வேன். தெலுங்கிலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகிகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்ப் படங்கள் பல தெலுங்கிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போது எனது குரலே தெலுங்கிலும் வேண்டும் என்பதற்காக என்னையே பின்னணிக் குரல் கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அதனால் தெலுங்கு கற்றுக்கொண்டேன். மொத்தம் 800 படங்களுக்கு டப்பிங் செய்திருக்கேன். அதில் தெலுங்கில் மட்டும் 300 படங்களுக்கு மேல் செய்திருக்கிறேன்.

பெரும்பாலும் நடிகைகளின் மார்க்கெட் ஐந்தாறு வருஷங்கள்தான் இருக்கும். பின்பு குறைந்துவிடும். அதனால் ஒரே நடிகைக்கு மட்டும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் முடியாது. வெவ்வேறு கதாநாயகிகளுக்கும் கொடுக்க வேண்டும். அதற்குத் தகுந்த மாதிரி குரல்களை மாற்றி பேச வேண்டும்.அப்போதுதான் ஃபீல்டில் நீடிக்க முடியும். ‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக பலருக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்த பிறகு என்னை தேர்ந்தெடுத்தார்கள்.

நான் டப்பிங் செய்ய வந்த புதிதில் அதிகபட்சம் 15 பேர்தான் டப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது 1100க்கும் மேற்பட்டோர் டப்பிங் செய்ய வந்துவிட்டார்கள். பின்னணிப் பாடகிகள், நடிகைகள், தயாரிப்பாளர்களின் உறவினர்கள், ஆர்ஜேக்கள் என நிறைய பேர் போட்டிக்கு வந்துவிட்டார்கள். முன்பெல்லாம் நதியாவுக்கு துர்கா, குஷ்புக்கு அனுராதா, தேவயானிக்கு ஜெயகீதா என ஒரு நடிகைக்கு எல்லாப் படத்திலும் ஒரே ஒருவர்தான் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

அந்த கொள்கையெல்லாம் தற்போது கிடையாது. ஒரே கதாநாயகிக்கு பல படங்களில் வெவ்வேறு குரல்கள் கொடுக்கப்படுகின்றன. நான் ஒரு சில கதாநாயகிகளுக்கு சில படங்களில் குரல் கொடுத்திருக்கிறேன். வேறு சில படங்களில் வேறு ஒருவர் கொடுத்திருப்பார். சில இயக்குநர்கள் என் குரல் தான் வேண்டும் எனும் போது தவிர்க்க முடியாது. நான் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போது ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு குரல் கொடுத்தேன்.

அந்தப் படத்தில் லைலா ஒரு சீனில் தரையில் விழுந்து புரண்டு கத்துவார். அந்த சீனுக்கு டப்பிங் செய்யச் சொன்ன போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. அதற்கு நிறைய ஸ்ட்ரெயின் பண்ண வேண்டி இருக்கும். அடி வயிற்றில் இருந்து குரல் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் பாலா சார் தைரியம் கொடுத்தார். கண்ணில் நீர் ஊற்ற ஊற்ற கஷ்டப்பட்டு அந்தக் காட்சியை முடித்தேன்.

அது மாதிரி இரண்டாவது குழந்தை பிறந்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் எஸ்.ஜே. சூர்யா சார் ‘நியூ’ படத்தின் தொடர்ச்சிக்குக் கூப்பிட்டபோது என் சூழ்நிலையைச் சொல்லி தவிர்த்தேன். ஒரு வருடத்திற்கு டப்பிங் செய்யப்போவதில்லை என சொன்னேன். ஆனால் அவர் விடாப்பிடியாக. ‘உங்க குரல்தான் அவங்களுக்கு சூட் ஆகும். வாங்க நான் உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன்’ என வற்புறுத்தினார்.

அதன்படி ஏவிஎம்மில் டப்பிங் அறைக்கு பக்கத்திலே ஓர் அறையில் எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்திருந்தார். அம்மா குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நான் வெளியே வந்து குழந்தையை பார்த்துக் கொள்ள முடிந்தது. டப்பிங் பேச வெறும் குரல் வளம் மட்டும் போதாது. கவனித்தல், ஞாபக சக்தி இவையெல்லாம் இருக்கணும். நாம டப்பிங் பண்ற கதாபாத்திரமாகவே மாறி குரலில் நடிக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம்.

குரல் அந்தந்த கதாநாயகிகளுக்கு பொருந்துமாறு இருப்பதும் அவசியம். வசனங்களுக்கு நடுவில் சிரிக்க வேண்டி இருக்கும். எனக்குப் பொறுமை ரொம்ப அதிகம். முதல் முறையே சரியாக பண்ணிடுவேன். ஒருவேளை கொஞ்சம் மாற்றம் தேவை என்றாலும் பண்ணிக்கொடுப்பேன். சில வித்தியாசமான குரல்களுக்கு கொஞ்சம் பயிற்சி எடுப்பேன். ‘அழகி’ படத்தில் நந்திதா தாஸுக்காக என் சொந்த ஊரான பண்ருட்டியின் வட்டார பாஷையில் பேசி நடித்தது மறக்க முடியாதது.

‘ஜெயம்’ படத்தில் தலை கவிழ்த்து கை நீட்டி சதா பேசும் ‘போய்யா போ’ எனும் வசனம், ‘பாஸ் என்கிற பாஸ்கரனில்’ வரும் ‘பர்டன்’ என்ற வசனம் ‘லூசாப்பா நீ’ பிதாமகன் படத்தில் லைலாவுக்கான வசனம், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ தெலுங்கு வெர்ஷனில் வரும் ‘அந்தேனா…’ எனத் தொடங்கும் வசனம் என எனக்குப் பிடித்த வசனங்களின் பட்டியல் நீளமானது. பாடல்களுக்கு நடுவிலும் வசனங்கள் பேசி இருக்கிறேன்.

ஏர்செல் முன்பு ஆர்பிஜி என்கிற பெயரில் இயங்கிய சமயத்தில் ‘சப்ஸ்கிரைபர் பிஸி அட் த மூமென்ட்’ எனும் முதல் வாய்ஸ் என்னுடையதுதான். ஜெனிலியா, பூமிகா என நிறைய கதாநாயகிகள் எனக்கு நெருக்கமான தோழிகளா இருக்காங்க. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவுக்கு பேசியதற்கு தற்போது தமிழக அரசின் விருது கிடைத்திருக்கிறது. தெலுங்கிலும் நந்தி அவார்டு வாங்கி இருக்கேன்.

இப்ப எனது அடுத்த தலைமுறையுடன் டப்பிங் செய்யும் போது நிறைய பேர் ‘அந்தப் படத்தில் சிம்ரனுக்கு பேசியவங்களா நீங்க?’ என ஆச்சரியமாக பேசும் போது பெருமையாக இருக்கும்” என சந்தோஷமாகச் சொல்லும் சவீதாவுக்கு அவரது வீட்டிலே போட்டிக்கு ஒருத்தர் தயாராகி கொண்டிருக்கிறார். ஆம் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் அமலா பாலுக்கு சவீதா குரல் கொடுக்க இவர் மகள் ஷ்ரிங்கா குட்டிப் பெண் சாராவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.    

படங்கள்: ஆர்.கோபால்