நீராலானது இவ்வுலகு



- மு.வெற்றிச்செல்வன்

அணைகளின் அரசியல்
இந்தியாவில், வளர்ச்சிக்கும் வாழ்வுரிமைக்கான போர் என்பது தொடர்கதையாகி வருகிறது. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்காத, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத, நீடித்த நிலைத்த வளர்ச்சி என்பது இன்றுவரை மாயக் கனவாகவே உள்ளது. அடிப்படை உரிமைகளோடு வாழ்வதற்கே போராட வேண்டும் என்னும் அவல நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இப்படியான போராட்டத்தை முன்னெடுத்த மேதா பட்கர் சில தினங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார். நம்மில் எத்தனை பேருக்கு மேதா பட்கர் என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் போராளி என்று தெரியும். அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்களுக்காக போராடியவர். அதுவும் கூட காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்து போராடினார். அவருடைய கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை.

குஜராத்திலுள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து வெளியாகும் நீர் நிறுத்தப்படக் கூடாது என்பதே. இப்படி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்படுமானால் அணையின் நீர் அளவு அதிகரித்து அருகில் உள்ள பல நூறு கிராமங்களை மூழ்கடித்துவிடும் என்பதே மேதா பட்கரின் பயம். அது உண்மையும் கூட. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தை சார்ந்த பர்வானி, தர், அலிராஜ்புர், கார்கோனே போன்ற மாவட்டங்களில் உள்ள பழங்குடி கிராமங்கள் இப்படி மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

இப்படி கிராமங்கள் மூழ்கும்போது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள் என்பதைப் பற்றி அரசுகள் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. எனவே பழங்குடி மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை நிறுத்தி வைக்கக்கூடாது என்னும் கோரிக்கையோடு உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார்.

அவருடன் 11 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த ‘தேச விரோத’ செயலுக்காகத்தான் பல நூறு காவல்துறையினரை கொண்ட அதிரடிப்படை மேதா பட்கர் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்த பிற போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளது. காந்தியின் தேசத்தில் மேலும் ஒரு அமைதிப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

“அணைகளை நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று கூறினார் நேரு (பின்பு இந்த கருத்தை அவர் மாற்றிக் கொண்டார்). சுதந்திர இந்தியாவிற்கு பிரமாண்ட திட்டங்கள் தேவை என்னும் கருத்தை கொண்டிருந்தார் நேரு. அன்றைய மேற்கத்திய நாடுகளையும் சோவியத் ரஷ்யாவையும் பின்பற்றி இத்தகைய கருத்துகளை கொண்டிருந்தார். அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இயற்கையை வென்று விட முடியும் என்னும் திமிரில் மனித இனம் இருந்த காலகட்டம். 

புதிய சமூகத்தை கட்டமைக்க இதுபோன்ற திட்டங்கள் அவசியம் என்று நம்பினார். இப்படி இந்தியாவில் பல அணைகள் கட்டப்பட்டன. இவற்றுக்கான இயற்கையின் எதிர்வினைகள் இருக்கத்தான் செய்தன. ஒன்று இவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்பு. இரண்டு பல கோடி மக்களுக்கு ஏற்பட்ட வாழ்வுரிமை இழப்பு. பிரமாண்ட அணைகளை கட்டுமானம் செய்வதை மேற்கத்திய நாடுகள் கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருந்த போதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் அணைகள் கட்டுமானம் செய்வதற்கான திட்டம் கொண்டு வரப்படுகின்றன. இவற்றுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. இங்குதான் பிரச்சனை உள்ளது. சிறியளவிலான நீர்த் தேக்கங்களை கட்டுமானம் செய்ய திட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை. காரணம் நாம் அறிந்ததே. பெரிய திட்டங்களில் உள்ள ‘லாபங்கள்’ சிறிய திட்டங்களில் இருப்பதில்லை.

தேசத்திற்காக சில தியாகங்களை செய்ய வேண்டும் என்கிற வாதம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. ஆனால் யாருடைய தேச நலன் என்பதுதான் நமக்கு புரிவதில்லை. ஓர் அணை உண்மையில் பல கோடி பழங்குடி மக்களை அகதிகளாக மாற்றி யாருக்கு பயன்படுகிறது என்று தெரியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கந்தக் மலை தொடரிலிருந்து கிளம்பும் நர்மதா ஆறு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் வழியாக சுமார் 1300 கி.மீ பயணம் செய்து அரபிக் கடலில் கலக்கிறது. 1946ம் ஆண்டிலேயே நர்மதா நதியில் அணை கட்டுவதற்கான திட்டங்கள் துவங்கின.

பின்பு 1961ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோரா என்னும் இடத்தில் ஓர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினர். பின்பு 1969ம் ஆண்டு மத்திய அரசு நர்மதா நதி நீர் ஆணையத்தை உருவாக்கியது. அணையின் நீர் கொள்ளளவு மற்றும் கட்டுமானம் போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்பாக இது செயல்படுகிறது. அணையின் கட்டுமானம் காரணமாக உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியோ, மக்களுக்கு உண்டான பாதிப்புகளை பற்றியோ இந்த ஆணையம் ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை.

ஒரு நதி என்பது தன்னளவிலேயே தனிப்பெரும் உலகம். அதன் போக்கில் உயிர் பன்மையத்தை காத்து செல்லுகிறது. தாதுகளை அள்ளிச் சென்று கடலில் சேர்க்கிறது. பலநூறு ஆண்டுகள் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் நதியை நம் எண்ணம் போல் மாற்றுவது என்பது இயற்கை மீது நாம் தொடுக்கும் மிகப் பெரிய வன்முறை. நர்மதா நதி மீது மொத்தம் 3200 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள் மற்றும் 3000த்திற்கும் மேற்பட்ட சிறிய அணைகள் உள்ளன.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி 1987ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக உலக வங்கி 1985ம்  ஆண்டே சுமார் 450 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க சம்மதம் தெரிவித்து விட்டது. இத்திட்டத்தின் மூலம் குஜராத்தின் வறண்ட பகுதிகளான கட்ச் மற்றும் சௌராஷ்டிராவுக்கு குடிநீர் கிடைக்கும் என்று கூறப்பட்டது. பல மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பலநூறு ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று கூறப்பட்டது. பின்பு பல வகைகளில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

இன்று வரை பல புதிய திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த நதி சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகளும், பழங்குடி மக்களின் வாழ்வில் பிரச்சனைகளும் இன்னும் தொடரவே செய்கின்றன. அவர்களுக்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் நிவாரணம் கூட இன்னும் முறைப்படியாக கொடுக்கப்படவில்லை. இவற்றுக்காக இன்னும் இந்த மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

நதியின் வழித்தடத்தை மாற்றியதால் மரணித்துப் போன ஏரேல் நதியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையை வெல்ல முடியும் என்னும் அகந்தையோடு மனித சமூகம் நிகழ்த்திய இச்செயல் நமக்கு மிகப் பெரிய பாடம். உண்மையில் நதிகள் மீது கட்டுமானம் செய்யப்படும் அணைகள் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பதற்கான ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை சில ஆண்டுகளுக்குப் பின்பு நதிகள் மரணித்த பின்பு நாம் அணைகள் குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ளுவோம் என்று நம்புவோம்.

(நீரோடு செல்வோம்!)