தமிழகத்தின் முதல் பெண் பாராஷூட்டர்



- பி.கமலா தவநிதி

ஒவ்வொரு பெண்ணும் அவரவர் வாழ்க்கையில் ஒரு ஆல்ரவுண்டர்தான். சிலருக்கு இயற்கையாகவே படிப்பு சம்பந்தமான விஷயங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். படிப்பை விட விளையாட்டுகளில் அதீத ஆர்வம் காட்டும் சில பெண்களும் உண்டு. படிப்பு மற்றும் விளையாட்டு என இரண்டிலும் காலூன்றி நிற்கும் பெண்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள்.

சராசரியான பெண்களுக்கே இந்த நிலைமை எனும்போது, ஒரு பெண் மாற்றுத் திறனாளியாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். படிப்பும், விளையாட்டும், வேலையும் எட்டாக்கனிதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூட சுயமாக முடிவெடுக்க முடியாமல், எல்லாவற்றுக்கும் யாரோ ஒருவரை சார்ந்தே அவர்கள் வாழ்க்கை தொடங்கி முடிந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

பொதுவாகவே பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், வெளி உலகின் மேல் இருக்கும் பயத்தினாலும், பெண் குழந்தையின் மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடாகவும் அவர்களை வெளியே அனுப்புவதற்கே தயங்குகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து தங்கள் பெண் பிள்ளையின் சாதனையில் பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் சாந்தி மலர் - ராஜேந்திரன் தம்பதியினர்.

இவர்களின் ஒரே மகளான எழிலரசி சென்னை ஆவடியில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பங்கேற்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 400 புள்ளிக்கு, 339 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் மாற்றுத்திறனாளி பாராஷூட்டர். காஞ்சிபுரம் சொந்த ஊர்.

பிறக்கும்போது எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறந்திருந்தாலும், இவருடைய இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போகும்போது இவருக்கு வயது இரண்டு. இவர்களது குடும்பம் அரசு ஊழியர்கள் கொண்ட குடும்பம். இவருடைய தாத்தாவில் தொடங்கி, அப்பா, பெரியப்பா, 2 அத்தை என அனைவரும் அரசாங்க ஊழியர்கள். தாத்தாவையே பெரிய இன்ஸ்பிரேஷனாக கொண்டவர் எழிலரசி.

சொத்து சேர்க்காவிட்டாலும் தன் குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக கல்வியை புகட்டிய எழிலரசியின் தாத்தா அரசுப் பள்ளி ஆசிரியர். இவர்கள் குடியிருந்த பகுதியில் வசித்த அக்கம்பக்கத்தினர் கல்வி சம்பந்தமானஅனைத்து விஷயங்களுக்கும் எழிலரசியின் தாத்தாவிடம்ஆலோசனை பெற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில முக்கிய கடிதங்களை தாத்தா சொல்லச்சொல்ல எழிலரசி எழுதும் பழக்கமும் இருந்திருக்கிறது. இது குறித்துதான் கடந்து வந்த பாதையை பற்றி மனம் திறக்கிறார் எழிலரசி... “என்னோட நிலைமையை பாத்துட்டு ஸ்கூல்ல சேர்த்துக்கவே மாட்டேன்னு சொன்னாங்க.

அத கேட்டதும் எங்க அம்மா ரொம்ப அழுதுட்டாங்க. அப்புறம் எப்படியோ பல சிரமங்களுக்குப் பிறகு சேர்த்துக்கிட்டாங்க. நான் படிச்ச ஸ்கூல்ல எல்லா டீச்சர்ஸும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. வீட்டுல இருக்கறவங்க பார்த்துக்கற மாதிரி. ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் என்னோட ஃபிரெண்ட்ஸ்தான் எனக்கு பயங்கர சப்போர்ட். நான் எட்டாவது முடிக்கிற வரைக்கும் எங்க வீட்ல இருக்கற யாராவது ஒருத்தர் ஸ்கூலுக்கு என்னைத் தூக்கிட்டுப் போவாங்க.
 
நாங்க கூட்டுக் குடும்பம்தான். என் அண்ணனோ தம்பியோ என்கூட ஒருநாளும் சண்டை போட்டதில்லை. என் குறையைச் சொல்லி இத்தனை வருஷத்துல யாரும் கிண்டல் கேலி செய்ததில்லை. இந்த குறைபாட்டை மனசுல நெனச்சு ஒரு நாளும் அழுதது இல்ல. எட்டாவது வரை காஞ்சிபுரத்தில் படிச்சேன். மேல படிப்ப தொடர்றதுக்காக செங்கல்பட்டுல இருக்க செயின்ட் மேரிஸ் ஸ்கூல்ல சேர்ந்தேன். எனக்காக செங்கல்பட்டுக்கே வீடு மாத்திட்டோம். அங்கேயும் எல்லோரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.

அப்படியே ப்ளஸ் டூ முடிச்சதும், காலேஜ்க்கு எங்க போறது, எப்படி போறதுன்னு யோசனையா இருந்துச்சு. ஏன்னா, என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ட்ரெயின்ல போய்ட்டு வர்றதா இருந்துச்சு. ஆனா என்னால அப்படிப் போக முடியாதுன்னு செங்கல்பட்டில் இருக்கும் அரசுக் கல்லூரியிலேயே சேர்ந்துட்டேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே கணக்கில் ஆர்வம் அதிகம். அதில் இளங்கலை முடிச்சேன்.

என்னோட தாத்தாவும் கணக்கு வாத்தியார்தான். அவர் தான் என்னோட முன்னுதாரணமா இருந்தாரு. என்னோட லட்சியமும் டீச்சர் ஆகுறதாத்தான் இருந்துச்சு. அடுத்ததாக முதுகலைப் படிப்பில் இருக்கும் ஆர்வத்தை பார்த்துட்டு என்னோட டீச்சர்ஸ் எல்லாரும் வழி காட்டினாங்க. அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் பண்ணிட்டேன். எம்ஐடிலதான் முதுகலை முடிச்சு, பின் எம்.ஃபில் கூட அங்கேயே முடிச்சேன். 

அங்கேயே வேலையும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எனக்காக எங்க வீட்டில் எல்லோரும் சிரமம் பார்க்காம சென்னைக்கே வீடு மாத்தி வந்தாங்க. அப்புறம் குருநானக் கல்லூரியில் எனக்கு வேலை கிடைச்சுது. எட்டு மாதங்கள் வேலை பார்த்தேன். நாங்க இருந்தது குரோம்பேட்டையில். ஆனா எனக்கு வேலை நங்கநல்லூர்ல. தினமும் கல்லூரிக்கு போயிட்டு வர்றதுக்காக ஸ்கூட்டி வாங்கினேன். யாரையும் தொல்லை செய்யாமல் நானே போயிட்டு வந்துருவேன். ஆனா என் பெற்றோர்களுக்கு என் மேல இருக்க அக்கறை காரணமா மறுபடியும் நங்கநல்லூர்க்கே வீடு மாத்தி வந்தாங்க.

இதைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்துல துணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வேலை கிடைச்சது. குருநானக் கல்லூரியோட முதல்வர் அவங்க வண்டிய கொடுத்து போய் அப்பாய்ன்மென்ட் ஆர்டர் வாங்கிட்டு வாம்மானு அனுப்பி வச்சாங்க. அதை என்னால மறக்கவே முடியாது. என்னோட சப்ஜெக்ட்ல யாரும் அரியர் வைக்கவே மாட்டாங்க. எல்லாரையும் என் பிள்ளைகளாக நெனச்சு பாடம் சொல்லித் தருவேன்.

அந்த கல்லூரில இருந்து வெளிய வந்த அப்புறமும் என் பிள்ளைங்களுக்கு வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். உலகமே தெரியாமதான் வளந்தேன். ஸ்போர்ட்ஸ்னா என்னன்னே தெரியாது. பேப்பர் படிக்கும்போது கூட விளையாட்டுப் பக்கம் வந்தா திருப்பிடுவேன். ஆர்வமா படிச்சதே இல்ல. இப்படி போயிட்டு இருக்கும்போது யாரோ ஒருத்தர் எனக்கு போன் செஞ்சு ஷூட்டிங் பத்தி சொன்னாங்க.

பாராஷூட்டர்ஸ்ல பெண்கள் யாருமே இல்ல, நீங்க முயற்சி செஞ்சுபாருங்களேன்னு சொன்னாங்க. திருமணம் ஆகாத பெண்ணாக இருக்கும் பட்சத்துல பொறுப்புகள் கொஞ்சம் குறைவு, கண்டிப்பா சாதிக்கலாம்னு சொன்னாரு. அவர் பேரு அபுபக்கர். அவரும் ஒரு ஷூட்டர். நேரு ஸ்டேடியம் வந்து பார்க்கச் சொல்லி ஒரு மாத காலமா பேசிக்கிட்டே இருந்தாரு. அவரு பேசுனதுல ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி இதை செஞ்சே ஆகணும்னு இறங்கினேன். என்னோட கோச் உதய குமார்தான் என்னை பயங்கரமா தயார் செஞ்சாரு.

அவருகிட்ட ஒரு நெகட்டிவிட்டி கூட இருக்காது. அதுதான் எனக்கு பெரிய என்கரேஜ்மென்ட். நான் தினமும் காலைல 5 மணிக்கே எழுந்துருச்சுருவேன். என் வீட்ல இருந்து ஷூட்டிங் ரேஞ்சுக்கு போக அரைமணி நேரம் ஆகும். தினமும் ஸ்ட்ரெச்சிங், வார்ம் அப் செஞ்சுட்டு தான் பிராக்டிஸ் செய்ய ஆரம்பிப்பேன். தினமும் காலைல மூணு மணிநேரம், சாயங்காலம் மூணு மணி நேரம் பயிற்சி செய்வேன். எண்ணெய் பதார்த்தங்கள், அசைவ உணவுகள் சாப்பிடுறதை குறைச்சுட்டேன்.

மாதுளை ஜூஸ் ரத்த ஓட்டத்தை சீரா வச்சிருக்கும் என்பதால அதை நிறைய குடிப்பேன். இவளோதாங்க என்னோட பிராக்டிஸ். அப்படி ஆறுமாசம் எடுத்த பயிற்சி தான் இப்ப மாநில அளவில தங்கப்பதக்கம் வாங்க வச்சுருக்கு. மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செஞ்சா இன்னும் கூடுதல் ஊக்கமா இருக்கும்'' என்று மிகுந்த உற்சாகத்துடன் தன் அனுபவங்களை பகிர்ந்தார் எழிலரசி.