காட்டு வழி போற பொண்ணே...



- கி.ச.திலீபன்

திவ்யா பாரதியின் கானுயிர் புகைப்படங்களை பார்க்கும்போதே அவர் காடு மற்றும் காட்டுயிர்களின் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டை புரிந்து கொள்ள முடியும். கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர் கோவையில் முதுநிலை ஆங்கிலம் பயின்று வருகிறார். இளங்கலை ஆங்கிலப் படிப்பில் இணைந்த போதே கானுயிர் புகைப்படத் துறையிலும் கால் பதித்திருக்கிறார்.

புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே இல்லாமல் காட்டு யிர்கள் மற்றும் பறவைகளின் வாழ்வு மற்றும் சூழலில் அவை வகிக்கும் பங்கு குறித்தும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த புரிதலோடும் இருக்கிறார். தனது புகைப்படங்கள் வெறும் காட்சிப் பொருள் ஆகி விடாமல் அவை காட்டுயிர்கள் மற்றும் பறவைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார். 

‘‘உயிரியல் படிக்கணும்கிறதுதான் என்னோட ஆர்வம். ஆனால் அப்போதைய சூழல்ல ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியதா போயிடுச்சு. மசினக்குடியில் சாலை விபத்துல ஒரு குரங்குக் குட்டி இறந்துடுச்சு. தாய்க்குரங்கு அந்த சடலத்தோடயே மூன்று நாள் சுத்திக்கிட்டிருந்தது. இந்தக் காட்சியப் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்துடுச்சு.

சுற்றுலாப் பயணிகள் குரங்குக்கு உணவு கொடுக்கிறதாலதான் அது சாலைக்கு வருது. இதனாலதான் விபத்துகளை சந்திக்க நேரிடுது. சின்னச் சின்ன விசயங்களோட எதிர்வினை ரொம்பப் பெருசா மாறிடுது. இது மாதிரி சூழல் மற்றும் காடு குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கு. என் புகைப்படங்கள் மூலமா நான் அதை செய்வேன்’’ என்கிறார்.