குழந்தைகளுக்கு நீதி புகட்ட வேண்டிய அவசியம் இல்லை



-வேலு சரவணன்

குழந்தைகள் உலகம் என்பது முடிவில்லாப் பெருங்கனவு. பரந்து விரியும் கற்பனைகளை எந்த விசாரணையுமின்றி அணுகிக் குதூகலமடையும் மனம் குழந்தை மனம். அவர்களுடன் ஒன்றிப்போவதற்கும், அவர்களை தன் வயப்படுத்துவதற்கும் மனதளவில் தன்னை குழந்தையாக உணர்பவர்களால் மட்டுமே முடியும். 46 வயதிலும் தன்னை அப்படியாக உணர்கிற கலைஞர் வேலு சரவணன்.

இவர் கோமாளி வேடமிட்டு குழந்தைகள் முன் தோன்றினாலே ஆரவாரக் குரல் எழும். பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாக்கும் நாடகக் கலை இவருக்கு கை வரப்பெற்றிருக்கிறது. குழந்தை இலக்கியச் செயல்பாட்டுக்கான மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான ‘பால புரஸ்கார்’ விருது, தமிழ் மொழிப்பிரிவில் வேலு சரவணனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் அவரிடம் மேற்கொண்ட நேர்காணல்...

வேலு சரவணன் - ‘வேலு மாமா’ ஆனதன் தொடக்கம் பற்றிக் கூறுங்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் கம்பர்கோவில்தான் என் சொந்த ஊர். ஆடு, மாடுகளாலும், புல்வெளின்னு என் பால்யம் நிறைஞ்சிருந்தது. என் தாத்தா மாட்டுத் தரகர்ங்கிறதால பாட்டியுடன் மாட்டுச்சந்தைக்குப் போவார். நானும் அவங்க கூடவே போவேன். வளமான கிராம சூழலில் பிறந்த எனக்கு அதைத் தாண்டின உலகம் வேற இல்லை. அப்படியா மகிழ்ச்சிகரமா உலவிக்கிட்டிருந்த என்னை என் கிராமத்திலிருந்து பிரிச்சு 8ம் வகுப்பில் அரசு விடுதியில் சேர்த்துட்டாங்க. அதுக்கப்புறம் விடுதி வாழ்க்கைதான் எனக்குன்னு ஆகிடுச்சு. என்னுடைய 13 வது வயசுல என் கிராமத்தைப் பிரிஞ்சேன். அதே வயசோடதான் நான் இப்பவும் இருக்கேன்.

பள்ளிப்படிப்பு முடிச்சதும் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிச்சேன். என் அப்பாவின் இழப்பு, ஊரை விட்டுப் பிரிஞ்சதுன்னு மன நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் படிச்சேன். அந்த நேரத்தில் என்னை அதிலிருந்து வெளிக் கொண்டு வந்து வேறு திசையை நோக்கித் திருப்பியது நாடகக் கலைதான். கல்லூரி விழாக்களில் நடக்கும் நாடகப் போட்டிகளில் நடிச்சு பரிசு வாங்கியிருக்கேன். எங்களோட விடுதி மேலாளர் தேவராஜ் அண்ணன்.

அவர் காது கேட்கும் திறன் இல்லாத மாற்றுத் திறனாளி. நாடகங்கள் மீது அவருக்குத் தீவிரமான காதல் இருந்தது. வசனங்களை கேட்க முடியா விட்டாலும் அந்தத் தோரணைகளையும், உடல் அசைவுகளையும் கூர்ந்து கவனிக்கும் நுட்பம் கொண்டவர். அவர்தான் நாடகத்துறை மீதான ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்.

இளங்கலை இயற்பியல் முடிச்சப்புறம் நாடகத்தின் மேல் இருந்த ஈடுபாட்டால புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுகலை நாடகத்தில் இணைந்தேன். அப்போது அங்கே நாடகத்துறை தொடங்கப்பட்ட புதுசுங்குறதால பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் இல்லை. அது மட்டுமில்லாமல் இருந்த எல்லோருமே என்னை விட வயது மூத்தவர்களாக இருந்தாங்க. எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இப்போதும்கூட. என்னால பெரியவங்ககிட்ட ஒன்றவே முடியாது. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘ஒளரங்கசீப்’ நாடகம் அங்க பாடமாக இருந்தது.

நான் ரொம்ப இளையவன்ங்கிறதால எனக்கு அந்த நாடகத்தில் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கலை. அரங்க அமைப்பு மாதிரியான வேலைகளைத்தான் செஞ்சேன். நாடக இயக்கம் என்கிற பாடத்துக்காக ஒவ்வொருவரும் நாடகத்தை தயாரிச்சு இயக்க வேண்டும். அதுக்காக ‘கடல் பூதம்’ நாடகத்தை தயாரிச்சேன். அந்த நாடகம்தான் என் வாழ்க்கையோட ஆதாரமாவே இருந்திருக்கு. நாடகத்தைப் பார்த்த எல்லோரும் இது குழந்தைகளுக்கான நாடகமாக இருக்குன்னு சொன்னாங்க. நாடகத்துறை பேராசிரியராக இருந்த இந்திரா பார்த்தசாரதி ஐயாதான் குழந்தைகளுக்கான கலைஞர்கள் தேவை என சொல்லி குழந்தைகளுக்கான நாடகங்களில் இயங்கும்படி என்னை ஊக்குவித்தார்.

இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், கே.ஏ. குணசேகரன், வ.ஆறுமுகம், அ.ராமசாமின்னு இத்துறை சார்ந்த ஆளுமைகளிடம் நாடகம் கற்றது என்னை செழுமைப்படுத்திக்குறதுக்கான நல்ல வாய்ப்பாக இருந்துச்சு. நாடகப் படிப்புக்கான வேலை வாய்ப்புன்னு எதுவும் இல்லாததால புதுச்சேரியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்கி நாட்களைக் கழிச்சிட்டிருந்தேன். புதுவை மாநில கல்வித்துறை இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ் மாற்றுப் பார்வை உடையவராய் இருந்தார்.

பள்ளிக் குழந்தைகளிடம் புதிய புதிய சிந்தனைகளை எடுத்துட்டுப் போகணும்ங்கிறதுல தீவிரமாக இருந்தார். என் தாத்தா சொன்ன நாட்டுப்புறக் கதையை வெச்சு உருவாக்கின ‘கடல் பூதம்’, ரஷ்ய குழந்தை இலக்கியவாதி நிக்கலாய் நோசவ் கதையை வெச்சு தயாரிச்ச ‘குதூகல வேட்டை’ இந்த இரண்டு நாடகங்களையும் ஜான் லூயிஸ் பார்த்தார். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போனதால அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சென்று நாடகம் நடத்தும்படி கூறினார்.

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புறதுக்காக தனி நபர் பெயரை பயன்படுத்த முடியாதுங்குறதால நாடகக் குழுவுடைய பெயர் வேண்டும்னு கேட்டார். நான் அப்ப புரூஸ்லீ ரசிகனாக இருந்ததால் ‘புரூஸ்லீ நாடகக் குழு’ என பெயர் வெச்சேன். புரூஸ்லீ என்பது எதிர்மறையான நாயகச் சித்திரம் என்பதால் அந்தப் பெயர் வேண்டாம்னு சொன்னவர் ‘ஆழி குழந்தைகள் நாடகக்குழு’ என பெயர் வெச்சார். குழந்தைகளுக்காக மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தது அப்போதுதான். எனது கூச்ச சுபாவம், என் நடவடிக்கை எல்லாம் குழந்தைகளுக்குத்தான் பிடிக்கும். குழந்தைகள் உலகத்தில் நான் வாழ ஆசைப்பட்டேன். அதோட விளைவாகத்தான் நான் ‘வேலு மாமா’ ஆனேன்.

குழந்தைகளை எப்படி உங்கள் வயப்படுத்துகிறீர்கள்?
நான் எந்தக் குழந்தையையும் புதுசா பார்க்குறதில்லை. அதே மாதிரி குழந்தைகளும் என்னை புதுசா பார்க்குறதில்லை. குழந்தையை குழந்தையாய் பார்க்கிறேன். நானும் ஒரு குழந்தையாகி அவர்களை அணுகுறேன். அவர்களுக்கு என் உடல் மொழி, நடவடிக்கைகள் ரொம்பவும் பிடிச்சிருக்கு. என்னுடைய நாடகங்கள் வாயிலாக நான் அவர்களுக்கான நீதி போதனைகளை வழங்குறதில்லை. குழந்தைகளுக்கு நீதி, நேர்மையெல்லாம் புகட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு படுது.

உண்மையை சொல்லப்போனால் நீதியை நாம் அவர்களிடமிருந்துதான் கத்துக்கணும். ஏனென்றால் அவர்களுக்கு உண்மைதான் பிடிக்கிறது. இதனால்தான் நான் அவர்களை குதூகலப்படுத்துற வேலையை மட்டும் செய்யுறேன். நான் ‘‘ஹாய்....’’னு கத்தினா அவங்க ‘‘ஹோய்....’’ னு கத்துறாங்க. என்னோட வேகம் அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கு. குழந்தைகளும் நானும் சந்திக்கிற போது மற்றவர்கள் எல்லோரும் தூரம் போய் விடுகிறார்கள். நாங்கள் மட்டுமே இருக்கிறோம். 25 ஆண்டுகள் என்னுடைய நாடக வாழ்க்கையில் நான் உலவுறது இப்படித்தான்.

எப்படிப்பட்ட போராட்டங்களையெல்லாம் கடந்து வர வேண்டியிருந்தது?
பள்ளிகளுக்குப் போய் நாடகம் நடத்தினப்ப தீர்மானிக்கப்பட்ட கட்டண முறையெல்லாம் இல்லை. குழந்தைகளாக என்ன கொடுக்குறாங்களோ அதுதான் வருவாய். என்னுடன் நடிப்பதற்கான நடிகர்களை தேடுவதே பெரும் சிரமமான பணியாக இருந்தது. என்னால் பெரிய சம்பளமெல்லாம் தர முடியாத நிலைங்குறதால குறைந்த சம்பளத்துக்கு நடிச்சுக் கொடுக்கிற ஆட்களைத் தேட வேண்டியிருந்தது. அப்படி ஒவ்வொருவரா இணைஞ்சு இன்னைக்கு ஆழி குழந்தைகள் நாடகக் குழுவில் 12 பேர் இருக்கிறோம். நானாக இருந்தது நாங்கள் ஆக மாறியிருக்கிறது. பொருளாதாரத் தேவைங்குற முதன்மையான போராட்டம் இப்ப ஓய்ஞ்சிடுச்சு. குழந்தைகள் நாடகத்தை நம்பியும் பிழைக்கலாம்னு ஒரு உதாரணமாக ‘ஆழி குழந்தைகள் நாடகக் குழு’ இருக்கு.

ஆழி குழந்தைகள் நாடகக் குழுவின் செயல்பாடுகள் பற்றி...
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, நுண்ணறிவு, படைப்பாற்றலுக்கான சூழலை உருவாக்குதல் ஆகியவையே எங்களது நாடகங்களுக்கான முதன்மையான நோக்கம். ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, குவைத், மலேசியா என பல்வேறு நாடுகளில் நாடகம் போட்டிருக்கோம். சாதாரண குழந்தைகள் மட்டுமல்லாமல் சிறப்புக் குழந்தைகள் மத்தியிலும் பணியாற்றியிருக்கிறோம்.

அவர்களுக்கு எங்களது நாடகங்கள் ரொம்பவும் பிடிச்சிருந்தது. சுனாமியின்போது நாகை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாடகங்கள் நடத்தினோம். பெரும் இழப்பைச் சந்திச்சிருந்த மக்களோட  துயர முகத்தைப் பார்க்கவே விருப்பம் இல்லாமதான் இருந்தேன். அதையும் மீறி சில காரணங்களுக்காக நாடகம் நடத்த ஒத்துக்கிட்டேன். அலையாத்திக் காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகத்தை பிச்சாவரத்தில் ஏற்கனவே போட்டிருந்தோம்.

அதே பகுதிக்கு சுனாமிக்கப்புறம் போன போது எல்லாம் தலை கீழா மாறியிருந்தது. சிதைந்து போன கட்டடங்கள், இழப்பைச் சந்தித்த மனிதர்கள்னு எல்லாம் துயரக் காட்சிகளாக இருந்தது. அது எனக்குள்ள ஏற்படுத்தின சோகத்தால என்னால நடிக்கவே முடியலை. அப்ப குழந்தைகள் என்கிட்ட வந்தாங்க. நாடகத்தின் மூலமாக குழந்தைகளை சிரிக்க வச்சோம். அவர்கள் சிரிப்பை பார்த்ததும் பெரியவர்களும் சிரிச்சாங்க. நடனம், இசை, ஆர்கெஸ்ட்ரா கச்சேரிகள்னு பலவையும் நடந்தாலும் நாடகத்துடைய நெருக்கத்துக்கு ஈடாகலை. அது எனக்குள்ள மன நெகிழ்ச்சியை உண்டாக்கியது. துன்பத்திலிருந்து அம்மக்களை மீட்டு வெளியே கொண்டு வர உதவுச்சு.

சுனாமி மறு சீரமைப்புப் பணிகளை பார்வையிட அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கடலூர் வந்தார். அவரை வரவேற்க ‘தேவலோக யானை’ நாடகம் போட்டோம். அவர் ஒதுக்கியிருந்த நேரமே ரொம்பவும் குறைவுதான். அப்படியிருந்தும் அந்த நாடகம் அவருக்குப் பிடிச்சுப் போனதால ‘‘ஒன்ஸ் மோர் வேலு மாமா’’ எனக் கேட்டார்.

அமெரிக்க அதிபர் இந்த சாமானியனுடைய நாடகத்தை மறுபடியும் பார்க்க ஆசைப்படுறேன்னு சொன்னது எனக்கு பெரும் பாராட்டு. சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்க வந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் எங்கள் கூடவே நடிக்கவும் செஞ்சாரு. புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் நாடகங்கள் போட்டிருக்கோம். 3500 காட்சிகளுக்கும் மேல் ‘கடல் பூதம்’, 1500 காட்சிகளுக்கும் மேல் ‘தேவலோக யானை’ நாடகங்கள் நிகழ்த்தியிருக்கிறோம்.

கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சிறுவர் இலக்கியங்களிலிருந்து எனக்கான கதையை தேர்ந்தெடுக்கிறேன். குழந்தைகளின் மனம் எதை விரும்பும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்றாற்படியான கதைத் தேர்வு என்னுடையது. நாடகங்களை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறோம். ‘அங்கா துங்கா’, ‘மாலுமி’, ‘தங்கராணி’, ‘தேவலோக யானை’ போன்ற நாடகங்கள் புத்தகமாக வந்திருக்கின்றன. ‘ஐராபாசி’ எனும் சிறுவர் நாவல் மற்றும் ‘தொடக்கக் கல்வியில் நாடகியம்’ என்கிற தலைப்பிலான ஆய்வு நூலையும் எழுதியிருக்கிறேன்.

பால புரஸ்கார் விருது குறித்து...
மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே ‘நேரு குழந்தை இலக்கிய விருது’,  ‘புதுவை அரசு விருது’, ‘திருப்பூர் தமிழ்ச் சங்க விருது’, ‘நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது’, ‘ஜெயந்தன் குழந்தை இலக்கிய விருது’, ‘வட அமெரிக்க தமிழ் சங்க விருது’ ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற விருதுகள் தொடர்ந்து பயணிப்பதற்கான வினையூக்கிகள் என்று சொல்லலாம்.

கி.ச.திலீபன்
படங்கள்: முபாரக்