நேர்மையான படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்



- ஸ்ரீதேவி மோகன்

இன்று பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் பெண் படைப்பாளிகளுக்கெல்லாம் முன்னோடி, முற்போக்குச் சிந்தனையாளரான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். தமிழில் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர். தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் தகவல்கள் திரட்டி கதைகள் எழுதிய முதல் பெண் கள ஆய்வு எழுத்தாளரும் இவர்தான். அவரின்
நினைவலைகள் சில…

1925ம் ஆண்டு திருச்சியில் உள்ள முசிறியில் பாரம்பரியமான நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். அந்தக் கால முறைப்படி மிக இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் செய்துவிக்கப்பட்டது. அதனால் பள்ளிப்படிப்பும் பாதியிலேயே தடைப்பட்டது. கணவர் கிருஷ்ணன் மின்பொறியாளர். இருவரும் சென்னை தாம்பரத்தில் வசித்தனர். இவரின் வாசிப்பு ஆர்வம் அறிந்து அவர் கணவர் கொடுத்த ஊக்கத்தால் நிறைய நூல்கள் வாசித்தார். 20 வயதில் இருந்தே எழுதவும் ஆரம்பித்தார்.

மற்ற  எழுத்தாளர்களை போல் வெறும் கற்பனை கதைகளை எழுதுவதில் இவருக்கு விருப்பம் இல்லை. அதனால் கள ஆய்வு கள் செய்து நாவல்களையும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். கணவரின் இட மாறுதலும் அவர் வெவ்வேறு களங்களை கண்டறிய உறுதுணையாக அமைந்தது. கதைக்களம் நடக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களோடு நெருங்கி பழகி பல விசயங்களை நேரடியாக கண்டு அவர்களது உண்மை நிலைமைகளை அனுபவ பூர்வமாக உணர்ந்து சமூகத்தின் பல பிரச்னைகளை கதையாக்கினார் ராஜம் கிருஷ்ணன்.

உப்பள தொழிலாளிகள், பட்டாசு தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற பல தளங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை, சமூக அவலங்களை தன் எழுத்துக்களில் பேசியவர், பெண் சிசுக்கொலை முதற்கொண்டு பெண்கள் படும் பாடுகள் அனைத்தையும் தன் எழுத்தில் வெளிச்சம் போட்டு காட்டினார். அதற்கெல்லாம் தீர்வு வர வேண்டும் என்று கனவு கண்டார்.
 
40க்கும் மேற்பட்ட நாவல்கள், நிறைய சிறுகதைகள், 3 வரலாற்று நூல்கள் மற்றும் பல கட்டுரை நூல்களையும் எழுதினார். இவரது ‘காலந்தோறும் பெண்’ பெண்ணியம் பேசிய மிகவும் முக்கியமான கட்டுரை நூலாகும். இவரது ‘வேருக்கு நீர்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது ‘கரிப்பு மணிகள்’ நாவல் மிகப் பிரபலமான ஒன்று.

அரசியல் அறிவு நிரம்ப உடையவர் ராஜம். கூர்மையான சமூகப் பார்வையும் இவரிடம் உண்டு. பொருளாதாரத்தைப் பற்றிய நுண்ணறிவும் இருந்தது. பன்மொழித்திறன் கொண்டவர். இவரது நூல்கள் பல ஆராய்ச்சியாளர்களால் இன்றும் போற்றப்படுகிறது. பல்வேறு விருதுகளின் உடைமையாளர். ராஜம் கிருஷ்ணனுக்குக் குழந்தைகள் கிடையாது.

கணவரின் இறப்பிற்குப் பிறகு தனிமையில் இருந்தவரின் கடைசி காலக்கட்டம் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கழிந்தது. சுய நினைவோடு இருந்தவரை எழுதிக்கொண்டே இருந்தார். எழுத்தாளர் உயிருடன் இருக்கும்போதே அரசுடைமையாக்கப்பட்ட நூல்கள் இவருடையது மட்டுமே. 2014ம் ஆண்டு அதே மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

தி.சிகாமணி (பத்திரிகையாளர்)
“நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ராஜம்கிருஷ்ணனின் ‘அலைவாய்க்கரையில்’ நாவல் படிக்க நேர்ந்தது. எனக்கு அவரது எழுத்துப் பிடித்திருந்தது. அதன் பிறகு தூத்துக்குடியில் உள்ள எங்கள் வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அப்போதுதான் முதன் முதலில் அவர்களை சந்தித்துப் பேசினேன். அவரிடம் ஒரு தர்ம ஆவேசம், நியாயமான கோபம் போன்றவை இருந்ததை கவனித்தேன். எழுத்தில் அவரின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்து ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவலுக்காக தூத்துக்குடி உப்பளங்களுக்கு கள ஆய்விற்காக அவர் வந்தபோது நானும் என் நண்பர்களும் அவருக்கு உதவியாக இருந்தோம். ‘கூட்டுக்குஞ்சுகள்’ என்ற சிவகாசி பட்டாசு தொழிலாளிகளைப் பற்றி அவர் எழுதிய நாவலுக்கான ஆய்விற்காக அவர் வந்தபோதும், ‘மண்ணகத்து பூந்துளிகள்’ என்ற பெண் சிசுக்கொலைப் பற்றி பேசிய நாவலுக்கான ஆய்விற்காக வந்தபோதும் அவருக்கு உதவியாக இருந்தோம்.

அவரிடம் ஒரு நேர்மை இருந்தது. கற்பனையாக அவர் கதைகளை உருவாக்கவில்லை. சிலர் சமுதாயப் பிரச்னைகளோடு சம்பந்தமில்லாத வெறும் கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டிருந்த போது ராஜம் கிருஷ்ணன் களங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து சமுதாயப் பிரச்னைகளை எழுதினார். ஒரு பெண்ணாக இருந்த காரணத்தால் பல சிக்கல்களை எதிர்கொண்ட போதும் அவர் எந்த ஒரு விஷயத்தையும் ஆய்வு செய்து எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எந்த மக்களைக் குறித்து கதை எழுதுகிறாரோ அந்த மக்களின் வட்டார மொழியை (பேச்சு மொழியை) நுணுக்கமாக கவனித்துத் தெரிந்து கொண்டு அதை தன் நாவலில் சரியாகப் பயன்படுத்துவார். ‘இது இலக்கியம் அல்ல, ஆவணம்’ என்றெல்லாம் அவரின் நாவல்களைப் பற்றி விமர்சனம் வந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.

அவருக்கு சமுதாயப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் கட்சி அரசியலில் அவருக்கு ஆர்வம் இல்லை. கட்சி அரசியலை அவர் நம்பவும் இல்லை. மக்களை நம்பினார். மக்களிடையே ஒரு புரட்சி உருவாகி இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு ஏற்படும் என்று நம்பினார். ஆண் எழுத்தாளர்களின் ஆதிக்கம் இவருக்குப் பிடிக்கவில்லை.

ஆண் எழுத்தாளர்களுக்கு கிடைத்த மிகையான அங்கீகாரத்தில் இவருக்கு அதிருப்தி இருந்தது. மற்ற எழுத்தாளர்கள் இடையே இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரி கைகளில் எழுதி இருந்தாலும் இவரது எழுத்துக்கள் பெரிய அளவில் மைய நீரோட்டப் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. மைய நீரோட்டப் பத்திரிகைகளில் இவரால் சுதந்திரமாக எழுத முடியவில்லை. இவரது குணநலன் அப்படி. நெளிவு சுளிவு, தாஜா செய்யும் பழக்கம் எல்லாம் இவரிடம் அறவே கிடையாது.

ஒரு சமயம் ஒரு பிரபல பத்திரிகையில் ராஜம்கிருஷ்ணனின் தொடர் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அதில் இவரது கருத்துக்கள் ஆசிரியருக்கு உடன்பாடில்லாதபடியால் அந்தத் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது கடும் கோபம் கொண்டவர், ‘எனக்கு மட்டும் சக்தி இருந்தால் அந்தப் பத்திரிகை அலுவலகத்தையே எரித்திருப்பேன்’ என்றார். அவரது எழுத்துக்களை தனி நூலாக தான் அதிகம் வெளியிட்டார். அதனால் பொதுமக்களுக்கு இவர் பற்றிய அறிமுகம் கொஞ்சம் குறைவு தான்.

ஆனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் இவர் அதிகப் பிரபலம். இவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவரின் இறப்பிற்கு பிறகு உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தார். வயதான பிறகு ஒரு நாள் வழுக்கி விழுந்ததில் காலில் ப்ராக்சர் ஆகிவிட்டது. அதனால் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். பிறகு அங்கிருந்து நீதிபதி சந்துரு, கே.பாரதி மற்றும் திலகவதி ஆகியோரின் உதவியுடன் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அங்கே கொஞ்ச காலம் இருந்தார்.

நான் அங்கு வாரம் ஒருமுறை போய் பார்ப்பேன். அதன் பிறகு வாரம் ஒரு முறை என்பது குறைந்து எப்போது எல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போது எல்லாம் சென்று பார்த்து வந்தேன். அவருக்கு அங்கு இருப்பதில் விருப்பமில்லாமல் இருந்தது. அந்த சமயம் அவருக்கு உடல்நலமும் கொஞ்சம் கெட்டுப்போக நண்பர்கள் சிலரின் உதவியுடன் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

அதன்பிறகு தனது கடைசி மூச்சு வரை ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே இருந்தார். அப்போதும் சென்று பார்த்து வந்தேன். கூர்மை யாக விஷயங்களை கிரகிக்கக்கூடியவர். நடக்க முடியாமல் கைத்தடி வைத்து நடந்தபோதும் வயதான போதும் தன்னால் முடிந்தவரை எழுதிக்கொண்டே இருந்தார். கடைசியாக எங்கள் பத்திரிகைக்கு நிறைய கட்டுரைகள் எழுதினார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரைப் பார்த்துக்கொண்டனர். நண்பர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டனர்.

காந்திய வழியில் எளிமையான வாழ்க்கை நடத்தியவர். அணிகலன்கள் என்று பெரிதாக எதுவும் அணிந்து கொள்ளமாட்டார். பருத்திப்புடவைகள் தான் அணிவார். அவர் கணவர் இன்ஜினியராக இருந்தவர். அதனால் அவர் கணவரின் மறைவிற்குப் பிறகு கிடைத்த அவரது பென்ஷன் பணத்தைக் கூட தனக்காக எதுவும் செலவு செய்யாமல் வீட்டில் தன் வீட்டில் வேலை செய்தவர்களுக்கு அந்தப் பணத்தில் உதவிகள் செய்வார்.

ராஜம் கிருஷ்ணன் தனது உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக எழுதி வைத்திருந்தார். அவரது உடல் அவர் விருப்பப்படி தானம் செய்யப்பட்டது. ஒரு நேர்மையான படைப்பாளியாக இருந்தும் அவருக்கு உரிய அங்கீகாரம் தமிழ் எழுத்துலகில் கிடைக்கவில்லை. அவரது புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்படவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரது புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன.

அந்தப் புத்தகங்களையும் அவரின் புத்தகங்கள் நாட்டுமையாக்கப்பட்டதால் வந்த பணத்தையும் அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து அவர் புகழ் பரப்ப அதனை பயன்படுத்த வேண்டும். ராஜம்கிருஷ்ணனின் படைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.’’

கே.பாரதி (பேராசிரியை)
‘‘ ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூலைப் படித்த போது அந்த எழுத்து என்னை மிகவும் கவர்ந்த காரணத்தினால் ராஜம் கிருஷ்ணனை முதன் முதலில் சந்தித்துப் பேசினேன். அவர் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார். நானும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். அதனால் பல சமயங்களில் அவரை சந்திக்க நேர்ந்தது.

ஒரு சமயம் அவரை தொலைக்காட்சிக்காக பேட்டி எடுக்கும்படி என்னை கேட்டுக் கொண்டார். நானும் பேட்டி எடுத்தேன். ஒரே தளத்தில் இயங்கிக்கொண்டு இருந்தோம். அதனால் இன்னும் நெருக்கமானோம். பழகிய பின்னர் பல சமயங்களில் கூட்டங்களுக்கும் கள ஆய்வுகளுக்கும் அவருடன் இணைந்து போய் இருக்கிறேன். எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். அவரேதான் சமைப்பார். வீட்டில் எல்லா வேலைகளையும் அவரே செய்வார். அவர் கணவரும் அவரும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

ஆர்.சூடாமணியை பார்க்க கூட்டிக்கொண்டுப் போவேன். அவரோடு நல்ல உறவு இருந்தது. ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களான பாப்பா உமாநாத்துடனும், மைதிலி சிவராமனுடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. ராஜம் கிருஷ்ணன் கிட்டதட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கிறார். அதில் பெரும்பாலான நாவல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டவைதான்.

நிறைய பேரை சந்தித்துப்பேச வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் ஒரு டேப் ரிக்கார்டரும் கையுமாக அலைவார். அவர் கள ஆய்வு செய்து எழுதிய நாவல் ஒவ்வொன்றும் ஒரு பிஎச்டிக்கு சமம். கள ஆய்வு செய்து வாழ்க்கை வரலாற்று நூல்களும் எழுதி இருக்கிறார். டாக்டர் ரங்காச்சாரியைப் பற்றி வாழ்க்கை வரலாறு எழுதும்போது ‘மருத்து வத் தொழில் பத்தி உனக்கென்ன தெரியும்’ என்று அவரை பலர் கடுமையாக பேசியபோதும் ரங்காச்சாரியின் பல உறவினர்கள், அவரின் பல நோயாளிகளை சந்தித்து அவர் குறித்து அந்த வரலாற்றை அவ்வளவு அருமையாக பதிவு செய்திருப்பார்.

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும் உண்மையான முறையில் பதிவு செய்திருப்பார். பெண்ணிலை கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு மாறுபட்ட பதிவு அது. கம்யூனிஸ்ட் தோழர் மணலூர் மணியம்மா வின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது அவரைப் பற்றிய தகவல் சேகரிக்க நானும் உடன் போய் இருந்தேன். அங்கே இருந்த கிராமத்து மக்களிடம் பேசிய போது அவ்வளவு சீக்கிரம் உண்மையான தகவல் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்த யாரும் சரியான தகவல் சொல்லவில்லை. நான் பொறுமை இழந்து போனேன்.

அங்கிருந்து கிளம்பிவிட நினைத்தேன். ஆனால் ராஜம் கிருஷ்ணன் பொறுமையாக இருந்தார். உண்மை தகவல் கிடைக்கும் வரை அவர் பொறுமை இழக்கவே இல்லை. வெறும் காற்றில் வரும் தகவல்களை அவர் எழுத விரும்பவில்லை. கடைசியாக எங்களுக்கு சரியான தகவல் கிடைத்தது. அது உண்மைதானா என பல குறுக்குக் கேள்விகள் கேட்டு உண்மைதான் என உறுதி செய்த பின் தான் அங்கிருந்து கிளம்பினார். பொறுமையாக இருந்ததால்தான் அவரால் தகவல்களை சேகரிக்க முடிந்தது. தகவல் சேகரிப்பதற்காக அத்தனை முயற்சி எடுப்பார்.

இன்றைக்கு ஒரு தகவல் சேகரிக்க வேண்டும் என்றால் நிறைய விதங்களில் உதவி கிடைக்கும். ஆனால் அந்தக் காலத்தில் எல்லாவற்றுக்கும் அலைய வேண்டும். புதுக்கோட்டை, திருநெல்வேலி போன்ற பல ஊர்களுக்கு அவருடன் சென்றிருக்கிறேன். வயதானவராக இருந்தபோதும் சலிக்காமல் நடப்பார். புத்துணர்வோடும் ஆற்றலோடும் இருப்பார். தஞ்சாவூரில் நாங்கள் நடக்காத இடம் கிடையாது.

அவர் கூட நடக்கும் போது நான்தான் முதலில் சோர்ந்து போவேன். தகவல் திரட்ட நிறைய அலைய வேண்டி இருக்கும். அதற்காக கவலைப்படமாட்டார். கடுமையான உழைப்பாளி. இப்படி நிறைய அலைந்ததால் வெளி உலகம் பற்றி அறிவு நிறைய இருந்தது. எந்த விஷயத்தைப் பேச சொன்னாலும் அவரால் பேச முடியும். அந்த அளவுக்கு அறிவுக் கூர்மை கொண்டவர். மிகப்பெரிய தமிழ் அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி, ஆ.சிவ சுப்பிரமணியன், தமிழண்ணல் ஆகியோரின் மதிப்பைப் பெற்றிருந்தார். ராஜம் கிருஷ்ணனின் எழுத்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஒரு ஜப்பானிய தம்பதி அவரது நூலை மொழி பெயர்த்ததுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்கள். ராஜம் கிருஷ்ணனே பல மொழி வல்லுநராக இருந்தார். தன் சுயமுயற்சியில் மொழிகளைக் கற்று வைத்திருந்தார். சாகித்ய அகாடமி, பாரதீய பாஷா பரிஷத், ஷாஸ்வதி சன்மான் போன்ற எத்தனையோ உயரிய விருதுகளும், அங்கீகாரமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

பெண் என்று எவரேனும் அவமானப்படுத்திப் பேசினால் கோபம் வரும். மிகக் கடுமையாக எதிர்வினை செய்வார். இவருடைய எழுத்து சாதாரணமாக பொதுமக்களிடையே அவ்வளவு பிரபலமில்லை. மிகத் தீவிரமான எழுத்து என்பதால் தீவிர வாசகர் மத்தியிலும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் மிகவும் போற்றப்பட்டது. போராட்டங்களில் நம்பிக்கை உடையவர் ராஜம்கிருஷ்ணன். மக்களின் பிரச்னைகளை நிறைய எழுதினார். நாவலின் முடிவில் எழுச்சியூட்டும்படி எழுதுவார்.

அவர் எழுதியவற்றில் வரலாற்று நூல்கள்தான் உண்மையிலேயே அருமையானவை என்பது என் எண்ணம். ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு டாக்டர் அவரை கவனித்துக் கொண்டார். அவர் வீட்டில் இருந்துதான் உணவும் வரும். அவரது கடைசி காலம் கொஞ்சம் வருத்தப்படும்படியாகத் தான் இருந்தது. அவருக்கு எதுவுமே செய்யாமல் இருந்தது எங்களுக்கு மிக  கஷ்டமாக இருந்தது.

அவர் கொஞ்சம் தன்னுணர்வோடு இருந்தபோதே ஏதோ ஒரு விதத்தில் ‘உங்களை நாங்கள் எல்லாரும் ஞாபகம் வச்சிருக்கோம்’னு அவங்களுக்கு உணர்த்தவேண்டுமென தோன்றியதால் கடைசியாக ராஜம்கிருஷ்ணன் குறித்து ஒரு கூட்டம் நடத்தினோம். பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டார்கள். பேசவே முடியாத நிலையிலும் அங்கே அவர் அழைத்துவரப்பட்டார். அங்கே ராஜம் கிருஷ்ணன் நடந்து கொண்ட விதம் அவர் எதையோ புரிந்து கொண்டார் என்று தோன்றியது. அவரைப் பற்றி நினைத்தாலே மனம் கனமாக ஆகிவிடுகிறது.’’

அ.மங்கை (நாடகவியலாளர்)
“80களின் கடைசியில் ராஜம் கிருஷ்ணனின் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்' நாவல் வெளிவந்தது. ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் ‘BORN TO DIE' என்ற கட்டுரை வெளிவந்தது. வசந்திதேவி இவ்விஷயமாக கள ஆய்வுகள் மேற்கொண்டார். அதனால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தோழர்கள் இணைந்து ‘யார் குற்றவாளி?’ என்ற வழக்காடு மன்றம் நடத்தினோம். அடுத்து பிரளயனின் ‘சென்னைக் கலைக்குழு’ சார்பாக நான் முதன்முதலில் எழுதிய ‘கர்ப்பத்தின் குரல்’ நாடகம் நடத்தினோம்.

அந்த நாடகத்தில் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவலின் கருத்துக்களை உள்வாங்கி செய்திருந்தோம்.மதுரைப் பகுதி பெண்கள் தினசரி தங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் தெளிவாகவும் தைரியமாகவும்தான் இருந்தனர். ஆனால் வைகை ஆறு தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய் விவசாயம் பொய்த்துப்போக ஆரம்பித்தபோது எல்லா கதவுகளும் அடைபட்ட நிலையில்தான் அந்தப்பெண்கள் இந்த பெண் சிசுக்கொலை முடிவை ஒரு கருணைக்கொலையை போல தம் கையில் எடுக்கின்றனர் என்ற பாணியில் செய்திருந்தோம்.

ராஜம் கிருஷ்ணனும் இதே பார் வையைதான் தன் நாவலில் வெளிப்படுத்தி இருந்தார். கம்யூனிஸ்ட் தோழர் மணலூர் மணியம்மாவைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் கள ஆய்வு செய்து எழுதி இருந்த ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு ‘சுவடுகள்’ என்ற ஒரு நாடகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாகை மாநாட்டில் நடத்தினோம்.

அந்தப் புத்தகத்தில் அந்தப் பகுதி மக்களின் ‘ஆடு முட்டிக் கேட்டதுண்டு, ஆமை முட்டி கேட்டதுண்டா? மாடு முட்டி கேட்டதுண்டு, மான் முட்டி கேட்டதுண்டா?’ என்ற ஒப்பாரி பாடலை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்திருப்பார். அதையும் அந்த நாடகத்தில் பயன்படுத்தி இருந்தோம். பெண்களின் பிரச்னைகளை பேசிய ‘காலக்கனவு’ என்ற நாடகத்திலும் அக்கால ஆண்கள் போல வேட்டி அணிந்துகொண்டு, கிராப் வெட்டிக்கொண்டு பொது உடமை பேசி விவசாயிகள் மத்தியில் களப்பணியாற்றிய மணலூர் மணியம்மாவைக் குறித்த பகுதி ஒன்று உண்டு.

படங்கள்: ஆர்.கோபால்
ஓவியம்: ஸ்யாம்