எதிர்பாராமல் கிடைத்த உதவி



வாசகர் பகுதி

(உண்மை கதை)

2016 நவம்பர் மாதம் 9ம் தேதி. இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரே பரபரப்பாக இருந்தது. சில்லறை இல்லாதவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டை மாற்ற படாதபாடுபட்டனர். வங்கிகளும், ஏ.டி.எம்களும் இயங்கவில்லை. இது பிரச்னையை மேலும் பெரியதாக்கியது. அந்த சமயத்தில் மும்பையில் ஒரு மருந்து கடைக்கு வெளியே நின்றார் அப்பெண்.

எளிமையான புடவையில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் போலத் தெரிந்தார்.  மருந்து கடைக்காரரிடம் பிரிஸ்கிரிப்ஷனை காட்டி மாத்திரை மருந்துகளை கேட்டார். கடைக்காரரும் உடனே அதில் எழுதியிருந்த அத்தனை மருந்து, மாத்திரை, ஊசியையும் எடுத்து வந்து கடையின் முன் இருக்கையில் வைத்தார். அப்போது அந்தப் பெண், ‘என்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் தான் இருக்கின்றன.

சில்லறை இல்லை. இரண்டு நாட்களில் எப்படியாவது பணத்தை தந்து விடுகிறேன். என் மகனுக்கு கடுமையான ஜுரம். ஏற்கனவே இரண்டு, மூன்று கடைகளில் கேட்டு விட்டேன். தர மறுக்கிறார்கள். நீங்கள் தந்து உதவ வேண்டும்.’ கடைக்காரர் பதில் பேசாமல், முன் இருக்கையில் வைத்தவற்றை மீண்டும் எடுத்து அவற்றின் இருப்பிடத்தில் கொண்டு வைக்க ஆரம்பித்தார்.

‘நான் நிச்சயம் பிச்சைக்காரி இல்லை. நடுத்தர குடும்பப் பெண்தான். 500 ரூபாய் நோட்டுகள்தான் உள்ளன. பெரிய மனசு பண்ணி நீங்கள் தர வேண்டும்.’ கடைக்காரர் மனம் அசையவில்லை. காலையிலிருந்து பலரை அவர், ‘சில்லறை இல்லை. 500 ரூபாயை வாங்க மாட்டேன்’ என்றெல்லாம் கூறி திருப்பி அனுப்பியிருந்தார். அதனால் அப்பெண்ணின் வார்த்தையை கேட்கவே அவருக்கு அலுப்பாய் இருந்தது.

கடைக்கு முன் ஒரு வயதான சர்தார்ஜியும் நின்றிருந்தார். அவரும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். வருத்தத்துடன் திரும்பிக் கொண்டிருந்த அந்த பெண்மணியை ‘டியி (tiye)’ என அழைத்தார்.  டியி என்றால் மகளே என்று பொருள். அந்தப் பெண்மணி திரும்பிப் பார்த்தார். அவருக்கு சைகை காட்டி, நிறுத்தி விட்டு, மருந்துக் கடைக்காரரிடம் சென்றார் சர்தார்ஜி.

அதே சமயம் பெண்ணைப் பார்த்து, ‘உங்களுக்கு இன்னமும் கூடுதலாக எவ்வளவு பணம் தேவைப்படும்?’ எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணியால் பதில் கூற இயலவில்லை. உடனே கடைக்காரரிடம் சர்தார்ஜி, ‘இந்தப் பெண்மணி தர வேண்டிய தொகை எவ்வளவு?’ என்றார்.

உடனே கடைக்காரர் கணக்கு போட்டு ‘625 ரூபாய்’ என்றார். சர்தார்ஜி, ‘அந்தப் பெண்ணிடம் மாத்திரை மருந்துகளை தாருங்கள். நான் பணம் தருகிறேன்’ எனக்கூறி பர்ஸை எடுத்து கிரெடிட் கார்டை வெளியே எடுத்து, மருந்து கடைக்காரரிடம் தந்தார். அவரும் கார்டை தேய்த்து விட்டு அந்த பெண்ணிடம், மீண்டும் எல்லா மாத்திரை, ஊசி மருந்துகளையும் எடுத்துக் கொடுத்தார்.

அந்தப் பெண் நன்றியில் சர்தார்ஜியை கையெடுத்துக் கும்பிட்டார். அத்துடன், ‘அடுத்த வாரம், இதே கடையில் இதே நேரத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன். இது நிச்சயம்’ என்று உறுதி கூறினார். சர்தார்ஜி தலையை ஆட்ட, அந்தப் பெண்மணி மாத்திரை, மருந்துடன் புறப்பட்டார். குருத்துவாரா செல்வதற்காகக் கிளம்பிய சர்தார்ஜி அங்கு நின்றிருந்தவர்களிடம் “குருத்துவாரா செல்லவே கிளம்பினேன். இப்போது அது தேவையில்லை என்று தோன்றுகிறது. ஆகவே வீட்டுக்குத் திரும்பப் போகிறேன்” என்றவாறே புறப்பட்டார்.

- ராஜி ராதா, பெங்களூர்.