நீராலானது இவ்வுலகு



-மு.வெற்றிச்செல்வன்

பெருங்கடல் மாநாடும் சூழல் பாதுகாப்பும்
காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். புவி வெப்பமயமாவதற்குக் காரணமாக இருக்கும் உலகின் முதல் குற்றவாளி நாடான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த மாதம், ஐக்கிய நாடுகளின் தலைமையில் நடைபெற்ற பெருங்கடல் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், காலநிலை மாற்றத்தின் ஆபத்துகளை குறைக்க கடல் மிகவும் அவசியமானது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 193 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடலின் கதை
உயிர் தோன்றிய இடம் கடல். சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன் புரோடோஜோவா என்னும் முதல் ஒரு உயிரினம் தோன்றிய இடம் கடல். அந்த காலகட்டத்தில் பாக்டீரிய உயிரினங்கள் மட்டுமே இருந்தன. அவை சுயபாலியல் தன்மையில் மறுஉற்பத்தி செய்தன. இதற்கு பின்பு சுமார் நூறு கோடிகள் சென்ற பின் நீலப் பசும் பாசிகள் தோன்றின.

இவை தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வளத்தை உட்கொள்ள கற்றுக்கொண்டன.  இதன் தொடர் விளைவாக தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை அருந்திவிட்டு ஆக்ஸிஜனை கழிவாக வெளியேற்றும் செயல்பாடு நடக்க துவங்கியது. இது தான் ஒளிச்சேர்க்கைக்கு முதல் படி. அதாவது தாவரங்கள் தங்களுக்கான உணவான ஆக்ஸிஜனை சமைக்க கற்றுக்கொண்ட காலம்.

இன்று வரை தாவரங்கள் இந்த வேலையை தொடர்கின்றன. பூமிக்குத் தேவையான 60 சதவீத ஆக்ஸிஜனை கடல் தருகிறது. சூரியனில் இருந்து பூமி நோக்கி வரும் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு உலகின் தட்பவெப்ப நிலையை சமச்சீராக வைத்திருப்பது கடல். கடல் நீர் நீராவியாக மாறியே நமக்கு மழையாகக் கிடைக்கிறது. கடல் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.

உலகின் பருவக்காற்றுக்கு ஆற்றல் அளிப்பது கடலின் இந்த நீரோட்டமே. கடல் நீரோட்டங்கள் ஏராளமான வெப்பத்தையும் குளிரையும் எடுத்துச் செல்கின்றன. கடலின் ஒரு துளி இந்த உலகையே சுற்றி வருகிற அளவிற்கு கடல் நீரோட்டம் அமைந்துள்ளது. அவ்வாறு சுற்றி வரும் துளிகள் இடத்திற்கு ஏற்ற வகையில் உருமாறுவது உண்டு. சில இடங்களில் இவை வெப்பமாகவும், சில இடங்களில் பனிக்கட்டியாகவும் மாறிவிடுகிறது. பூமியின் வெப்ப நிலையை சரியான அளவில், அதாவது நாம் வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பதில் கடலின் பங்கு மிகப் பெரியது.

சூழல் சீர்கேட்டில் கடல்
பூமியின் உயிர் இருத்தலுக்கு மிகவும் தேவையான கடல் இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. ஐக்கிய சபை வெளியிட்டுள்ள உலக மாகடல் தொடர்பான ஆய்வறிக்கை (First Global Integrated Marine Assessment) பல அதிர்ச்சி தகவலை தருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது கடலின் தன்மை சீர்கெட்டு வருவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு மனித சமூகமே முழு காரணம் என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

கடலில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை விட கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.  பல்வேறு விதமாக நச்சு குப்பைகள், ரசாயன குப்பைகள், அணுக்கதிரியிக்க குப்பைகள் கடலெங்கும் பரவிக் கிடப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹைட்ரோ கார்பன் பொருட்கள், பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் என கடலை பலவகையில் சீர்கெடுத்து வருகிறோம். இவற்றில் பெரும் பங்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இயந்திரமயமான மீன்பிடித் தொழில் கடலின் வளத்தை சுரண்டுகிறது. சட்டத்திற்கு புறம்பான மீன்பிடிக்கும் கும்பல் மறுபுறம் கடலை கொள்ளையிடுகிறது. இதன் காரணமாக கடலின் இயல்புத் தன்மை மாறியுள்ளது. அதன் வேதியியல்,  உயிரியல் பண்புகள் மாறியுள்ளன. இது கடல் சார் உயிரினங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் கடலில் கொட்டப்படும் இந்தக் குப்பைகள் கடல் உணவு மூலமாக நமது உணவுத் தட்டில் வந்து சேர்கிறது. 

அதேபோல கடலின் பல பகுதிகள் இறந்த பகுதியாக மாறிவருவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய பெருங்கடல் பற்றி அதிகளவிலான ஆய்வறிக்கைகள் இல்லாததன் காரணமாக நம் கடலோர பகுதிகள் எந்தளவிற்கு சீர்கெட்டு உள்ளன என்பதன் முழு விவரம் இல்லை. இதனைத் தவிர்த்து காலநிலை மாற்றம் காரணமாக கடல் எல்லையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடலை காப்போம்
வளர்ச்சி என்பது நீடித்த நிலையான சமச்சீர் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது உலகக் கோட்பாடு. இந்தியா இந்த கோட்பாட்டை ஏற்று உள்ளது. இதன்படி  வளர்ச்சி என்பது எதிர்கால சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும். வருங்கால சமூகத்தை மனத்தில் கொண்டு நம்முடைய திட்டங்களும் செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும். இயற்கையை முழுவதுமாக சுரண்டாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதும், எதிர்காலத்திற்கு அதனை பாதுகாப்பதும் முக்கியமானது. இந்த வகையில் கடலை பாதுகாக்க 14 அம்ச
திட்டங்களை வெளியிட்டுள்ளது ஐக்கிய சபை. 

அதன்படி 2025ம் ஆண்டுக்குள்ளாக கடலில் கலக்கும் எல்லா விதமான குப்பைகளையும் தடுக்க வேண்டும். மேலும், 2025ம் ஆண்டுக்குள்ளாக அழிந்து வரும் கடல் வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கடலின் அமிலத்தன்மை அதிகமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020ம் ஆண்டுக்குள்ளாக சட்டத்திற்குப் புறம்பான மீன்பிடித் தொழிலை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும். கடலில் முக்கிய பகுதியான பவளப் பாறைகளை பாதுகாக்க 2020ம் ஆண்டுக்குள்ளாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சில வகை மீன்பிடித் தொழில்நுட்பங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஆய்வுகள் தொடர்ந்து செய்தல், சிறு தீவு நாடுகளுக்கு  உதவி செய்தல், கடல் தொடர்பான சர்வதேச சட்டங்களை பின்பற்றுதல்... இப்படி பல திட்ட அம்சங்களை கூறியுள்ளது ஐக்கிய சபை.

இந்தியா இவற்றை நடைமுறைப்படுத்துவதாக கூறியுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்கள் மூலமாக இவற்றை நடைமுறைப்படுத்த இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிதாக துறைமுகங்களை அமைப்பதை தவிர்த்து கடல்சார்ந்து வேறு எந்த திட்டத்தையும் மோடி அரசு அறிவிக்கவில்லை. மேற்கூறிய ஐக்கிய சபையின் திட்ட அம்சங்களுக்கு எதிரானது மோடியின் துறைமுகத் திட்டம். இந்திய கடலோரப் பகுதியெங்கும் துறைமுகம் அமைப்பது தற்போதைய மத்திய அரசின் திட்டம்.

மீனவர்களை காலி செய்துவிட்டு இந்த திட்டங்களை அமலாக்க எண்ணுகிறார்கள். மக்களை ஒடுக்கி வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டு வரப்படும் நிறுவனங்களுக்கான மற்றொரு  திட்டமே இது. வழக்கம் போல இதிலும் பயன்பெறப் போகிறவர்கள் பன்னாட்டு இந்நாட்டு நிறுவனங்களே. அதுவும் தற்போது துறைமுகங்களே தனியார்மயமாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சூழல் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை. இத்தகைய சூழல் கடலை எப்படி மாசுபடுத்தும் என்பதை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் விபத்தினால் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவின் போது பார்த்தோம். இந்த உலகில் எது ஒன்றும் தனித்து இயங்குவதில்லை என்பது சார்பியல் தத்துவம். கடல் சார்ந்துதான் நாம் வாழ்கிறோம். இந்த பூமி இயங்குகிறது. கடலை அழிப்பது என்பது நம் வீட்டிற்கு நாமே குண்டு வைப்பதற்கு சமம். நெய்தலை காக்க வேண்டியது நம் கடமை.

(நீரோடு செல்வோம்!)