பெண்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி உள்ளது?



- ஜெ.சதீஷ்

வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனைப்பேருக்கு படித்ததற்கான வேலை கிடைத்திருக்கிறது? பெண்கள் தொடர்ந்து ஒரு துறையில் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்கிற கேள்விகளோடு, கடந்த 3 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு குறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல துறை வல்லுநர்களுடன் பேசினேன்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், ‘‘பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்விதமான முன்னேற்றத்தையும் அடையவில்லை. மேலும் பெண்கள் குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று இந்த சமுதாயத்தில் ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது.

அப்படி வகுக்கப்பட்ட வேலைகளைத்தாண்டி பெண்களின் பணிச்சுமை வீட்டிலிருந்தே துவங்கிவிடுகிறது. அலுவலகப்பணி முடிந்து வீட்டிற்கு வந்தால் வீட்டுவேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்வது போன்ற வேலைகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் மனஉளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு தொடர்ந்து ஒரு துறையில் அவர்கள் பயணிக்கமுடிவதில்லை.

மத்திய பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அறிவித்திருந்தது. இதுவரை 2 லட்சம் பேருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. மாநில அரசு என்று ஒன்று இயங்குகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு குறித்து யோசிப்பதற்கு அரசுகள் தயாராக இல்லை.

இந்த சமுதாயத்தில் பெண் என்பதற்காகவே அவர்களுக்கு பல பணிகள் நிராகரிக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்யும்போது, அம்மாநில மக்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி நிறுவனங்களை தொடங்கின.

ஆனால் அங்கு பணிபுரியும் பெரும்பாலானோர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தற்போது பல லட்ச இளைஞர்கள் வேலையின்றி தத்தளித்து வருகிறார்கள். அரசு இதையெல்லாம் கவனித்து அனைத்துத் துறைகளிலும் பெண்களை அனுமதிக்கவேண்டும். கணிசமான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித்தர வேண்டும். தனியார் நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தியிருக்கிறது என்று அரசு கவனிக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், பணி முடிந்து பெண்கள் வீட்டிற்கு செல்வதற்கான வாகன வசதி, ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். அரசு இதை எல்லாம் முறையாக கண்காணிக்கிறதா என்றால் கிடையாது. மாநில உரிமைகளையெல்லாம் மத்திய அரசிடம் இழந்து வருகிறது இந்த அரசு.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினால், மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற பதில் தெரியும் வரை தூக்கிலிட முடியாது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் பரிசீலனையில் உள்ளன. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. இது மக்களாட்சி மாண்பிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. மசோதாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா, நிராகரிக்கப்பட்டனவா என்பது தெரியவேண்டும். நிராகரிக்கப்பட்டால் அதற்கு என்ன காரணம் என்று தெரியும் வரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு அரசு நடத்தக் கூடாது.

இதில் கூடுதலாக அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் பொதுப் பட்டியல்  பிரிவில்- இட ஒதுக்கீடு பிரிவில் வராதவர்களை மட்டும் இடம்பெறச் செய்யும் சூழ்ச்சி நடைபெறுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குழப்பமான சூழலில் அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அதில் பாதிக்கப்பட்டு தகுதிப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இட ஒதுக்கீடு பிரிவினர் இருப்பிட (Domicile) தகுதி அடிப்படையில் தமிழ்நாடு பட்டியலில் இடம் பெறுவர்.

இது தமிழ் நாடு பட்டியலை நிச்சயம் பாதிக்கும். இதற்கான விளக்கத்தை தமிழ் நாடு அரசு மத்திய அரசிடம் கோரி பெறாமல் தமிழ் நாடு அரசு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளோம். இப்படி மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீட்டால் மாநில வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மாநிலம் முழுவதும் பின்தங்கியே இருக்கிறது’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் சென்னையை சேர்ந்த லாவண்யா பிரியா பேசுகையில், தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. கட்டாய இரவு நேரப்பணி, ஊழியர்களுக்கான போதிய வாகன வசதியின்மை போன்ற பிரச்சனைகளால் வேலை செய்வதற்கு அச்சம் ஏற்படுகிறது.

பெற்றோர்களும் பெண் என்பதால் பாதுகாப்பு கருதி இரவு நேரப்பணிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார்கள். வீட்டிற்கு அருகில் வேலை இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் எதுவும் வீட்டிற்கு அருகில் இருந்தாலும் அந்நிறுவனத்தில் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது.

இங்கு உள்ள பல நிறுவனங்களில் இளநிலை பட்டதாரிகளுக்கும், முதுநிலை பட்டதாரிகளுக்கும் ஒரேவிதமான ஊதியத்தையே வழங்குகிறார்கள். சில நிறுவனங்கள் முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் இளநிலை பட்டய படிப்பே போதுமானது என்று நிராகரித்துவிடுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அறிவித்திருந்தது.

ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாநில அரசு சார்பாக சென்னை போன்ற நகரங்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக செய்யப்படும் சில முயற்சிகள் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையவில்லை. இங்கு தகுதி அறிந்து அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஊக்கத் தொகை அளித்து வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார்கள்.

இத்திட்டம் அனைத்து கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டால் அனைவரும் பயன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். என்னோடு படித்த தோழிகள் பலர் குறைவான ஊதியத்திற்கு சிறிய நிறுவனங்களில் தொடர்பில்லாத பணியை செய்து வருகிறார்கள். இந்த நிலைதான் தற்போது தமிழகத்தில் இருந்து வருகிறது.

பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயிக்கப்படவேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் உட்பட அரசு துறைசார்ந்த வேலைகளில் சிபாரிசு இல்லாமல் தகுதி அடிப்படையில் வேலை வழங்கவேண்டும். மத்திய அரசு வேலை வாய்ப்புகள் சாமானியர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அரசுப் பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து பயிற்சி வகுப்புகள் போக முடியாததால் மத்திய அரசு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது. அரசு கவனம் செலுத்தி இலவச பயிற்சி வகுப்புகள் கொண்டுவந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு’’ என்கிறார் லாவண்யா பிரியா.      

களப்பணியாளர் ஜி.செல்வா பேசுகையில்,‘‘இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. உதாரணமாக சென்னையை சுற்றி இருந்த பெரும்பான்மையான எஸ்டேட்டுகள் மூடப்பட்டு விட்டன, ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐடி துறைகளில் ஆள் குறைப்பு செய்து இன்று நூற்றுக்கணக்கானவர்களாக மாற்றப்பட்டுவிட்டனர்.

வேலை இழந்தவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. தினக்கூலி வேலை செய்யக்கூடியவர்களான பெயின்டர், கட்டடத் தொழில் செய்து வந்தவர்களுக்கு, பண மதிப்பீட்டிழப்பிற்கு பிறகு வேலை இல்லா திண்டாட்டம் பெருகிஉள்ளது. பொறியியல் படித்த மாணவர்கள் படித்ததற்கான வேலையை செய்கிறார்களா என்றால் 5 சதவீதம் பேருக்குதான் வேலை கிடைக்கிறது.

மீதியுள்ள 95 சதவீத மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கூட வேலை கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த பாஜக அரசு. பெண்களுக்கான உதவித்தொகை எல்லாம் குறைந்துவிட்டது. இந்தியா முழுவதும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் செயல்படாமலே இருக்கின்றன. பெண்களுடைய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பெண்கள் என்றால் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல அமைச்சகம் எத்தனை சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தோமேயானால், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு படுமோசமாக இருக்கிறது. இதில் பெண்களுக்கு என்று தனியாக எதுவும் ஒதுக்கப்படவில்லை. பால் மற்றும் கடல்சார் தொழிற்சாலைகளில் மட்டுமே பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டன. அதில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் நிதி ஒதுக்கீடு கிடையாது.

விவசாயம் தொடர்பான வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலேயே தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பொருளாதார ஆய்வின்படி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வெறும் 57 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றனர்.

இத்திட்டத்தை மேம்படுத்த 26 சதவீதம் நிதியை அதிகப்படுத்தி நிதி அமைச்சர் ஆணை பிறப்பித்தார் . 2017 மற்றும் 2018ல் 48 கோடியாக மாற்றப்பட்டது. வருடம் முழுவதுமான பட்ஜெட்டில் 1 சதவீதம் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டது. ஆனால் குறைந்தபட்ச தொகைகூட மக்களுக்கு முறையாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்தத் தொகைதான் இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால் அது முழுமையாக சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2015  மே அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சர் மேனகா காந்தி ராஜ்யசபாவில் சமர்ப்பித்த அறிக்கையில் 24.58 லட்சம் பெண்களுக்கு வேலை கொடுக்கப்பட்டதாக கூறினார். இங்கு பெண்கள் வேலை ஆட்களாக இல்லாமல் சேவையாட்களாக மதிக்கப்பட்டு சொற்ப சம்பளத்திற்கு வேலை வாங்கப்படுவதோடு. போதுமான வருமானமும் கிடைப்பது கிடையாது.

பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக எவ்வித வேலைவாய்ப்புத் திட்டத்தையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை. பெண்கள் அழகுக் கலை மற்றும் தையல் பயிற்சியும், தவிர வேறு எந்தவிதமான முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. கட்டட வேலை செய்யக்கூடியவர்களில் ஆண்-பெண் இருபாலருமே ஒரே வேலையை செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இருவருக்கும் ஊதியம் என்பது வேறுபாடு உடையதாக இருக்கும்.

இதே நிலைதான் இன்றும் பெண்களுக்கு தொடர்கிறது. மேலும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக சில பொய் விளம்பரங்களால் போலி நிறுவனங்களை நாடி ஏமாறும் நிலையில் இளைஞர்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள்’’ என்கிறார். பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜெனிஃபர், “நான் பி.இ படித்திருக்கிறேன். ஆனால் படித்ததற்கான வேலை கிடைக்கவில்லை.

பல நிறுவனங்களில் முயற்சி செய்தும் பல காரணங்களால் நிராகரிக்கப்படுகிறேன். வேலை தேடி செல்கின்ற பல தனியார் நிறுவனங்கள் இரவு நேர வேலை கட்டாயம் என்கிறார்கள். பாதுகாப்பு காரணமாக அந்த வேலையை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நிறுவனங்களில் வேலை வழங்கினாலும் குறைவான ஊதியமே வழங்குகிறார்கள்.

மேலும் 9 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் என்னைப் போன்று பல லட்சம் பேர் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைதான் இன்று இருக்கிறது. அப்படி வெளி மாநிலங்களுக்குச் சென்றால் அங்கும் இதே நிலைதான் உள்ளது.

வேலைவாய்ப்பு குறித்து அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. படிக்கும்போதே இந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என்று தேர்வு செய்து படிக்கிறோம், ஆனால் நாங்கள் விரும்புகிற துறையில் பணியாற்ற முடிவதில்லை. அதற்கான வாய்ப்பும் இங்கு கிடைப்பதில்லை. அரசு துறை சார்ந்த வேலைகளில் சிபாரிசு இல்லாமல் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பெண்களுக்கான பாதுகாப்பு இவை எல்லாம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது” என வருத்தத்துடன் கூறுகிறார்.