இருமனம் கொண்ட திருமண வாழ்வில்



புதிய தொடர் - 1

-மகேஸ்வரி

இணை தேட இணையம்

‘இருமனம் கொண்ட திருமண வாழ்வில்…’ அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றங்கள்..? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றொரு வழக்குச் சொல் இன்று நிதர்சனமாகி திருமணங்களையே சொர்க்க லோகத்தைப் போன்ற மண மேடைகளை உருவாக்கி நிகழ்த்தும் அளவிற்கு, திருமணத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். எக்கச்சக்க முன்னேற்றங்கள், வசதிக்கேற்ற ஆடம்பரங்கள்.

நெருக்கமான உறவுகளையும், நெருங்கிய நண்பர்களையும் மட்டும் அழைத்து எளிமையாக தங்கள் இல்லங்களிலும், வீட்டின் வெளிப்பகுதிகளில் பந்தலிட்டும், வீட்டுக்கு அருகிலுள்ள மிகப் பெரிய வீடுகளில் உறவுகள் கூடி நிகழ்த்திய திருமணங்களின் நிலை மாறி, இன்று திருமணங்கள் மிகப் பெரும் வணிகமயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான திருமணங்கள் தங்களின் பொருளாதார நிலை  மற்றும் பகட்டான வாழ்வை வெளிக்காட்டும் ஆடம்பரங்களாகவே நிகழ்த்தப்படுகிறது.
  
‘வீட்டைக் கட்டிப் பார், திருமணத்தைச் செய்து பார்’ என்ற வழக்குச் சொல்லுக்கேற்ப, தங்கள் இல்லத் திருமண வேலைகளை உறவினர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு செய்த காலங்கள் கடந்துவிட்டன. திருமணம் தொடர்பான வேலை எதுவாக இருந்தாலும், அதை செய்துதர தனித்தனியே அந்தத் துறை சார்ந்து சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் நிறைய இயங்கத் தொடங்கியுள்ளன.

மணமக்களைத் தேர்வு செய்வதில் தொடங்கி, திருமண அழைப்பிதழ்கள் அச்சடிப்பது, கல்யாண மண்டபம், சீர் தட்டு, ஆரத்தி தட்டு, மேடை அலங்காரம், வண்ண ஒளி விளக்குகள், மலர் அலங்காரம், வரவேற்பு, விருந்தினர் உபசரிப்பு, திருமண விருந்து, போட்டோ மற்றும் வீடியோ, திருமணத்தை மகிழ்விக்கும் இசை நிகழ்ச்சி கள், திருமணம் முடித்து புதுமணத் தம்பதிகள் பறந்து செல்லும் ஹனிமூன் பேக்கேஜ்வரை அத்தனையும் வணிகமயம்.

ஒருசில திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் (Marriage Event Management) ஒருபடி மேலே சென்று ‘ஃப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங்’ என்றொரு விசயத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. இதை ஒவ்வொன்றையும் தனித் தனியாக செய்து தருவதற்கும், மொத்தமாக எல்லாவற்றையும் ஒரே இடத்தில் முடித்துத் தருவதற்கும் அவரவர் வசதி மற்றும் பொருளாதார நிலையைப் பொறுத்து, அவற்றை நடத்தித் தர, குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும், அதில் இருக்கும் சாதக பாதகங்களை அலசும் வகையிலும், திருமண தகவல்களை, தோழி வாசகர்களுக்காக ‘இருமனம் கொண்ட திருமண வாழ்வில்’ என்ற இந்தத் தொடர் ‘திருமண கைடாக’ உங்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது.

‘கண்ணும் கண்ணும் பார்த்து’ கலந்து பேசி செய்யும் திருமணம், உறவினர் மூலம் முடிவாகும் திருமணம், திருமண இடைத் தரகர்கள் மூலம் நிகழ்த்தப்படும் திருமணம் இவற்றை எல்லாம் தாண்டி, திருமணம் ஒரு மிகப் பெரிய வணிகமயமான நிலையினை இன்று எட்டியுள்ளது. திருமண பந்தத்தில் இணையப்போகும் இரு குடும்பத்தாரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நிறைய திருமணத் தகவல் மையங்கள் இன்று திசைக்கு ஒன்றாய் வளரத் துவங்கியுள்ளன. இது இன்று ஒரு பணம் கொழிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

இணையம் வழியாக மட்டும் இயங்கும் பெரும்பாலான தகவல் மையங்கள் குறிப்பிட்ட பாலினத்தவரின் வயது, நிறம், உயரம், படிப்பு, வேலை செய்யும் நிறுவனம், வாங்கும் ஊதியம், தாங்கள் எந்த மதத்தில், எந்த சாதியில், எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள், ராசி, நட்சத்திரம் என்பதுவரை அத்தனை விவரங்களையும் கேட்டுப் பெற்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இணையர்களைப் பெற ஒரு ஊடகமாக செயல்படுகின்றன.

ஒருசில திருமணத் தகவல் மையங்கள் மணம்புரிய விரும்புபவர்களின் வசதிக்கேற்ப சில பேக்கேஜ் முறையிலான ஆஃபர்களையும் கிளாசிக், கிளாசிக் அட்வான்டேஜ், கிளாசிக் பிரிமியம், கோல்ட், பிளாட்டினம், எலைட் எனப் பிரித்து வைத்துள்ளனர். இந்தப் பேக்கேஜ்களுடன் அசிஸ்டன்ட் சர்வீஸ் முறை இணைப்பிற்கு தனிக் கட்டணமும் உண்டு. இதில் எலைட் என்பது கோடிகளில் புரளும் பிரிவினருக்காக மட்டுமே இயங்குகிறது.

இதில் வலம் வருபவர்கள் முழுக்க முழுக்க பெரும் வணிக நிறுவனங்களில் லட்சங்களிலும், கோடிகளிலும் புரளும் பெரும் முதலாளிகள், அரசியல் பெரும் புள்ளிகள், சினிமா பிரபலங்கள் போன்றோர் இந்தப் பிரிவை ஆக்கிரமிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு பிரிவின் சாதியினருக்காக மட்டும் இயங்கும் திருமணத் தகவல் மையங்களும் சாதியக் கட்டமைப்புகளை இங்கு ஒழிக்கவே முடியாது என்ற நிலையில் செயல்பட்டு வருகின்றன.

இணையம் வழியே முடிவு செய்யப்படும் திருமணங்கள் எந்த அளவிற்கு இன்று வணிக ரீதியாக விரிவடைந்திருக்கிறதோ அதே போன்று அதில் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளது. நேரடியாகப் பார்த்துப் பேசிப் பழகி இரு குடும்பத்தாரும் கலந்து முடிவு செய்யும் திருமணங்களே ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்திக்கும் நிலையில், முன்பின் தெரியாத ஒரு நபரின் இணையதள பதிவுகளை மட்டும் நம்பி, அதில் இறங்கி தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி தவிப்பவர்களும் இங்கு அதிகம்.

பெரும்பாலான திருமணப் பதிவு மையங்கள் நம்பகத்தன்மையினை உறுதி செய்வதில்லை. ஒரு மணமகனோ அல்லது மணமகளோ தங்களைப் பற்றிய சுய விவரங்களை குறிப்பிட்ட திருமணத் தகவல் மையத்தில் வழங்கும்போது, அவர்கள் தரும் சுய விபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது, உறுதியானது என்பதை அதற்கான ஆதாரங்களைப் பெற்று சரிபார்ப்பதில்லை. இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான திருமணத் தகவல் மையங்கள் இணையம் வழியாக மட்டுமே தொடர்பில் செயல்படுகின்றன.

நமது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு களைப் பயன்படுத்தி, இணையம் வழி பணத்தைச் செலுத்திவிட்டால் போதும், உடனே நமக்கான ஒரு லாக் இன் ஐடி தந்துவிடுகிறார்கள். அதில் உட்புகுந்தால் போதும். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மணமக்களின் புகைப்படங்கள் வந்து கொட்டுகின்றன. அதில் குறிப்பிட்ட நபர் அளிக்கும் விவரங்கள் எந்த அளவிற்கு நம்பகமானது என்பது கேள்விக்குறியே.

ஆன்லைன் திருமணத் தகவல் மையங்களில் வலம் வரும்  இளைய தலைமுறையினரின் பெற்றோர்கள் இணையப் பரிச்சயம் அற்றவர்களாக பெரும்பாலும் இருப்பதால், திருமணம் செய்துகொள்ள முற்படும் மணமகன் அல்லது மணமகளே கடவுச் சொல்லை பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தை இயக்குபவர்களாய் உள்ளனர். இவர்கள் தங்கள் சுய விவரங்களை நம்பகத்தன்மையுடன் கொடுப்பதில்லை.

உதாரணத்திற்கு பி.காம் படித்த ஒரு மணமகன் தன்னை எம்.காம் படித்ததாகக் காட்டிக்கொள்வதும், குறைவான ஊதியத்தில் சாதாரண பணியில் இருக்கும் ஒரு நபர், மிகப் பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருப்பது போன்று காட்டிக்கொள்வது, தங்கள் வயதை குறைத்து காட்டிக்கொள்வது போன்ற ஏமாற்று வேலைகள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. ஏற்கனவே திருமணமான நபர்கள், திருமண பந்தத்திலிருந்து மணமுறிவு ஏற்பட்டு வெளியில் வந்த நபர்கள், தங்களைப் பற்றி உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தங்களின் இணையாகப் போகிறவரிடம் மறைக்கும் அபாயமும் இதில் நிறைய உண்டு.

முகமறியாமல் இணையம் வழியே வழங்கும் விவரங்களை மட்டுமே நம்பி, குறிப்பிட்ட நபருடன் தொடர்ந்து இணையத்தில் உரையாடல் செய்து (chat), திருமணம்வரை சென்று ஏமாற்றப்பட்டவர்களும் இங்கு ஏராளம். நம்பி பணத்தை இழந்தவர்களும் உண்டு. மிகச் சமீபத்தில் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்து தந்த இடைத்தரகர் ஒருவர் பெண்ணிற்கு எத்தனை சவரன் நகை போடுகிறார்களோ அதற்கேற்ப கமிஷன் தொகை பெறுவதாக தகவல் கிடைத்தது.

அதாவது பெண்ணிற்கு ஐம்பது சவரன் நகை மணமகள் வீட்டார் போடுகிறார்கள் என்றால், தரகருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கமிஷனாம். கூடுதல் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, இடை தரகராகச் செயல்படுபவர், மணமகன் வீட்டார் கேட்பதாகச் சொல்லி, மணமகள் வீட்டாருக்கு கூடுதல் சுமையினை ஏற்படுத்தும் அபாயமும் வரதட்சணை என்ற பெயரில் நிகழ ஏராளமான வாய்ப்புகள் இந்த முறையில் உள்ளன.

நீங்கள் முடிவு செய்யும் உங்கள் இல்லத் திருமணங்கள் எந்த வழியில் நடைபெற்றாலும் பரவாயில்லை, ஆனால் விழிப்புடன் இருங்கள். நீங்கள் உங்கள் வீட்டு வரனை முடிவு செய்வதற்கு முன்பு, உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர் மூலமாக நம்பகமான நபர்தானா என உறுதி செய்யுங்கள். இடைத் தரகர்கள், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் இவற்றைப் பயன்படுத்துவதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் ஆபத்துகளும் பலவிதங்களில் நிறைந்துள்ளது. உங்கள் இல்ல திருமண நிகழ்வுகளை விழிப்புடன் நடத்துங்கள்.

(தொடர்ந்து காண்போம்!)

கீதம் திருமண தகவல் மையம், சென்னை.
கடந்த இருபது ஆண்டுகளைக் கடந்து இந்தத் திருமணத் தகவல் மையத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் எனது திருமணத் தகவல் மையம் மூலமாக ஆண்டுக்கு 20 முதல் 25 திருமணங்கள் வரை நடத்தியுள்ளோம். அப்போது மணம் செய்து கொள்ளப் போகிறவர்களிடம் எதிர்பார்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழ். இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணத்தை முடிப்பது என்பது ஆண் - பெண் இருவரிடையே மிகமிகக் கடினமான காரியமாக உள்ளது.

திருமணம் செய்யப்போகும் மணமகள் என்றால் பையனின் படிப்பு, ஊதியம், சொத்து மதிப்பு, நிறம், உயரம் என எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். நூறு சதவிகிதமும் திருப்தி என்றால் மட்டுமே சம்மதிக்கிறார்கள். மணமகன் என்றால் பெண் கட்டாயம் வேலைக்குச் செல்பவளாக இருக்க வேண்டும், பெண்ணின் அழகு, வயது என எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.

இருபாலரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க 38 வயது வரை திருமணம் ஆகாத பெண்களும் அதேபோல் 30 வயதைக் கடந்து திருமணம் ஆகாத ஆண்களும் 200 எண்ணிக்கையைத் தாண்டி எங்கள் தகவல் மையத்தில் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில், திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெரும்பாலான பெண்கள் மணமகன் அவர் பெற்றோருடன் இருப்பதை மணப்பெண் விரும்புவதில்லை.

திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும் சில மணமக்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் கூட்டி நிச்சயம் முடித்த பிறகு ஒரு சில காரணங்களுக்காக திருமணத்தைத் தொடர விருப்பமில்லை என நிச்சயித்த பந்தத்தையே முறித்துக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. ஆண் - பெண் இருபாலரின் எதிர்பார்ப்பும் அதிகரிக்க அதிகரிக்க, இன்றைய காலகட்டத்தில், நிறைய பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு மிகப் பெரும் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. தங்கள் பெண் மற்றும் பையனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சில பெற்றோர்கள், முதலில் அவர்களை அழைத்துப் பேசி, அவர்கள் சம்மதித்த பிறகுதான் அடுத்த கட்டத்துக்குச் செல்கின்றனர்.