உடல் நலத்துக்கு...
எள்
* எள் செடியின் கொழுந்து இலையை நீரில் சேர்த்துக் கலக்க நீர் வழுவழுப்பாகக் காணப்படும். வாந்தி, வயிற்றுப்போக்குத் தீர இந்த நீரினைப் பருகலாம். * எள் எண்ணெயை (நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி நீங்கும். * ஐந்து கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
சீரகம்
* சீரகத்தை நன்கு உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு ஒரு கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர பித்த வாயு நீங்கும். * ஒரு கிராம் சீரகப்பொடியை வெல்லத்துடன் சேர்த்து உண்டால் விக்கல் நிற்கும். * சீரகத்தை சம அளவு நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உதடு வெடிப்பு, உதட்டுப் புண் குணமாகும். பித்தம், வாயு, உதிரச்சிக்கல் தீர சீரகத்தை உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு எடுத்து தேன், பாலுடன் கலந்துப் பருகி வந்தால் குணம் பெறலாம்.
வெற்றிலை
* வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்று சுவைப்பதால் அஜீரணக் கோளாறு நீங்கும். * வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி நெருப்பில் லேசாக வாட்டி, நெற்றியில் ஒட்டி வைக்க ஒற்றைத் தலை வலி குணமாகும். * வெற்றிலைச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்துக் குழைத்து நெற்றியில் பூச, தலைவலி குறையும். * வெற்றிலைச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு சேர்த்து 30 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குறையும்.
கொத்தமல்லி
* ஐந்து கிராம் கொத்தமல்லி விதையை இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு 150 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை-மாலை பருகி வர இதயம் பலமாகும். * கொத்தமல்லி இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, கட்டிகளின் மீது வைத்து கட்ட கட்டிகள் உடையும். * கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை சம அளவாக எடுத்து நீரில் ஊறவைத்துக் கொடுக்க தலைச்சுற்றல் நீங்கும். * கொத்தமல்லி விதையை சந்தனத்துடன் அரைத்து நெற்றியில் பூச தலைவலி தீரும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
|