சுற்றுச்சூழல் போராளி
-ஜெ.சதீஷ்
தனது 82 வயதுவரை தான் வாழ்ந்த மண்ணுக்காக போராடி மறைந்தவர் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கிங்க்ரி தேவி. இவர் அளித்த உத்வேகத்தில் மக்கள் இன்றும் பல போராட்டங்களை அம்மாநிலத்தில் முன்னெடுத்து செல்கின்றனர். அழகு நிறைந்த சோலைவனமாக காட்சி அளித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 80களின் ஆரம்பத்திலிருந்தே சட்டத்துக்குப் புறம்பாகச் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெற்று வருகிறது.
அதன் காரணமாக, இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதோடு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டார்கள். அரசு கண்டு கொள்ளாத இந்தப் பிரச்சனையை எதிர்த்துப் போராடியவர் கிங்க்ரி தேவி. பின்னாளில் சீனாவில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று, உலகின் பார்வையை இமாச்சலப் பிரதேசத்தின் மீது திருப்பினார். அப்படிப்பட்ட ஆளுமைக்கு, எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தது எந்த வகையிலும் பிரச்னையாக இருக்கவில்லை.
1995ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்ட கிங்க்ரி தேவி, இமாச்சலப் பிரதேசத்தின் பெருமைகள், சுற்றுச்சூழல், அங்கு நடைபெற்று வரும் சுரங்கத் தொழில் பற்றி உரையாற்றினார். இவருடைய பணிகளைப் பாராட்டி ‘ஜான்சிராணி லட்சுமி பாய் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்’ விருதை 1999ம் ஆண்டு வழங்கியது அன்றைய மத்திய அரசு.
எதிர்கால தலைமுறை கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்று, தான் வாழ்ந்த சங்க்ரா தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரியை உருவாக்க வேண்டுமென்று 2002ம் ஆண்டு முதல் போராடி வந்தார். அந்தப் போராட்டத்தின் பலனாக 2005ம் ஆண்டு அங்கு கல்லூரி தொடங்கப்பட்டது. தன் 82-வது வயதில் 2007ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வறுமையில், குணப்படுத்த இயலாத நுரையீரல் நோய் காரணமாக உலகை விட்டு மறைந்தார் கிங்க்ரி தேவி. இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான், தன் கையெழுத்தைப் போடவே கற்றுக்கொண்டார் அவர்.
|