ரோபோ ரோபோ



-மகேஸ்வரி

இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘எந்திரன்’ படத்தை எளிதில் மறக்க முடியாது. ரஜினியின் சாயலில் ஒரு மனித எந்திரத்தை ரோபோவாக உருவாக்கி படம் முழுவதும் அந்த எந்திரத்தை ரசிக்கும் படியாக நிறைய சேட்டைகளைச் செய்ய வைத்து, கிராஃபிக்ஸில் தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களால் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார் இயக்குநர். அது சினிமா.

ஆனால் நிஜத்தில் அதேபோன்ற மனித உருவம் கொண்ட இயந்திரங்களைக் (Humanroid robot) கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை கற்றுத் தர முன் வந்திருக்கிறது, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிரேனா டெக்னாலஜி நிறுவனம். 5 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளிக்குழந்தைகளுக்கு, இந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறை கற்றல் வகுப்பு கடந்த மாத இறுதியில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சின்ன சின்னக் குழந்தைகள், அறிவியல் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை உள்வாங்கி, இயந்திரங்களின் செயலையும், அதன் கட்டமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்ற விஷயங்களையும் நேரடியாக பங்கேற்று உணர்ந்தனர். இயந்திரத்தின் உதிரி பாகங்கள், பாகங்களின் இயக்கம், அதன் செயல்திறன் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து  உணர்ந்து அவர்களே அதை உருவாக்கவும் செய்தனர். உருவாக்கிய அந்த இயந்திரங்களை அவர்களே இயக்கி மகிழ்ச்சியும் அடைந்தனர்.

‘பொறியியல் என்பது ஒரு கலை’ அந்தக் கலையினை சரியான வழியில் கற்றுக்கொள்வதன் மூலமே அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை மாணவர்கள் உணர்ந்து ஈடுபாட்டுடன் அதில் இயங்க முடியும் என்றபடியே  பேசத் துவங்கினார், சிரேனா தொழில்நுட்ப
நிறுவனத்தின் நிறுவனரும் அதன் நிர்வாகத் தலைவருமான ஹரிஹர போஜன்.

‘‘மனித உருவம் கொண்ட ஹ்யூமன் ரோபோ இயந்திரங்களையும், அதற்கான மென்பொருளையும் வடிவமைத்து, பள்ளி மாணவர்களுக்கு இயந்திரங்களின் செயல்பாடு (Machine Learning), மென்பொருள் உருவாக்கம் (Software Programming) போன்றவற்றை வளரும் இளம் வயதிலேயே பயிற்சி அளிப்பதே சிரேனாவின் நோக்கம். இதன் மூலம் அவர்களை அறிவியல் சார்ந்த விஷயங்களில் ஆர்வமுள்ளவர்களாகச் செயல்படவைத்து, சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க முடியும்’’ என்கிறார் இவர்.

இந்தியாவில் முதன் முறையாக இவர்கள் நிறுவனம் ‘நினோ’ (NINO) எனும் பெயரில் ஹ்யூமன் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். நினோவின் சிறப்பு அம்சமே பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தை ஒட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது என்பதே. மேலும் நினோவின் தொடர்ச்சியாக SKIP எனும் முறையினையும் இவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தொடர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

SKIP மூலமாக பள்ளிக் குழந்தைகள் கற்றலுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், தயாரிப்பு, அதன் பராமரிப்பு, பழுது பார்த்தல் போன்றவைகளை செயல்முறை கற்றல் மூலமாக வழங்குகின்றனர். அதற்கான ஆய்வகங்களையும் இவர்களே பள்ளிகளில் கட்டமைத்துத் தருதல் மற்றும் அதற்கான கிட் பேக், அதனைக் கையாள கற்றுத்தரும் பயிற்சியாளர்களையும் இவர்களே பள்ளிகளுக்கு வழங்குகின்றனர்.
 
இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவர்கள் உலகில் முன்னேறிவரும் புதிய தொழில் நுட்பத்தையும், அதற்கான அறிவியல் அறிவையும் வளரும் இளம் வயதிலேயே நேரடியாக உணர்ந்து, அனுபவப் பூர்வமாக அறிய முடியும் என்கிறார் மிகவும் திட்டவட்டமாக. ‘‘வரும் கல்வியாண்டிலே நினோ மற்றும் SKIP கற்பித்தலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இதுவரை கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம்’’ என முடித்தார். நம் மாணவர்களின் திறமையால் மனித எந்திரங்கள் வலம் வரும் காலம் இனி விரைவில்.