செல்லுலாய்ட் பெண்கள்



துடுக்குப் பேச்சால் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் எம்.சரோஜா

நறுமணம் வீசும் ரோஜாக்கள் மலர்ந்திருக்கும் நந்தவனம் போல், தமிழ்த் திரையுலகிலும் பல்வேறு விதமான ரோஜாக்கள் மலர்ந்திருந்தன. அவை சரோஜாக்களாகப் பெயர் பெற்றன. பேபி சரோஜா, பி.எஸ். சரோஜா, ஈ.வி.சரோஜா, பி.சரோஜா தேவி. இவர்களுக்கும் முன்னதாக சரோஜினி என்று நாயகியாக, கவர்ச்சிகரமாக, நாட்டியத் திறன் மிக்க பல சரோஜாக்களுக்கு இடையில் நகைச்சுவையைப் பஞ்சமில்லாமல் வாரி வழங்கிய ஒரு ரோஜா உண்டென்றால், அவர் எம்.சரோஜா. நாயகியாக அறிமுகம் ஆகியிருந்தாலும், நகைச்சுவையை வாரி வழங்கியதன் மூலம் 50களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் 80கள் வரை நீண்டது. நகைச்சுவை நடிகையானாலும் 50களின் கதாநாயகிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அவர்களுக்கு இணையாக சரோஜாவின் திரை வாழ்வு மிளிர்ந்தது.

ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாதவை. ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்றவை. வீடுகள்தோறும் வானொலியின் வாயிலாகவும் தங்கவேலு சரோஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் தவறாமல் ஒலிபரப்பாயின. தனி ரெக்கார்டுகளாகவும் அவை வெளியிடப்பட்டு சக்கைப் போடு போட்டன.

வேலையில்லாத கணவன், தான் வேலைக்குப் போவதாகச் சொல்லித் திருமணமும் செய்து கொண்டு, மனைவி செய்து கொடுக்கும் காபி, டிபன் வகையறாக்களை எடுத்துக்கொண்டு, சைக்கிளில் பயணித்து பார்க்கில் போய் வசதியான ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு தனக்குத் தானே சீட்டு விளையாடிக் கொண்டும், கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலையானதும் காபியையும் குடித்து முடித்து அலுவலகத்திலிருந்து திரும்புவதாகப் பாவனை செய்தவாறே வீட்டுக்கு வந்து அலப்பரை செய்வதும், வீட்டுக்கு வரும் உறவினரிடம் ‘மன்னார் அண்ட் கம்பெனி’ யில் பணியாற்றுவதாக டூப் விட்டுத் திரிவதும், நீண்ட நாட்களுக்கு அந்தப் பொய் நிலைக்காமல் போய் குட்டு வெளிப்பட மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதுமாக ஒரு பொய்யை மறைக்க வேறொரு பொய் என பொய் மேல் பொய்யாக சீட்டுக்கட்டு மாளிகை கட்டி கலங்கடிக்கும் தங்கவேலு ஒருபுறம் என்றால், மற்றோர் முனையில் அவருக்கு ஈடு கொடுத்து நடித்து கலகலக்க வைத்தவர் எம்.சரோஜா. திரையில் மட்டுமல்லாமல் அசல் வாழ்க்கையிலும் ஜோடியான இருவரும் இணைந்து ரசிகர்களை கலகலக்க வைத்தார்கள்.

வெட்டி ஆபீசர் எழுத்தாளராக மாறிய கதை
‘மன்னார் அண்ட் கம்பெனி’ குட்டு வெளிப்பட்டதும் எழுத்தாளர் பைரவன் என தன்னை மனைவியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, மீண்டும் ஒரு பொய் என கொஞ்ச காலம் சொகுசு வாழ்க்கை வாழ்வதும், அதுவும் மனைவிக்குத் தெரிய வர, நடுக்கும் குளிர்க் காய்ச்சல் வந்ததாக சிரிக்க வைப்பதுமாக தங்கவேலுவின் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் சரோஜா ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

‘எழுத்தாளர் பொண்டாட்டி’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகச் சொல்லி, எழுத்தாளர் பைரவனின் பாராட்டு விழாவுக்குத் தன் தோழியுடன் சென்று அவமானப்பட்டு திரும்பினாலும் அதே வேகத்தில் கணவனை வழிக்குக் கொண்டு வருவதிலும், பின்னர் மொபைல் டீத்தூள் கம்பெனி வேலையைக் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்தே தொடர்வதும் என்று அமைந்த அந்தக் காட்சிகள் காலந்தோறும் நினைத்து மகிழத்தக்கவை. அதன் பிறகு வேலை வெட்டியில்லாத கணவன்மார்களுக்கு ‘மன்னார் அண்ட் கம்பெனி’ என்பதே பட்டப் பெயராகவும் நிலைத்தது. இந்தக் காட்சிகளில் மாலினி கதாபாத்திரம் ஏற்று நடித்த எம். சரோஜா எப்போதும் ரசிகர்களால் நினைவுகூரப்படுவார்.

உண்மையில் இப்படியெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணை வதைப்பது நகைச்சுவையாகுமா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுந்தாலும், அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக நகைச்சுவையைத் தவிர வேறு சிந்தனை எழாதவாறு நேர்த்தியாக அக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட விதமும் பாராட்டத்தக்கவை.

வெற்றிகரமான நகைச்சுவை கூட்டணி
1950களில் தொடங்கிய இவர்களின் நகைச்சுவை கூட்டணி 60களின் இறுதி வரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. இவர்களுக்கு முந்தைய நகைச்சுவை ஜோடிகளாக 1930களிலிருந்து 1940கள் வரை அறியப்பட்ட காளி என். ரத்தினம்-சி.டி.ராஜகாந்தம், என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம், சாரங்கபாணி  -கே.ஆர்.செல்லம் இவர்களை அடுத்து 50களில் ஏ.கருணாநிதி-டி.பி.முத்துலட்சுமி ஜோடியும், தங்கவேலு -எம்.சரோஜா ஜோடியும் வக்கிரமில்லாத நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை ஈர்த்தனர் என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை.

அசல் வாழ்க்கையிலும் இணைந்த ஜோடி
தங்கவேலு-எம்.சரோஜா இணை ’கல்யாணப்பரிசு’ படத்தின் வெற்றி விழாவுக்குப் பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகிலுள்ள முருகன் கோயிலில் மாலை மாற்றித் திருமணமும் செய்து கொண்டு மனமொத்த தம்பதிகளாயினர். இருவருக்கும் இடையில் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாதவர் சரோஜா.

தங்கவேலுவுக்கு ஏற்கனவே திருமணமாகி யிருந்தது. ஆனாலும் கலைத்துறைக்கே உண்டான சாபக்கேடா அல்லது சந்தர்ப்பவசமா என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல், பெரும்பாலும் திரையுலகில் நடிகைகள் தங்களுடன் இணைந்து பணியாற்றும் நடிகரையோ, இயக்குநரையோ, தொழில்நுட்பக் கலைஞர்களையோ மணந்து கொண்டு இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான காரணம் பற்றி வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாமல், மூடுண்டு போன ஒரு செயலாகவே இப்போது வரை இத்தகைய திருமணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தங்கவேலுவுடன் மண வாழ்க்கையில் இணைந்த பிறகும் பரபரப்பான நடிகையாக திரையுலகில் பிஸியாகவே இருந்தார் சரோஜா. இப்போது போல திருமணம் என்பது ஒரு தகுதியிழப்பாக அப்போதைய நடிகைகள் பலருக்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

50களின் வெற்றிகரமான எவர்க்ரீன் நகைச்சுவை இணை
இருவரும் அதன் பின் இணைந்து நடித்த பல படங்களே அதற்கு நல்ல உதாரணம். இரட்டை அர்த்த வசனங்கள், மோசமான உடல் மொழி, ஆபாசமான சைகைகள் எதுவுமில்லாமல், மிக மிகத் தரமாக அன்றைய நகைச்சுவை நடிப்பு மிளிர்ந்ததையும் குறிப்பிட்டேயாக வேண்டும். நினைத்து நினைத்து மகிழக்கூடிய அளவில் கண்ணியமானதொரு நகைச்சுவை மக்களுக்கு அளிக்கப்பட்டது. அப்படியான நடிகைகளில் ஒருவர்  சரோஜா. இருவரும் இணைந்து நகைச்சுவை விருந்து படைத்த ‘கல்யாணப்பரிசு’, ‘தெய்வப்பிறவி’, ‘அடுத்த வீட்டுப்பெண்’, ‘தேன் நிலவு’ போன்ற படங்கள் எக்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய எவர்க்ரீன் நகைச்சுவை காட்சிகளை கொண்டவை.

அருந்ததி ஆறாந்தேதியாவதும், கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் விரிசல், பரஸ்பரம் மரியாதையற்ற நிலை, குழந்தைகளிடையே அது ஏற்படுத்தும் தாக்கம் என பல விஷயங்களையும் நகைச்சுவையின் வாயிலாகவே ‘தெய்வப்பிறவி’ படத்தில் இருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படம் முழுமையுமே நகைச்சுவைப் பட்டாளம் என்றால், அதில் காதலியை அடைய முதியவர் வேடமிட்டு வருவதும், இளகிய மனம் கொண்ட காதலி அவருக்காக இரக்கம் கொள்வதும், உண்மை வெளிப்படும்போதும் காதல் கொண்டு இணைவதுமாக இந்த ஜோடி அதிலும் தனி ரகம்.

வயது வந்த மகளை வீட்டில் வைத்துக்கொண்டு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ‘தேன் நிலவு’க்குச் செல்லும் வயதான தம்பதிகளானாலும் நகைச்சுவையை வாரி வழங்க முடியும் என்பதை தரின் இந்தப் படம் நிரூபித்தது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் ஏரியில், படகுத் துடுப்பைத் தண்ணீரில் நழுவ விட்டு சாப்பாட்டுத் தட்டுகளையே துடுப்பாகப் பயன்படுத்திக் கரை சேரும் காட்சி விலா நோகச் சிரிக்க வைப்பதுடன், சமயோசித அறிவையும் வெளிப்படுத்தும் விதம் ரசமானது.

ஏறக்குறைய 300 படங்களுக்கு மேல் இருவரும் இணைந்தும் வேறு வேறு நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி,ராமாராவ் என அனைத்து முக்கியமான கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்தவர் சரோஜா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருந்தபோதும் தன் குருவாகவும், நல்ல வழிகாட்டியாகவும் கணவர் தங்க வேலுவை ஏற்றுக்கொண்டவர்.

சுட்டித்தனமும் துடுக்குப்பேச்சும் அளித்த கலை வாழ்வு
ராஜா சாண்டோவால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சரோஜாவின் தகப்பனார். ராஜா சாண்டோவின் மறைவுக்குப் பின் நடிப்பதில் விருப்பமில்லாமல், திரைப்படங்களிலிருந்து முற்றிலும் விலகி அதற்குத் துளியும் சம்பந்தமில்லாத டி.வி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியவர்.

ஆனால், அப்பா சினிமாவில் இருந்ததால் தானும் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்துடனும் அப்பா விட்ட இடத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனும் சரோஜாவுக்கு முன்னதாகத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியவர் அவரது அக்காள் லட்சுமி பிரபா. நம்பியார் பத்து வேடங்களில் நடித்த ‘திகம்பர சாமியார்’ படத்தில் ஒரு திருப்புமுனை கதாபாத்திரம் ஏற்று நடித்தவர். எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் போன்ற கதாநாயகர்களின் படங்களில் அவர்களுக்குத் தாயாராக வேடம் ஏற்றவர்.

‘நல்லவன் வாழ்வான்’, ‘மன்னாதி மன்னன்’ போன்ற எம்.ஜி.ஆரின் படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. கே.சுப்பிரமணியத்தின் ‘கீதகாந்தி’ திரைப்படத்தில் கலெக்டரின் மனைவி வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார். லட்சுமி பிரபாவைத் தேடி அவர்கள் வீட்டுக்கு வந்த தயாரிப்பு நிர்வாகி சோமு, யாருமற்ற ஹாலுக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த பள்ளி மாணவியான சரோஜா வந்திருப்பவர் யாரென்று தெரிந்து கொள்ளாமல், துடுக்குத்தனமாகப் பேச, வீட்டுக்குள்ளிருந்து வந்த அம்மாவும் அக்காவும் அவர் யாரென்பதைப் புரிய வைக்கிறார்கள். ஆனால், சரோஜாவின் துடுக்குத்தனமான பேச்சும் நடவடிக்கையும் அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சுப்பிரமணியம் அவரின் மனைவியும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி கதாநாயகி நடிகையான எஸ்.டி.சுப்புலட்சுமியின் காதுகளுக்குப் போய் விடுகிறது.

துடுக்குத்தனமாகப் பேசிய அந்தச் சுட்டிப்பெண்ணைப் பார்க்க விரும்பி எஸ்.டி. சுப்புலட்சுமி, சரோஜாவின் வீட்டுக்கு வருகிறார். உணர்வு கொப்புளிக்கும் அந்தச் சிறுமியின் முகமும் பேச்சும் அவரைக் கவர, திரைப்படங்களில் நடிப்பதற்கான அழைப்பை விடுக்கிறார். ஆனால், சரோஜாவின் தாயாருக்கு குழந்தையை சினிமாவில் ஈடுபடுத்தும் விருப்பமில்லை. சுப்புலட்சுமியின் ஆதரவான, கனிவான பேச்சும் நடவடிக்கைகளும் குடும்பத்தாரைச் சம்மதிக்க வைக்கிறது. இப்படித்தான் திரையுலகில் நுழையும் வாய்ப்பு சரோஜாவுக்கு வாய்த்தது. சரோஜாவை திரைப்படங்களில் நடிப்பதற்காக அழைத்து வந்தது அவருடைய அப்பாவோ, அக்காளோ அல்ல. அவரது துடுக்குப் பேச்சுதான்.

முன்னோடி இயக்குநரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு       
தமிழின் முன்னோடி இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, பேபி சரோஜா, எம்.கே.தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் என பலரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்தி, அவர்கள் பிரபலங்களாகப் பின்னாளில் உருவாகக் காரணமானவரும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரருமான கே. சுப்பிரமணியம் தான் எம்.சரோஜாவையும் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அவரது சொந்தத் தயாரிப்பான ‘கீத காந்தி’ திரைப்படத்தில் 13 வயதில் அறிமுகமானார் எம்.சரோஜா. மிக இளம் வயதிலேயே அவர் விரும்பாமலேயே அந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது என்று சொல்லலாம். அதற்குக் காரணம் சரோஜாவின் துறுதுறுப்பான பேச்சும், குறும்புத்தனமான செய்கைகளும்தான். மூத்த மகளுடன் திரையுலக வாழ்க்கை முடிந்து போகட்டும், இரண்டாவது மகளும் சினிமாவில் நுழைய வேண்டாம் என்பதே பெற்றோரின் எண்ணமாக இருந்தது.

ஆனால், சரோஜாவின் அதிர்ஷ்டம் அவரையும் திரையுலகுக்கு அழைத்து வந்தது. ஒரு நான்கு வயது பெண் குழந்தைக்கு இளம் தாயாக நடிக்கும் வாய்ப்பு அந்தப் படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டது. வயதுக்கு மீறிய வேடம், குருவித்தலையில் பனங்காயை வைத்த கதைதான். மகளாக நடித்த சிறுமிக்கும் அது முதல் படம். அவர் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகள் பத்மா. பரதக்கலையைப் பயின்று, பின்னாளில் பத்மா சுப்பிரமணியம் என பெயர் பெற்ற பரதக்கலைஞராக இன்று வரை திகழ்பவர். ஆனால், ‘கீத காந்தி’ படம் வெளியானபோது எம்.சரோஜா, பத்மா சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் இடம்பெறவில்லை.

அதிரடி நாயகியாக அறிமுகம் 
பரத நாட்டியம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என பல கலைகளையும் முறைப்படி எம்.சரோஜா கற்றுக் கொண்டார். அடுத்த பட வாய்ப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாக அவரைத் தேடி வந்தது. ஆனால், இவரைத் தேர்வு செய்த குழுவில் முதன்மையானவர் கலைஞர் கருணாநிதி. ’மந்திரிகுமாரி’ படத்தில் தான் எழுதிய வசனங்களை பேசிக் காட்டியும் நடித்தும் காண்பிக்கச் செய்து, அவரைத் தேர்வு செய்தார்.

சரோஜாவுக்கு அவர் அளித்த மதிப்பெண் நூற்றுக்கு நூறு. ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆரின் முறைப்பெண்ணாக, அவரது காதலியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஏறக்குறைய கதாநாயகி பாத்திரம் தான். அஞ்சலி தேவி எதிர்மறை நாயகி. ஆனால், கதைப்போக்கு இறுதியில் அஞ்சலி தேவியை நாயகியாக்கி விடும். சரோஜா ஏற்ற கற்பகம் பாத்திரம் மிக வலுவானது.

இப்படத்தில் நம்பியாருடன் சரோஜா வாள் சண்டையில் ஈடுபடும் ஒரு காட்சி, மிகவும் வலுவான பாத்திரம் என்பதை நிரூபிக்கும். சில நிமிடங்களுக்கு நீளும் அக்காட்சியில் அபாரமாக வாளை வீசி நடித்திருப்பார் சரோஜா. மாடர்ன் தியேட்டர்ஸ் அதன் பின் தொடர்ச்சியாக பத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை முதல் படமான ‘சர்வாதிகாரி’ யில் நடிக்கும்போதே ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.

இவருடன் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் 5 அல்லது 6 படங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்கள் அல்லி ராஜ்ஜியம் நடத்தும் ‘ஆரவல்லி’ சரோஜாவுக்கு மாடர்ன் தியேட்டர்ஸின் பத்தாவது படம். அதற்குள்ளாகவே வேறு படங்களில் நடித்து பிஸியான நடிகையாகி விட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்தமானவர், ஒப்பந்தம் முடியும் தருவாயில் 5000 ரூபாய் பெறும் அளவுக்கு உயர்ந்தார். ஆனால், முதல் படத்தில் ஏற்ற கதாநாயகி வேடம் மட்டும் மீண்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவது நாயகி போன்ற வேடங்கள்தான் வழங்கப்பட்டது.

நகைச்சுவை நடிகையாக மாற்றம் நடிகை கண்ணாம்
பாவின் சொந்தத் தயாரிப்பான ‘நாக பஞ்சமி’ யில் தங்கவேலுவுடன் இணைந்து நகைச்சுவை வேடம் ஏற்றார். இந்தத் தொடக்கப்புள்ளி இவர்கள் இருவரையும் இணை பிரியாத நகைச்சுவை ஜோடியாக மாற்றியது. முற்றுப்புள்ளி வைக்கும் இறுதிக்காலம் வரை இவர்கள் இருவர் உறவும் தொடர்ந்தது. இந்த வெற்றிகரமான ஜோடி ஐம்பது படங்களுக்கும் மேல் நகைச்சுவையை வாரி வழங்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

சிறு வேடங்களையும் ஏற்கத் தயங்காதவர் என்பதற்குச் சில படங்களைக் குறிப்பிடலாம். ‘வண்ணக்கிளி’யில் ’சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு, மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்’ என்று கள்ளபார்ட் நடராஜன் குழுவுடன் ஆடிப் பாடியதை மறந்து விட முடியுமா? எவர்க்ரீன் பாடலாக தலைமுறைகள் கடந்து அது ஒலிக்கிறதே…

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணையாக நடிக்கவில்லை. அதிகம் வசனங்கள் இல்லாமல் சி.கே.சரஸ்வதியுடன் வெற்றிலைப்பெட்டியாகப் பெயரற்றுத் தோன்றுவார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் கொஞ்சமும் அது வெளிப்படாமல் மிக அழகான, தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பேசி நடித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சரோஜா தெலுங்கிலும் நல்ல நகைச்சுவை நடிகையாக இருபது படங்களுக்கு மேல் நடித்தார். தெலுங்கின் நகைச்சுவை நடிகர் ரேலங்கியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

அரசிளங்குமரி, திருடாதே, மருதநாட்டு வீரன், வணங்காமுடி, பூலோக ரம்பை, பாசமலர் போன்றவையும் குறிப்பிடத்தக்க படங்கள். திரைப்படங்கள் குறைந்து போன நிலையில் நாடகங்களிலும் கணவருடன் இணைந்து நடித்தவர். அதில் ‘கல்யாணத்தில் கலாட்டா’ என்ற நாடகம் ஆயிரம் முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டிருக்கிறது. 

எல்லோரையும் போல வயதான காலத்தில் எம். சரோஜாவின் உடல் சோர்வுக்கும் தளர்வுக்கும் ஆட்பட்டிருந்தது. எப்போதும் மதிய நேர சிறு உறக்கத்தின் பின், மகள் காபி போட்டுக் கொண்டு வந்து எழுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அவரது இறுதி நாளில் (ஏப்ரல் 2, 2012) மகள் காபியுடன் வந்து எழுப்பியபோது சரோஜா மீளாத்துயில் கொண்டு விட்டார். ஆம், தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு 82ம் வயதில் சரோஜா என்ற மலர் வாடி உதிர்ந்து போனது.

(ரசிப்போம்!)

நேரடி சந்திப்பில் ஏற்பட்ட நெருக்கமான உணர்வு தங்கவேலுவின் மறைவுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டில் சரோஜாவை ஒரு பத்திரிகைக்காகச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னரும் வேறு சில மூத்த  நடிகைகளை சந்தித்திருந்தபோதிலும், சரோஜா உடனான சந்திப்பு மனதுக்கு மிக மிக நெருக்கமாக இருந்ததை நன்கு உணர முடிந்தது. அவருடன் பேசி விட்டு வந்தது  முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை சந்தித்த உணர்வே எழாத வகையில், நமக்கு மிகவும் நெருக்கமான நம் அத்தை, சித்தி, பெரியம்மா என நெருக்கமாகப் பழகக் கூடியவர்களைப் போய் பார்த்து விட்ட வந்த உணர்வே மனம் முழுதும் அப்பிக்  கிடந்தது.

அந்த அளவுக்கு மிக மிக இயல்பாக உரையாடிய அவரின் பேச்சும் அந்த  தொனியும் மயங்க வைத்தன. தியாகராய நகரில் மாசிலாமணி தெருவில் உள்ள தங்கள் வீட்டில் ஒரே மகள் சுமதியின் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார். தங்கள் வீட்டைப் பற்றியும், எவ்வளவு காலமாக அங்கு வசித்து வருகிறோம் என்பது உட்பட மிக சுவாதீனமாகக் கூறி விட்டு, முடிந்தவரை வீட்டையும் சுற்றிக்  காண்பித்தார். இவையெல்லாம் முன்பின் அறிமுகமில்லாத ஒருவருக்கு மிக மிக அதிகம்.

சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பெற்றோரின் புகைப்படங்கள், கணவரும் நடிகருமான கே.ஏ.தங்கவேலுவுடன் இணைந்திருக்கும் படங்கள் என  அனைத்தையும் சுட்டிக் காட்டி அவை பற்றி பகிர்ந்து கொண்ட தருணங்கள் மிக மிக ரசமானவை. தன் கணவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்தோறும் வார்த்தைக்கு வார்த்தை வாய்நிறைய கே.ஏ.டி. என்றே அவரைப் பற்றி குறிப்பிட்டதும்  இனிமையானவை. கணவரின் மறைவுக்குப் பிறகு எவ்வாறு அவரை இழந்து நிற்கிறார் என்பதும் மகள், மருமகன், இரு பேரக்குழந்தைகளுடன் வசித்தாலும் அவை அனைத்தையும் மீறி மேலோங்கி நிற்கும் தனிமை உணர்வும் அவரது ஒவ்வொரு சொற்களிலும் நன்கு வெளிப்பட்டன.

- பா.ஜீவசுந்தரி