அச்சம் தவிர்



- ஜெ.சதீஷ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்த பெண் காவல்துறை அதிகாரி அம்மாநில முதல்வரால் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் வாகனத்தை சோதனையிட்டு, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். ஆனால் சட்டத்தை மதிக்காத பாஜகவினர் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பி குழப்பம் விளைவித்தனர்.

அவர்களின் இந்த செயலைக் கண்ட பெண் காவல்துறை அதிகாரி ஸ்ரேஷ்தா தாகூர், இந்த கும்பலின் கூச்சலுக்கு சற்றும் அஞ்சாமல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குண்டர்களால் சற்றும் அச்சமடையாத காவல்துறை அதிகாரி ஸ்ரேஷ்தா தாகூர், அங்கு பிரச்சனையில் ஈடுபடும் பாஜகவினரிடம், ‘முதல்வரிடம் சென்று பாஜகவின் வாகனங்களை சோதனையிடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக வாங்கி வாருங்கள்’ என்று கூறி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.

அதிகார அச்சுறுத்தலுக்கு கட்டுப்படாமல் தனது கடமையை செய்த பெண் காவல்துறை அதிகாரியின் துணிச்சலை பலரும் பாராட்டிஉள்ள நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இவரை நேபாள எல்லையான பஹிராச்சி என்னும் இடத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஸ்ரேஷ்தா தாகூர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ‘‘நெருப்புக்கு தனி வீடு ஒன்று கிடையாது.

அது எங்கு இருந்தாலும் வெளிச்சம் தரும். அது போலதான் நானும். என்னுடைய நேர்மையான பணிக்குக் கிடைத்த வெகுமதியாகவே நான் இதை கருதுகிறேன். என் நண்பர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். இந்நிகழ்வு உத்தரப்பிரதேச மக்களிடையே யோகி ஆதித்யநாத் அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.