ஜெனிவாவில் முழங்கிய வனராணி



-மகேஸ்வரி

இந்திய வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தால் எத்தனையோ ஒப்பந்தங்கள் உருவாகியிருக்கும். அதில் ‘ஏ.கே.அந்தோணி - சி.கே.ஜானு ஒப்பந்தம்’ முற்றிலும் மாறுபட்டது. ஒரு மாநிலத்தின் உச்ச அதிகாரத்திலிருக்கும் முதல்வருக்கும், காட்டின் கடைசி குடிசையில் வாழும் ஒரு பழங்குடி இனப் பெண்ணிற்கும் இடையில் உருவான ஒப்பந்தம்.

சுமார் 25 ஆயிரம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் பெற்றுத்தந்து மண்ணுரிமையை உறுதி செய்த சி.கே.ஜானு, கேரள பழங்குடிகளின் சமரசமற்ற தலைவி. செக்கோட்டை என்ற காட்டுக் குடியிருப்பில் திரிசிலேரி என்ற இடத்தில் சின்னஞ்சிறிய ஆதிவாசி கிராமத்தில் பிறந்த ஜானுவின் அப்பா கரியன், அம்மா, வெளிச்சி. அடியா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

“பழங்குடி மக்களாகிய எங்களுக்கு காசு, பணம் சம்பாதித்து வைக்க ஆசை இல்லை. ஆனால் இந்த மண்ணின் மீதான எங்கள் உரிமை சாகும் வரையிலும் இருக்க வேண்டும். எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அது என் சொந்த நிலம் இல்லை. என் வாழ்க்கை முடிந்த பிறகு அது வேறொருவரின் நிலம்.

ஆனால் வாழும் வரையிலும் அந்த மண்ணின் மீதான எனது உரிமையை நான் விட்டுத்தர மாட்டேன்” எனும் ஜானு, இதுவரை போராட்டங்கள் மூலம் 25 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு நிலம் பெற்றுத் தந்திருக்கிறார். “இன்னும் பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் நிலமின்றி இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் நிலம் பெற்றுத் தரும் போராட்டத்தை இடைவிடாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்கிறார். இத்தனைக்கும், ஜானு படிக்காதவர். ஏழு வயதிலேயே விறகு பொறுக்கவும், கூலி வேலைக்கும் போகத் துவங்கியவர், தையல் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார். விவரம் தெரியத் தெரிய அரசியல் கட்சிகள் ஆதிவாசி மக்களை ஏய்த்துப் பிழைப்பது புரிந்தது. ஊர் ஊராக அலைந்து திரிந்து மக்களை போராட அணிதிரட்டி இருக்கிறார்.

பல போராட்டங்கள், கைதுகளுக்குப் பின் ‘கோத்ர மகா சபை’யினைத் துவங்கினார் ஜானு. ‘‘எங்கள் மக்கள் எல்லோரும் அதில் வந்து இணையத் துவங்கினார்கள். தங்களுக்கு போஸ்டர் ஒட்டவும், கொடி தூக்கவும் ஆள் இல்லாமல் போய்விடும் என்று பயந்த அரசியல் கட்சிகள், உடனே தங்கள் கட்சிகளில் பழங்குடிகள் பிரிவை ஆரம்பித்தார்கள். விளைவு ஆதிவாசிகளை பிரித்து வைத்து பிரச்சனை முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். 

வனத்துறை சட்டங்களும், சரணாலயங்களும் வருவதற்கு முன்பு ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடிகளாகிய நாங்கள் இந்த வனத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். எந்த காலத்திலும் ஒரு பழங்குடி மனிதர் தந்தத்துக்காக யானையை வேட்யாடியது இல்லை. காய்ந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பார்களே  தவிர ஒரு காலத்திலும் பழங்குடி மக்கள் பச்சை மரங்களை வெட்டியது இல்லை.

இவற்றை செய்யும் வனத்துறைதான் வனத்தின் முதல் எதிரியே தவிர, பழங்குடிகள் அல்ல’’ என்கிறார் இவர். ‘‘நான் படிக்கவில்லை. என்னிடம் பணம் இல்லை. எனக்கு ஆங்கிலம் தெரியாது. இவற்றை ஒரு தடையாய் என்றைக்கும் நினைக்கவில்லை. போராட வேண்டும் என்ற எண்ணம் இருந்துவிட்டால் போதும். பணம், படிப்பு, மொழி எதுவும் தேவையில்லை.

அவற்றை ஒரு காரணமாக சொல்வது, ஏமாற்று வேலை” எனும் ஜானு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ‘‘இந்தியாவில் ஆதிவாசிகள் முன்னேறிவிட்டார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இதை ஐ.நா. சபை தலைவர்களும் நம்பினர்.

இக்கருத்தை எனது பேச்சின் மூலம் உடைத்தெறிந்து, சொந்தக் காடுகளையும், நிலங்களையும் இழந்து காலனிகளில் எங்கள் மக்கள் படும் கஷ்டங்களையும் இந்தியாவில் ஆதிவாசிகள் ஒடுக்கப்பட்டு வீதிக்கு தள்ளப்பட்டிருப்பது பற்றியும் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தேன். வறுமையின் கோரப்பசியில் சிக்கி இறந்தவர்கள் பற்றிப் பேசினேன். வனத்துறையினரால் எமது இனம் படும் கொடுமைகளை பட்டியலிட்டேன்.

அதன் மூலம் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தேன். இந்தியாவிற்கு வந்து ஆதிவாசிகள் நிலையினை ஆய்வு செய்யக் கோரினேன். பல தலைவர்கள் என்னைச் சந்தித்து விரிவாகப் பேசினர். அதன் பிறகு ஐ.நா. குழு இந்தியா வந்தது. ஆனால் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்கு இவர்களை அதிகாரிகள் அழைத்துச் செல்லவில்லை. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உள்ள ஆதிவாசி இயக்கங்களை சந்தித்து அம்மக்களுடைய நிலைமைகளை கண்டறிந்ததோடு, அவர்கள் நடத்திய கூட்டங்களிலும் பேசியிருக்கிறேன்” என்கிறார் ஜானு.

‘‘சிறுவயதில் வயல்களில் மீன், நண்டு, நத்தைகளைப் பிடித்து விளையாடுவோம். இந்த வகை மீன்கள் அதிகமாக கிடைக்கும். இதையெல்லாம் இப்ப நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. காட்டில் நிறைய பழங்கள் கிடைக்கும். விதவிதமான பறவைகளையும் அதன் சத்தங்களையும் கேட்பதில் மகிழ்ச்சி கிடக்கும். கிழங்குகளையும் எங்கள் அம்மா, அப்பா கொண்டுவந்து வேகவைத்துக் கொடுப்பார்கள்.

தேனை எடுத்துத் தின்போம். குட்டைகளில் தண்ணீர் குடிப்பதோடு, ஆறுகளுக்கு கூட்டமாகச் சென்று குளித்து விளையாடி மகிழ்வோம். காட்டு மிருகங்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த நிலத்தில் சிறு தானியங்களை பயிரிடுவோம். குடும்பத்தோடு எல்லோரும் சேர்ந்து வேலை செய்வோம்.

இரவில் காட்டு மிருகங்கள் வராமல் இருக்க மூங்கில் குழலில் ஓசை எழுப்புவோம். அப்படியே அவை வந்தாலும் பயிர்கள் எல்லாவற்றையும் அழிக்காது. எங்களுக்கு மிச்சம் வைக்கும். நாங்கள் விதைக்கிறது எல்லாவற்றிற்கும் சேர்த்துதானே. மிருகங்களிடம் எங்களுக்குப் பயமில்லை. காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்தோம். எங்கள் சமூகத்தில் வெளி ஆட்களை கண்டால் பயம்.

அறிவொளி இயக்கத்தினர் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். நானும் கற்றேன். தொடர்ந்து என் முயற்சியால் முழுமையாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். நம்பூதிரிகளும், நாயன்மார்களும், பட்டர்களும் எங்கள் காடுகள் மற்றும் நிலங்களை தங்களுடையது என்று கூறி சுலபமாகப் பறித்தனர். பறிக்கப்பட்டது எங்கள் காடும்  நிலமும் மட்டுமல்ல... எங்கள் சுதந்திரமும்தான் என்பது பிறகுதான் தெரிய வந்தது.

எங்கள் பெற்றோர்களிடம் இருந்து பறித்த நிலங்களில் வயல் வேலைக்கு எம்மவர்களே அமர்த்தப்பட்டனர். கூலியாக தானியங்களை கொடுப்பார்கள். பிரிட்டீஷ்காரர்களும் வரி வசூலிக்க, காடுகளையும் வன நிலங்களையும் நம்பூதிரிகளுக்கும் நாயன்மார்களுக்கும், வாரியார்களுக்கும் வழங்கி, அவர்களை ஜமீன்களாக மாற்றினர். எங்கள் காடு எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டது.

தனித்து நாங்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டோம். குடும்பத்திற்கு நான்கு சென்ட் நிலம் கொடுத்து அதில் குடிசை போட்டு வாழ்ந்தோம். நம்பூதிரிகளின் அடிமைகளாக நிர்பந்திக்கப்பட்டோம். அவர்களிடத்தில் இரவு, பகல் பாராது உழைத்தோம். எங்கள் பெண்கள் மாடுகளை ஏர்ப்பூட்டி நிலங்களை உழுவதுண்டு.

மாடுகள் இல்லாத பொழுது பெண்களே மாடுகளைப் போல ஏரைப் பிடித்து இழுத்து உழுவதுண்டு. கால்கள் சேற்றில் மாட்டிக்கொள்ளும். கால்களை வெளியில் எடுக்கக்கூட மேஸ்திரிகள் விடமாட்டார்கள். விரட்டி விரட்டி வேலை வாங்குவார்கள். நானும் இதுபோன்ற வயல் வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். எல்லா வேலைகளும் எங்கள் சமூகத்தினர் செய்து முடித்த பிறகு நெல் களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த நெல் முழுவதையும் நிலத்தின் முதலாளி வந்து எடுத்துச் சென்றுவிடுவார். இதெல்லாம் என் மனதைப் பாதித்த விஷயங்கள். இதுபோல தான் கேரளாவில் அனைத்துப் பகுதிகளும் இருந்தன. இந்தக் கொடுமைகள் இளம் வயதில் என்னை அதிகம் பாதித்தன. இதற்கு விடைதேட முற்பட்டேன். கட்சிகளின் ஊர்வலம், மாநாடு போன்றவற்றிற்கு கோஷம் போடுவதும் போஸ்டர் ஒட்டுவதும் நாங்கள்தான்.

நாங்கள் போடும் கோஷங்களின் அர்த்தம் என்னவென்று பங்கெடுக்கும் எமது சமுதாயத்தினருக்குத் தெரியாது. காடும் நிலங்களும் எங்கள் கையை விட்டுப் போனதற்கு கட்சிகளும் முக்கியக் காரணமாகும். கேரள ஆதிவாசிகள் சமுதாயம் கட்சிகளினால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. விவசாயத் தொழிலாளர் யூனியனில் சேர்ந்து வேலை செய்தேன். சில கருத்து மாறுபாடுகள் காரணமாக விவசாயத் தொழிலாளர் யூனியனை விட்டும், கட்சியை விட்டும் விலகினேன்.

ஆதிவாசிகளுக்கு என்று தனியாக சங்கம் அமைத்து செயல்படத் தொடங்கினேன். 35 இனங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே வாழ்கிறோம். கேரளத்தில் வயநாட்டு மாவட்டத்தில்தான் ஆதிவாசிகள் அதிகம். சுமார் 4 லட்சத்திற்கு மேல் வாழ்கிறோம். கேரள ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு பைசா கூட எங்களை வந்து சேர்வதில்லை.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எங்களை முன்னேற்றிவிட்டதாக  தவறான செய்திகளைக் கூறினர். கட்சிகள் எங்களை வெறும் வாக்குவங்கிகளாகக் கருதின. கேரளாவில் நில உச்ச வரம்புச் சட்டம் இருந்தும் நிலஉடைமையாளரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் ஆதிவாசிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை. இதற்கு கட்சிகளும் கவலைப்படவில்லை.

எங்கள் நிலையை கேரளப் பொது சமூகத்திற்கு தெரிவிக்க மானந்தவாடி சங்கமம் மாநாட்டை ஆதிவாசி மக்களை ஒருங்கிணைத்து நடத்தினோம். இதில் இழந்த வனத்தையும் நிலத்தையும் மீட்டெடுப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டதோடு, எங்கள் கோரிக்கையை பகிரங்கப்படுத்தினோம். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உரிமைக் குரல் எழுப்பினர். மீடியாக்களிலும் செய்திகள் வந்தன.

ஆதிவாசிகள் தன்னிச்சையாக ஒருங்கிணைவதை எம்மைச் சுரண்டிய சமூகத்தாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒருசில விஷமிகள்
மாநாட்டுப் பந்தலில் தீ வைத்து எங்களை பயமுறுத்தியும் பார்த்தனர். பூமி தோன்றிய காலம் முதல் நாங்கள் காடுகளில் பாரம்பரியமாக வாழ்கிறோம். வனச்சட்டங்களும் வனத்துறையும் உருவாக்குவதற்கு முன்பே காடுகளில் ஆதிவாசிகளாகிய எங்கள் சமூகம் வாழ்கின்றது.

எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வது மிகக் கொடுமையான அநீதியாகும். எங்கள் வனங்களையும், நிலங்களையும், வாழ்வையும் ஆக்கிரமித்தவர்கள் வனத் துறையினர்தான். எதை யாரிடமிருந்து திருடினார்களோ அதை மீட்பதுதானே சரியானது? ஆகவே கேரள தலைமைச் செயலகம் முன் முற்றுகை போராட்டம் நிகழ்த்தினோம், வனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோம்.

வாழ நிலம் இல்லை. உண்ண உணவு இல்லை. பெண்களும் குழந்தைகளும் எமது சமுதாயத்தினரும் சீரழிக்கப்பட்டார்கள். ஆதிவாசிகள் உணவில்லாமல் பட்டினியால் இறந்தனர். பட்டினியால் சாவதைவிட கேரள தலைமைச் செயலகம் முன்பும், முன்னாள் முதலமைச்சர் ஏ.கே.அந்தோணி வீட்டிற்கு முன்பும் சாவோம் என முடிவு செய்து, கேரளா முழுவதுமுள்ள பாதிப்படைந்த ஆதிவாசிகளை திரட்டி திருவனந்தபுரம் நோக்கிச் சென்றோம்.

தலைமைச் செயலகம் முன்பு குடிசைகள் அமைத்து 48 நாட்கள் தங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இப்போராட்டத்தை முறியடிக்க கேரளா அரசு காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை செய்தது. எங்கள் உறுதியினை அரசால் முறியடிக்க முடியவில்லை. பொதுமக்களிடையும் எங்களுக்கு ஆதரவுப் பெருகியது. போராட்டம் தீவிரம் அடைந்து கேரளாவை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கு நிலைமை மாறியதன் விளைவாய் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் ஏ.கே. அந்தோணி பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார்.

சி.கே.ஜானு  ஏ.கே. அந்தோணி ஒப்பந்தம் 2001ல் கையெழுத்தானது. ஒப்பந்தம் கேரளா முழுவதுமுள்ள ஆதிவாசிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றது. இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்கிறார் ஜானு. “இந்த ஒப்பந்தம் போட்டும் பயனின்றி, கிடப்பில்தான் உள்ளது. எங்களுக்கு நிலம் கிடைக்கக்கூடாது என்பதில் கட்சிக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.

நிலம் கிடைத்து விவசாயம் செய்து நாங்கள் தன்னிச்சையாக வாழ ஆரம்பித்துவிட்டால் இவர்கள் சார்ந்திருக்கும் முதலாளிகளின் தோட்டத்தில் வேலை செய்வது யார்? கட்சிகளின் எடுபிடியாகவும், வேலைக்காரர்களாகவும், கோஷம் போடவும், மாநாட்டிற்குப் போகவும், கொடி பிடிக்கவும் வேறு யார் இருப்பார்கள்? எங்கள் சமூகத்தினர் மத்தியில் நிறைய விழிப்புணர்ச்சி மற்றும் எழுச்சி உருவாகியிருக்கிறது.

எங்களை அடக்கி ஒடுக்கியவர்கள் இனியும் அதைச் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. கேரள ஆதிவாசிகளின் பிரச்னைகளை நாடறியச் செய்திருப்பதோடு பலரது கவனத்தை எங்கள்மீது விழச் செய்திருக்கிறோம். கேரளாவில் சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலம் கிடைக்க முயற்சி எடுத்துள்ளோம். சில இடங்களில் நிலங்களும், பட்டாவும் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டோம்.

ஆர்லா பாம் என்ற இடத்தில் 7500 ஹெக்டேர் நிலம் எமது சமுதாயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3500 ஹெக்டேர் நிலம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சில குடும்பத்திற்கு பட்டாவும் தரப்பட்டுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு கிடைத்த வெற்றி. போராடியதால் சாதிக்க முடிந்தது. நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கும், எங்கோ இருக்கும் காட்டு மரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

இந்த இயற்கைதான் காட்டையும், நாட்டையும் இணைக்கிறது. அதனால் ‘எங்கோ இருக்கும் ஆதிவாசிகளின் போராட்டம்தானே’ என்று நினைக்கக்கூடாது. எல்லா மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும். ஏனெனில் இது காட்டுக்கான போராட்டம் மாத்திரம் அல்ல, இந்த நாட்டுக்கான போராட்டமும். எங்களைத் தவிர வேறு யாரால் காடுகளையும் காட்டு மிருகங்களையும் பாதுகாக்க முடியும்?” என்கிறார் இந்த வனராணி.

“எனக்கு இப்போது வயது 47. கடந்த 35 வருடமாகத் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறேன். என் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இனியும் தொடரும். இதுவரை 35000 குடும்பத்திற்கு நிலம் பெற்றுத் தந்திருக்கிறோம். அதில் 93 பேருக்கு மட்டும்தான் 5 ஏக்கர் கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் 3, 2, 1 என்ற அளவில் மட்டுமே தரப்பட்டுள்ளது” என்றார் ஜானு.-