வாசகர் பகுதி



வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் அளிக்கப்படும் தாம்பூல தட்டில் மஞ்சள் இடம் பெற்றிருக்கும். அதை வீட்டுக்கு எடுத்து வரும் பெண்கள் குளிக்கவும் எடுக்காமல், அதுவே மஞ்சள் பொடியாக இருந்தாலும் அலர்ஜி ஆகிறது என்று சொல்லி மஞ்சளை உபயோகிக்காமல் அப்படியே போட்டு வைத்து, மக்கிய பிறகு குப்பையில் போகும்.

அதை அப்படி வீசாமல் மஞ்சளை தண்ணீரில் கலந்து நாம் சமைக்க எடுக்கும் காய்கறிகளை 5 நிமிடங்கள் அந்த மஞ்சள் தண்ணீரில் போட்டு வைத்து, பிறகு அரிந்து சமைத்தோமானால், காய் விளைய வைக்கும்போது பூச்சி வராமல் இருக்க அடிக்கும் மருந்தெல்லாம் இந்த மஞ்சள் தண்ணீர் பட்டதும் சென்று விடும். பிறகு சமைத்தோமானால் சுவையாகவும், உடல் பாதிப்பு இல்லாமலும் இருக்கும்.
ஆர். ராதிகா அசோகன், திருத்துறைபூண்டி வட்டம்.

சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. நானும், விஜியும் ஒரு தனியார்  நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். முதலில் நானும் அவளும் பெற்றோருடன் புறநகர்ப் பகுதியில் இருந்தோம். அதன் பின் என் பெற்றோர் சென்னையில் வீடு வாங்க நாங்கள் புறநகர் விட்டு வந்து விட்டோம். எங்களிருவருக்கும் திருமணமாகியும், ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் நட்புக்கு பங்கம் ஏற்படவில்லை.

அன்று நானும் அவளும் பேருந்துக்காக காத்திருந்தோம். எங்களுக்கு எதிரில் ஒரு கூட்டம் சுற்றி வளைந்து நின்று கொண்டு, யாரோ ஒருவர் ‘ஆக்ஸிடென்ட்’ ஆகி விழுந்திருப்பதாக பேசிக் கொண்டிருந்தனர். என் தோழியிடம் ‘‘வா போய் பார்க்கலாம். முடிந்தால் உதவி  செய்யலாம்’’ என்றேன். அதற்கு அவள் ‘‘புறநகருக்கு அடிக்கடி பஸ் வராது. அதோ  என் பஸ் வருகிறது. நான் போகிறேன்’’ என்று பஸ்ஸில் ஏறி போய் விட்டாள்.

நான்  கூட்டத்தை விலக்கிக் கொண்டு போய்ப் பார்த்தேன். அங்கு வீழ்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தது, சற்றுமுன் பேருந்தில் ஏறிச்சென்ற என் தோழியின் கணவர்தான். வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அவரை கூட்டத்தில் உள்ளோர் உதவியுடன் வண்டியிலேற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, நடந்த விஷயத்தைக் கூறி, வழியிலேயே காவல்துறைக்கும் தெரிவித்து விட்டேன் என்று மருத்துவரிடம் சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னேன். ‘நிறைய ரத்தம் போயுள்ளது.

ரத்தம் ஏற்ற வேண்டும்’ என்று சொல்ல, அவருடைய ரத்த ‘குரூப்’ என்னுடையதாக இருந்ததால் ரத்தத்தையும் கொடுத்து காப்பாற்றினேன். நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். ஒரு விபத்து சாலையில் நடந்தால் நம்மால் முடிந்த உதவியோ அல்லது அவரது பாக்கெட்டில் முகவரி, செல்போன் இருந்தால் உரியவருக்குத் தெரிவித்து, அவருக்கு சிகிச்சைக்கு வழி செய்ய வேண்டும். ஆனால் பலர் நமக்கென்ன என்று அவரவர் வேலையை கவனித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். என் தோழியும் தன்னுடைய தவறுக்காக மிகவும் வருந்தினாள்.
- சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம்.

ரயில் பயணி ஒருவர் சிறிய லெதர் பையைத் தவற விட்டிருக்கிறார். அதனுள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்புக், பணம் அனைத்தும் இருந்திருக்கிறது. பாஸ்புக்கில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். அவர் செல்போன் எண்ணை மாற்றிவிட்டிருக்கிறார். அந்தப் பை எனது தந்தையின் பணி ஓய்வுக்காக வைத்த நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் கொடுத்தது.

அதில் எங்களது போன் நம்பர் அச்சிடப்பட்டிருந்தது. எனவே எங்களை காவல்துறை அதிகாரி தொடர்பு கொண்டார். அந்தப் பெயரில் யாரையும் எங்களுக்கு நினைவில்லை என்றோம். உடனே அவர் ‘உங்களிடம் வாட்ஸ்அப் இருக்கிறதா. அவரது பாஸ்புக்கில் உள்ள போட்டோவை அனுப்பி வைக்கிறேன்’ என்றார்.

போட்டோவை பார்த்தவுடன் எனது அம்மாவின் தோழியுடன் பார்த்த ஞாபகம் வந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டு, பையைத் தொலைத்தவரின் செல் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டோம். பையைக் காணாமல் பரிதவித்து நின்றிருந்த அவருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை.

* செல் நம்பரை அடிக்கடி மாற்றாதீர்கள்.
* மாற்றினால் அனைத்து ரெக்கார்டுகளிலும் அப்டேட் செய்யுங்கள்.

எங்களது அலுவலகத்திற்கு கிராமத்திலிருந்து படிக்காத ஒருவர் வந்தார். ஒரே தாளில் 2 பக்கங்களிலும் வருமாறு, ப்ளட் குரூப், செல்போன் எண், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்புக் முதல் பக்கம், ரேஷன் அட்டை அனைத்தையும் ஜெராக்ஸ் செய்து லேமினேட் செய்து வைத்திருந்தார். நல்ல ஐடியா என்று பாராட்டினேன். எல்லோரும் இதை முயற்சி செய்யலாமே?

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)