தலைநகரை உலுக்கும் உழவுப் பெண்கள்



-மகேஸ்வரி

விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். நாம உயிர் வாழத் தேவையான உணவை நேரம் காலம் பார்க்காமல், இரவு பகலாக, வெயிலிலும், மழையிலும், முழங்கால் அமுக்கும் சேற்றில் இறங்கி, பாம்புகளுக்கும், எலிகளுக்கும் நடுவில், நமக்கான உணவை விவசாயம் செய்யும்  நம் உழவர்கள் இன்று, “மழை தண்ணி இல்ல, பயிரெல்லாம் கருகிப்போச்சு, எங்க நிலமெல்லாம் தருசாக் கிடக்கு.

நாங்க வாழ வழியில்லை. விவசாயம் பண்ண நாங்க வாங்குன எங்க விவசாய கடன தள்ளுபடி பண்ணுங்க” என்று கடந்த 27 நாட்களைக் கடந்து, ஆளும் அரசாங்கத்தின் செவிகளை எப்படியாவது எட்டிவிட எண்ணி விதவிதமான போராட்டங்கள் மூலம் கவனம் ஈர்க்கின்றனர். தினம் ஒருவிதப் போராட்டம் என தொடர்கிறது அவர்களின் கூக்குரல்.

ஒரு நாள் அரை நிர்வாணக் கோலத்தில், மற்றொரு நாள் எலியை வாயில் கவ்வியபடி, அதற்கும் மறு நாள் தலைகீழாய் நின்று. அடுத்த நாள் பாதி தலை முடி பாதி மீசை, தலையை மழித்து, இன்னொரு நாள் தலைநகரின் தெருக்களில் கை கால்களைக் கட்டிக்கொண்டு உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்து, மனித மண்டை ஓடுகளை தொங்க விட்டு, விவசாயிகளை சடலங்களாகக் கிடத்தி என்று தங்களை வருத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமொரு நாள் கைகளை அறுத்து ரத்தத்தால் மோடி உருவத்தின் கால்களில் வடிய வைத்திருக்கிறார்கள். தொடரும் அத்தனை போராட்டங்களிலும், ஆண் விவசாயிகளுக்கு நிகராய் ஒரு சில பெண்களும் போராட்டக் களத்தில் முன்னிற்கிறார்கள். போராடுகிறார்கள். குரல் கொடுக்கிறார்கள்.

முதல் சிலநாள் பனி, அதைத் தொடர்ந்து அதீத வெயில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடாத மழை என இயற்கை தரும் அத்தனை இடர்களையும் பொறுத்துக்கொண்டு, தினம் ஒருவிதமான போராட்டத்துடன், தங்கள் உடலை வருத்திக் கொண்டு, தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி வீதிகளில் 27 நாட்களை கடந்து போராடும் விவசாயப் பெண்களிடம் பேசினேன்.

“என் பெயர் நாச்சம்மாள். எனக்கு வயது 61. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என் சொந்த ஊர். 27வது நாளா நான் இங்க இருக்கேன். எங்க பகுதிகள்ல மழை சுத்தமா இல்லம்மா. விவசாயம் செய்ய தண்ணிக்காக, போர் போட 3 லட்சம் பேங்குல கடன் வாங்கினோம். மழை இல்லாம போர்ல சுத்தமாக தண்ணி இல்லை. விவசாயம் படுத்துக்கிச்சு. எங்களால கடன திருப்பிக் கட்ட முடியலம்மா” என்றார்.

“இப்ப எங்க கடன் வட்டியோட சேர்த்து 7 லட்சத்துக்கும் மேல் இருக்குன்னு பேங்குல சொல்றாங்க. கடனை கட்டு இல்லைன்னா உங்க நிலம், வீட்டை ஜப்தி பண்ணுவோம்னு பேங்குல எங்களை மிரட்டுறாங்க. நாங்க என்ன பண்ணுவோம்? எங்களுக்கு வாழறதுக்கே வழி தெரியல. அதனால் எங்க கடனை தள்ளுபடி பண்ணுங்க ஐயான்னு கேட்டு என் குடும்பத்தை விட்டுட்டு வந்து, 25 நாளா இங்க தான் இருக்கேன்” என்று நம்மிடம் பேசினார் நாச்சம்மாள்.

ஒரு போராட்டத்தின்போது தன் கைகளை அறுத்து ரத்தத்தை பிரதமராக சித்தரிக்கப்பட்டவரின் கால்களில் ஊற்றினார் அவர். “நகை எல்லாம் அடகு வச்சாச்சு. தாலி கூட இல்ல. எங்களுக்கு வாழ வழி தெரியல. என்கூட போராட்டத்தில் இருந்த திருச்சி மாவட்டம் நாகமங்கலத்திலிருந்து வந்திருந்த ராஜலெட்சுமி அம்மா உடம்பு சரியில்லாமல் போயி ஊருக்குப் போனாங்க” என்றார். “ராத்திரி பகலா ரோட்டுலேதான் இருக்கோம்.

குளிக்கிறது, தூங்குறது, சாப்புடுறது எல்லாம் ரோட்லையும், நடைபாதையிலும்தான். காலைக் கடன்களை முடிக்க இங்குள்ள அரசு பொது கழிப்பிடத்தைதான் பயன்படுத்துகிறோம். இங்குள்ள நம் தமிழ் இளைஞர்கள் சிலர் சாப்பாடு கொண்டுவந்து தர்றாங்க. மத்தபடி பக்கத்துல உள்ள குருத்வாரா கோயில்ல சப்பாத்திதான் கிடைக்கிது. அது எங்களுக்கு பிடிக்கல. எங்களால அதை மெல்ல முடியலம்மா” என்றார் மிகவும் பரிதாபமாக.

தொடர்ந்து பேசிய முசிறி மாவட்டம் தாத்தாக்குடியிலிருந்து போராட்டத்தில் கலந்துகொண்ட ராஜம்மாள் “எனக்கு வயது 60. எனக்கு பையனில்ல. ஒரே பொண்ணுதான். அதுக்கு 4 குழந்தைங்க. அதில் ஒரு குழந்தையால நடக்க முடியாது. விவசாயத்திற்காக என் மக வீட்டுக்கு கடன் வாங்குனோம்.

என் மகளோடதான் இருக்கேன். வட்டியோட சேர்த்து கடன் தொகை இரண்டரை லட்சத்தை தாண்டிருச்சுன்னு பேங்குல சொல்றாக. எங்களால கட்ட முடியலம்மா. எங்க விவசாயக் கடனை அரசாங்கம் தள்ளுபடி பண்ணுனா நல்லா இருக்கும்” என்றார் குரல் தழுதழுக்க. போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திவரும் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசியபோது, “இந்தியாவில் உள்ள மொத்த விவசாயிகளின் கடன் வெறும் 72 ஆயிரம் கோடி.

அதில் தமிழக விவசாயிகளின் கடன் வெறும் 7000ம் கோடி மட்டுமே. ஆனால் லட்சம் கோடிகளில் கடன் பெற்றிருக்கும், மிகப் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் இந்த அரசு கடன் தள்ளுபடி செய்கிறது. 1970ல் வங்கி மேலாளரின் மாத ஊதியம் 150 ரூபாய். ஆனால் இன்று அவரின் மாத ஊதியம் 66000 ரூபாய். கிட்டத்தட்ட 440 மடங்கு உயர்ந்திருக்கிறது.

ஆனால் விவசாயிகளின் நிலை? எங்களின் கோரிக்கைகளாக பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி மற்றும் நீதித்துறை, வேளாண் துறை, உள்துறை அமைச்சர்களை சந்தித்து மனுவாக கொடுத்துவிட்டோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதிகளை தந்தனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், 14 வது பிரிவின் கீழ், பெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டோம்.

கடந்தவாரம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தள்ளுபடி செய்தால் போதாது, தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

60 வயதைத் தாண்டிய அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் 5000ம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஏற்கனவே கூறியுள்ள கோரிக்கைகளும் சேர்த்து ஏற்கப்படும்வரை டெல்லியில் எங்கள் போராட்டம் தொடரும்” என்கிறார் அய்யாக்கண்ணு.