உடலும் மனமும் ஆரோக்கியமா?



-திருத்துவராஜ்

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மனநல நிபுணர் வந்தனா கூறும் எளிய வழிமுறைகள்: “உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். நம் மனதினை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம் குடும்பத்துடனும், சமுதாயத்துடனும் ஒன்றிவாழ்ந்து, செய்யும் செயல்களில் தானும் திருப்தி அடைந்து மற்றவர்களையும் திருப்திபடுத்தி வாழ்பவர்களை மனநலத்துடன் வாழ்வோர் என்போம்.

மனமும் உடலும் சேர்ந்ததுதான் நல்ல மனநலம். உடல்நலம் பாதிக்கப்படும்போது நம் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றது. எண்ணங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் பிரச்னை, தாழ்வு மனப்பான்மை, நடத்தையில் மாற்றம், ஞாபகமறதி, அறிவுத்திறன், மனநிலையில் மாற்றம், பகுத்தறியும் திறன் பாதிக்கப்படுகிறது.

இவற்றால் மூளையில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும்போது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடல் பிரச்னை அல்லது மனப்பிரச்னை குழந்தை பருவம் ஆகட்டும் அல்லது தள்ளாடும் முதுமைப்பருவம் ஆகட்டும் எல்லோருக்கும் வரலாம். உடல் நோய் மனபலவீனத்தினால் வருவதுண்டு. அதுபோல மனநோய் உடல் பலவீனத்தினாலும் வருகிறது.

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் மனதளவிலும், சமுதாயத்திலும் திறம்பட செயல்பட முடியும். உடல் அளவில் ஏற்படும் மாற்றம் அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல் அல்லது குறைவாக உட்கொள்ளுதல், தூக்கப் பிரச்னை போன்றவை.  மனதளவில் ஏற்படும் பிரச்னை கவனமின்மை, விருப்பமின்மை, தனிமையை நாடுதல் போன்றவை. கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நமது இயல்பான மனநிலையை பராமரிக்க முடியும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். சமச்சீரான உணவை உட்கொள்ளும் முறையைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனதார ஈடுபடுத்திக்கொண்டு மனதை சந்தோஷமாக வைத்திருங்கள். ஏதாவது சமூக சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

இது ஒருவிதமான மனநிறைவைத் தரும். உங்களின் நம்பிக்கையான நபர்களிடம் உங்கள் மன எண்ணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள். மிதமான அளவில் அடிக்கடி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். வருடத்தில் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

விடுமுறை நாட்களை உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை உல்லாச பயணம் மேற்கொள்ளுங்கள். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, யோகாசனம், சமைப்பது, எழுதுவது என்று உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இவற்றைக் கடைப்பிடித்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும்”