வானவில் சந்தை



தங்கமும் பெண்களும்

சமீபத்திய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சில கல்லூரிப் பெண்கள் தங்கள் தாய் வீட்டிலிருந்து சீதனமாக என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது. விவாத அரங்கில் அவர்கள் தங்களது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த அம்மாக்களிடம் கார், வீடு, பணம், ஆடம்பரமான திருமண ஏற்பாடுகள் என்று பலவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் திருமணத்தன்று ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டுமென்றார்.

அதோடு தங்க நகைகளும் நூறு சவரன் நூற்றைம்பது சவரன் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒவ்வொரு பெண்ணின் கோரிக்கைப் பட்டியலிலும் நீக்கமற தங்கமே முதலிடத்தைப் பிடித்திருந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லைதான். இந்தியாவில் ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே கொஞ்சம் தங்கம் வாங்கப்படுகிறது. குழந்தைகள் வளர வளர தங்கத்தின் கொள்முதல் கூடிக்கொண்டே போகிறது. இந்தியப் பெண்கள் தங்கள் திருமணத்தின் பொருட்டு சிறிது சிறிதாகச் சேர்க்கப்படும் தங்கத்துடன் இணைந்தே வளர்கிறார்கள். 

2005 வாக்கில் நான் ஒரு பண்டக முன் ஒப்பந்தச் சந்தை (Commodities Futures Market) தரகு நிறுவனத்தில் ஒரு பகுத்தாய்வாளனாக (Analyst) இருந்தேன். தங்கம், வெள்ளி போன்றவைகளின் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கணிப்பதன் மூலம் வாடிக்கையாளருக்கு வர்த்தக லாபத்தை ஏற்படுத்த ஆலோசனை கூறுவதே ஒரு பகுத்தாய்வாளனின் பணி.

ஆய்வு இரு வகைப்படும். முதலாவது ஒரு பண்டகத்தின் அடிப்படைக் காரணிகளை (உற்பத்தி மற்றும் நுகர்வுத் தேவை சம்பந்தமானது) ஆராய்வது. எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதோடு நுகர்வு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதைக் கணக்கிட்டு பார்ப்பதன் மூலம் அடையும் முடிவு.

தேவை குறைந்து உற்பத்தி சீராக இருந்தால் விலை விழும். உற்பத்தி சீராக இருந்தும் தேவை கூடினால் விலை ஏறும். இரண்டாவது, தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis). நிரல் படம் (Charts) மற்றும் முந்தைய தரவுகளைக் (Historical Data) கொண்டு மென்பொருள் உதவியுடன் எதிர்கால விலைப் போக்கை (Price Trend) கணிப்பது.

அப்படி ஆராய்ந்த பகுத்தாய்வாளர் பலர் விரைவில் 1 அவுன்ஸ் (தோராயமாக 31 கிராம்) தங்கம், சர்வதேசப் பண்டகச் சந்தையில் 500 டாலரை தாண்டும் என்று முன்கூறுதல் (Forecast) செய்தார்கள். ஜிம் ரோஜர்ஸ் (Hot Commodities, Adventure Capitalist போன்ற புத்தகங்களை எழுதியவர்) போன்ற பெரும் முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒரு நீண்டகாலப் பண்டகச் சந்தை ஏறுமுகத்தை கணித்து முன்கூறியிருந்தார்கள்.

அதேபோல பல பண்டங்களும் (வெள்ளி, தாமிரம், கச்சா எண்ணெய் போன்றவை) விலை ஏறிக்கொண்டிருந்தன. முதன் முதலாக புதிய விலை உயர்வுகளைப் பார்த்தோம். 2006, 2007 காலகட்டத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறிக்கொண்டிருந்தது.

2005ல் தங்கம் ஒரு அவுன்ஸ் 500 டாலரைத் தாண்டியது. 2007ல் 800 டாலரைத் தாண்டியது. 2008ல் 1000 டாலர். 28 வருடங்களுக்கு முந்தைய உச்ச விலையான 850 டாலரை அப்போதுதான் தாண்டியது.

1978 வரை படிப்படியாக ஏறிக் கொண்டிருந்த தங்க விலை முதன்முறையாக 1979ல் 500 டாலரை தாண்டியது. 1980ல் 850 டாலரை தாண்டிய தங்கம் விலை 2008ல்தான் அதை மீண்டும் எட்டிப் பிடிக்கிறது. இடைப்பட்ட 27 வருடங்களின் உச்சபட்ச விலை சராசரி 442.12 டாலர்தான்.

தங்கமும் முதலீடும்

தங்கத்தின் நுகர்வு பெரும்பாலும் முதலீடு தொடர்புடையதாக இருப்பதும், பணத்துக்கு மாற்றாக இருப்பதும், வேறெந்தப் பண்டத்தையும் விடத்  தனித்துவமிக்க ஒன்றாக அதை ஆக்குகிறது. இந்தியாவிலோ தங்கம் மக்களின் உணர்வோடும் பிணைந்தது. கடந்த பத்து வருடங்களில், தங்கம் தொடர்ந்து அதன் விலையேற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் உலகப் பொருளாதாரம் பற்றி நீடிக்கும் அச்ச உணர்வே.

அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதாரச் சரிவு (Recession), ஐரோப்பிய நாடுகளின் (கிரீஸ், இத்தாலி மற்றும் பல) பொருளாதாரப் பிரச்னைகள், ஐரோப்பிய யூனியனிலிருந்தான இங்கிலாந்தின் விலகல், சீனப் பொருளாதாரத்தின் இறங்குமுகம் போன்றவை முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கையை அளித்தவாறே உள்ளன.

இது போன்ற நிலையற்ற தன்மை நிலவும்போது பெரும் பணம் தொழில் முதலீடுகளில் (பங்குச் சந்தை) இருந்து எடுக்கப்பட்டு தங்கத்தில் போடப்படும். தங்கமே அவர்கள் முன் உள்ள ஒரே பாதுகாப்பான மாற்று. சரியான திசை புலப்படும் வரை இது தொடரும். இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தஒரு முதலீட்டாளரும் தங்கத்தை பொதுவாக நகைகளாக வைத்திருப்பார்கள்.

வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு பழக்கம் இல்லை. அதனால் அவர்களது மொத்தச் சொத்தில் தங்கத்தின் பங்கு கணிசமாக இருக்கும். சொத்தோ வேறு முதலீடுகளோ இல்லாத குடும்பங்களில் கூட நகைகளாகச் சிறிது தங்கம் இருக்கும். தங்க நகையை ஒரு முதலீடாகக் கருதக் கூடாது.

உபயோகிக்க தேவையான அளவு நகைகளை வீட்டில் வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை வங்கி லாக்கரில் வைத்துப் பாதுகாக்கும் போது அதன் முதலீட்டு மதிப்பு பாதிக்கப்படுகிறது. நகைகளாக அல்லாது தங்கக் காசுகளாக வாங்கினாலும் பாதுகாப்பு பிரச்னை இருக்கத்தான் செய்யும்.

அதனால் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெண்கள், மொத்த முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மட்டும் சீரான இடைவெளியில் (மாதா மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போல) தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். அதையும் நகைகளாக வாங்காமல் தங்க சந்தைப் பரிவர்த்தனை நிதியில் (Gold Exchange Traded Fund) முதலீடு செய்வது நல்லது.

இது பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதைப் போல எளிதானது. நேரடியாக தங்கத்தை வாங்குவதை விடப் பாதுகாப்பானது. தேவைப்பட்டால் அன்றைய சந்தை விலையில் விற்றுவிட்டு வெளியேறும் வசதியும் கொண்டது. அனைத்தையும் தங்கத்தில் முதலீடு செய்ய முயலும் பெண்கள் ஒன்றை கேட்டுக் கொள்ள வேண்டும். அது அடுத்த பத்திருபது வருடங்களுக்கு தங்க முதலீடு என்ன விளைச்சலைக் கொடுக்கும் என்பதே. முந்தைய வரலாறு கண்முன்னே உள்ளது.

(வண்ணங்கள் தொடரும்!)