கிச்சன் டிப்ஸ்



தேங்காய்ப்பால் எடுத்து பிழிந்த சக்கையை தூக்கி எறியாமல், அதனை ஃப்ரீசரில் எடுத்து வைத்துக் கொண்டால், தேங்காய்ப் பூ சேர்த்து செய்யும் பொரியல் மற்றும் அரைத்து விட்ட சாம்பார் இவைகளுக்கு பயன்படுத்தினால் ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோயாளி களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். சுவை நன்றாக இருக்கும்.
- எஸ். மீனாட்சி, வேலூர்-632 009.

பண்டிகை பலகாரம் சாப்பிட்ட பின் வெறும் கடாயில் வறுத்த சீரகத்தை, கல் உப்புடன் பொடித்து, 1 ஸ்பூன் வாயில் போட்டு 1 டம்ளர் வெந்நீரில் பருகலாம் அல்லது இஞ்சி டீ போட்டும் பருகலாம்.
- சு.கெளரிபாய், பொன்னேரி.

ஒரு கைப்பிடி வில்வ இலைகளுடன் சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து இடித்து 2 லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி 1/4 லிட்டராக  வற்ற வைத்து, அதை வெவ்வேறு வேளைகளில் பகிர்ந்து சாப்பிடவும். எல்லா வகைக் காய்ச்சல்களும் நீங்கும்.
- ஆர். அஜிதா, கம்பம்.

வெள்ளரிப் பழத்துண்டுகள், தர்பூசணி, முலாம் பழத்துண்டுகளோடு சிறிது மோர், சர்க்கரை, பன்னீர் சேர்த்து ஜூஸ் தயாரித்தால் ருசியே தனிதான்.
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

வடாம் போட ஜவ்வரிசியை வேகவைத்து இறக்கும்முன் முற்றிய வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக உடைத்து கலந்து பொரித்தால் சுவை தூள்தான்.
- ஆர். மீனாட்சி, திருநெல்வேலி.

காயவைத்த ஆரஞ்சு தோலில் ஒரு துண்டை சேர்த்து தேநீர் தயாரிக்கும்போது உடன் சேர்த்தால் தேநீர் சுவையும் மணமும் கொண்டதாக இருக்கும்.

எந்த ரசம் செய்தாலும் அடுப்பிலிருந்து இறக்கும்போது பதினைந்து திராட்சைப்பழங்கள் இட்டு இறக்கினால், ரசத்தின் சுவை இருமடங்காகும். இது சத்துள்ள ரசம்.

மோர்க்குழம்பு செய்யும்போது ஐந்து மாம்பழத்துண்டுகளை இட்டு கொதிக்க வைத்து இறக்கினால், மிதமான இனிப்புச் சுவையுள்ள மோர்க்குழம்பு ரெடி.
- கே. ராஜேஸ்வரி, மணப்பாறை-621 306.

கோடை வெப்பத்தை தணிக்க, இட்லிக்கு மாவு அரைக்கும் போது இளநீர் அல்லது தர்பூசணிப்பழம் அல்லது வெள்ளரிப்பழத் துண்டுகளை சேர்த்து அரைத்து செய்தால் சுவையாக இருக்கும்.
- சு. கண்ணகி, மிட்டூர்.

சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து, தேனீ கொட்டிய இடத்தில் போட்டால், சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
- கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

இனிவரும் கோடைக்காலத்தில் கீழாநெல்லி இலையை அரைத்து வாரம் 3 முறை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பாதிப்புகள் வராது.
- நா. செண்பகவள்ளி, பாளையங்கோட்டை.

வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை கொஞ்சம் வதக்கி பின் பஜ்ஜி ெசய்தால் வெங்காயம் வட்டம் பிரிந்து வராது.
- ஜி. விஜயலெட்சுமி, கும்பகோணம்-612 001.

கடுக்காயை வலிப்பு நோய் வருபவர்களுக்கு தினமும் எலுமிச்சம் பழச்சாறுடன் கொடுத்து வர நோய் கட்டுப்படும்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம், குளிர்பானம் குடிப்பதால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அந்த மாதிரி ஏற்படும் போது, தூதுவளைப் பழங்களை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) வாங்கி, அதில் குண்டூசியால் துளைகள் போட்டுத் தேனில் ஊறவிடவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஊறிய பழங்களை இரண்டு, மூன்று எடுத்து தேனுடன் சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கி விடும்.
- எஸ். வளர்மதி, கொட்டாரம் - 629 703.