குரல்கள்



-கி.ச.திலீபன்

நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 3200க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுவிலக்கு என்பது இங்கு முக்கிய அரசியல் கருவியாக இருக்கிறது. படிப்படியான மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்லித்தான் அதிமுக ஆட்சி அமைத்தது. பூரண மதுவிலக்குக்கான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதா? பல தரப்பட்ட தோழிகளிடம் இது குறித்துக் கேட்டேன்...

நந்தினி, மதுவிலக்குப் போராளி
இந்திய தண்டனை சட்டம் 328ன் படி மதி மயக்கம் செய்யக்கூடிய, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்குவதும் விற்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படியொரு குற்றச் செயலை அரசே மேற்கொண்டு வருகிறது என்பது எத்தனை அவலம். பூரண மதுவிலக்கு கோரி பல போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். நீதிபதிகளை சந்தித்து இது குறித்துப் பேசியிருக்கிறோம்.

பூரண மதுவிலக்குதான் தீர்வாக இருக்குமே தவிர நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றுவது எந்த விதத்திலும் பயன் தரக்கூடியதாக இருக்காது. நெடுஞ்சாலையோரம் இருந்த கடைகளை குடியிருப்புப் பகுதியை நோக்கித்தான் இடமாற்றம் செய்கின்றனர். இது மேலும் பல சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். மதுக்கடை அமைப்பதற்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது தடியடி நடத்துகிறார்கள். இவையெல்லாம் கண்டிக்கத்தக்கது. பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வு! அந்தத் தீர்வை நோக்கி நாம் போராடுவோம்.

சூர்யபிரபா, வடிவமைப்பாளர்
நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இது முதற்கட்டம்தான். அடுத்த கட்ட நடவடிக்கையாக  பள்ளி, மருத்துவமனை என பெண்கள், குழந்தைகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக சொல்லியிருக்கிறது.

அதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விற்பனை மூலம் ஈட்டும் வருவாயை வேறு வழிகளில் ஈட்டுவதற்கான மாற்று குறித்து யோசித்து செயல்படுத்த வேண்டும். ஒரு அரசு மதுக்கடையை நடத்துவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதற்கு என்ன சமாதானம் சொன்னாலும் சரி... அதற்காக எந்த காரணத்தை முன் வைத்தாலும் அதனை ஒப்புக்கொள்ள முடியாது.

லதா அருணாச்சலம், இல்லத்தரசி
இனி நெடுஞ்சாலைகளில் பெண்கள் அச்சமின்றி பயணம் செய்ய முடியும். மதுவிலக்கை சாத்தியப்படுத்த வேண்டுமானால் மது எளிதில் கிடைப்பதைத் தடுக்க வேண்டும். வாகன ஓட்டுநரின் கண் முன்னேயே மதுக்கடைகள் இருந்தால் அவர்களுக்கு குடிக்கத்தான் தோன்றும். குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பல விபத்துகளை தடுக்கும் என்று சொல்லலாம். ஆனால் இதன் எதிர்வினையாக குடியிருப்புப் பகுதிக்குள் மதுக்கடையை கொண்டு வரப்பார்க்கிறார்கள். மக்கள் தரப்பிலிருந்து இதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மக்கள் போராட்டத்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியப்படும்.  

அர்ச்சனா, இல்லத்தரசி
எந்த மாற்றமும் ஒரே அடியாக நடக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் நாம் அப்படியாகத்தான் பார்க்க வேண்டும். நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு நல்ல விளைவு இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கடைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கவே கூடாது. அப்போதுதான் பயமில்லாமல் பெண்கள் நடமாட முடியும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் முன்நின்று போராடியதைப் போல் மதுவிலக்குக்காகவும் போராடினால் நிச்சயம் மாற்றம் வரும். வித்யா விஜயராகவன், கல்லூரி மாணவி நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.

இரவு நேரங்களில் மதுக்கடையை தாண்டிச் செல்வதற்கு பயப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. இப்போது நெடுஞ்சாலையில் அந்த பயம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் விபத்து குறித்த பயமும் குறையும்.

அது மட்டும் இல்லாமல் குடிப்பவர்கள் சிறுநீர் கழித்து, வாந்தி எடுத்து அந்த சுற்றுப்புறத்தையே நாசப்படுத்தியிருப்பார்கள். கடைகளின் எண்ணிக்கை குறையும்போது அது போன்ற சுற்றுப்புற சூழலும் குறைந்து போகும். இதன் மூலம் ஆண்களை விட பெண்களுக்கு பல நன்மைகள் இருக்கின்றன. இதற்கு அடுத்த கட்டமாக பூரண மதுவிலக்கை நோக்கியதாக நமது குரல் எழும்ப வேண்டும்.